Header Ads



நளீமிய்யா பழைய மாணவர் அமைப்பின் கத்தார், கிளையினுடைய கைகொடுத்தல் திட்டம்


நளீமிய்யா பழைய மாணவர் அமைப்பின் கத்தார் கிளைக்கான வருடாந்த நிகழ்ச்சி நிரலில் ஒரு நளீமி எழுத்தாளருக்குக் கைகொடுத்தல் - Support a Naleemi Author - என்ற திட்டத்தின் அடிப்படையில் ஓர் எழுத்தாளர் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். இந்தத் திட்டத்தில் நளீமிய்யாவின் கற்கையை முழுமை செய்த, இடைநடுவில் நிறுத்திக்கொண்ட எவரும் நிபந்தனைகளுக்கு உட்பட்ட வகையில் உள்வாங்கப்படுவர். நூலொன்றிற்கான அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில், அதனை வெளியிடுவதில் எழுத்தாளர் அல்லது மொழிபெயர்ப்பாளர் எதிர்நோக்கும்  பொருளாதார சிக்கல்களை நிவர்த்தி செய்வதற்காகவே இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே வெளியீட்டுக்குத் தயாரான அந்தப் படைப்பு சொந்தமாகவோ அல்லது தழுவலாகவோ இருக்கலாம். முற்றிலும் இலாப நோக்கமற்ற, அதேவேளை குறித்த எழுத்தாளர் தனது அடுத்த படைப்பிற்கான பொருளாதார உதவியை இதன் மூலம் பெற்றுக்கொள்வதே எமது அடிப்படை நோக்கமாகும்.

அந்தவகையில் கடந்த வருடம் அஷ்-ஷெய்க் றிஷாத் நஜிமுதீன் அவர்களது ‘அல் குர்ஆனைப் புரிந்து கொள்ளல் - சில நுழைவாயில்கள்’ என்ற நூல் வெளியீடு செய்யப்பட்டது. அந்த வரிசையில் இந்த வருடம், ஜாமிஆ நளீமிய்யாவின் சிரேஷ்ட விரிவுரையாளர்களுள் ஒருவரான உஸ்தாத், அஷ்-ஷெய்க். ஸெய்னுல் ஹூஸைன் - நளீமி - அவர்களது ‘இஸ்லாமிய அரசில் மக்கள் சுதந்திரம்’ என்ற மொழிபெயர்ப்பு நூலின் வெளியீட்டு விழா கடந்த 11/10/2019 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை, ஸ்டபர்ட் ஶ்ரீலங்கன் பாடசாலையில் இடம்பெற்றது.

இந்த விழாவின் நிகழ்ச்சி நிரல்களை அஷ்-ஷெய்க் பாஸில் - நளீமி - அவர்கள் ஒருங்கிணைத்து நடாத்த, அஷ்-ஷெய்க் நஸ்றீ - நளீமி - தலைமை தாங்கியதோடு தனது தலைமையுரையில், தூங்கி எழுந்து இரு கைகளையும் கழுவுதல் முதல் இந்த உலகை வளப்படுத்தல், வாழ்க்கை ஆதாரங்களை நெறிப்படுத்தல், அந்த உலகத்தை நிர்வகித்தல் என பரந்த ஆளுமைகளை உருவாக்கும் பணிகளில் அறிவைப் போதித்த அற்புத மார்க்கம் இஸ்லாம். எழுந்தவுடன் கைகளைக்கூட கழுவுவதுபற்றி அறியாத ஓர் அறியாமைச் சமூகத்தை ‘வாசிப்பீராக’, ‘பேனா மற்றும் அவை எழுதுகின்றவற்றின் மீதும் சத்தியமாக’ எனப் போதித்து, அறிவால் மாத்திரமே இந்த உலகு ஆளப்பட முடியும் எனும் அத்திபாரத்தை இட்ட மார்க்கம் இஸ்லாம் என்பதை நினைவுபடுத்தி, அறிவால் ஆளப்படும் அப்படியான ஓர் உலகை ஆட்சி செய்யும் ஓர் அரசில் வாழும் மக்களின் சுதந்திரம் எப்படி இருக்க வேண்டும் என்ற மொழிபெயர்ப்பு நூலை எழுதிய எமது மதிப்பிற்குரிய ஆசானின் முயற்சியில் பங்கு கொள்வதில் பேரானந்தம் அடைகிறோம் என்று கூறினார். 

அடுத்ததாக நூல் அறிமுகத்தை வழங்கிய அஷ்-ஷெய்க் நௌஷாத் - நளீமி - அவர்கள் அறபு மொழியிலிருந்து அச்சொட்டாக மொழி பெயர்ப்பு செய்திருக்கும் உஸ்தாத் ஸெய்னுல் ஹூஸைன் அவர்ளது இந்த முயற்சி பாராட்டத்தக்கது. எங்கள் தேசம் பத்திரிகையில் தொடராக எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பான இந்த நூல் அவை பிரசுரிக்கப்பட்ட காலத்தை சரியாக குறிப்பிடாதபோதும், அதனை தமிழ் வாசகர்களுக்கு சரியாக கொண்டு சேர்த்திருந்தால் நிச்சயமாக ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதல் நடந்திருக்காது என உறுதியாகக் குறிப்பிட்டார். அத்தோடு, விமர்சனம் என்ற வகையில் இந்த அழகிய படைப்பில் காணப்படும் அச்சுப் பிழைகளைக் காயங்களாகச் சுட்டிக்காட்டினார்.

அடுத்ததாக இவ்விழாவின் முக்கிய நிகழ்வான முதற் பிரதி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. 

விழாவின் அடுத்த அம்சமாக இந்நிகழ்வு பற்றிய கருத்துக்களை அறிவதற்காக முதற் பிரதிகளைப் பெற்றுக்கொண்ட விஷேட அதிதிகள் அழைக்கப்பட்டார்கள்.   அந்தவகையில், கத்தார் வாழ் இலங்கை உலமாக்களுக்கான அமைப்பின் தலைவர், அஷ்-ஷெய்க். அவுன் - இஸ்லாஹி, இலங்கை முஸ்லிம் அமைப்புகளுக்கான சம்மேளனத்தின் தலைவர், சகோ. ஹாஸிம் ஹம்ஸா, முன்னாள் தலைவர், சகோ. அமீருத்தீன் மௌலானா போன்றோர் தாமாகவே முன்வந்து, முறையே, 

- பொதுவாக பழைய மாணவர்கள் அமைப்புகள், தமது பாடசாலைகளுக்கு பொருளாதார ரீதியாக உதவும் திட்டங்களேயே அடிப்படையாகக் கொண்டிருக்கும். அப்படியிருக்கையில், நளீமிய்யா பழைய மாணவர்கள் அமைப்பின் இத்தகைய காத்திரமான பணி பாராட்டத்தக்கது. 

- நளீமிக்களது பங்களிப்பை நாம் பரவலாகப் பார்த்து வருகிறோம், என்றாலும் இன்னும் குறைகள் இருக்கின்றன. சமூகத்தை தலைமை தாங்குவது மட்டுமல்ல, களத்திலிருக்கும் இடைவெளிகளை நிரப்பவும் முன்வர வேண்டும்.

- இந்த நேரத்தில் முதலில் நளீம் ஹாஜியார் அவர்களை ஒரு முறை நினைவில் வைத்துக்கொள்வோம். ஏனெனில் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியில் மகத்தான பங்களிப்பை செய்தவர்களுள் முக்கியமானவர். அத்தோடு, மொழிப் புலமையுள்ள நளீமிக்கள் காலத்துக்குப் பொருத்தமான, தேவையான நூற்களை இனங்கண்டு மொழி பெயர்ப்பு செய்யும் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்று தமது கருத்துக்களைக் கூறிச் சென்றனர்.

இறுதியாக, அஷ்-ஷெய்க் பாஸில் - நளீமி அவர்களது நன்றியுரையோடு எமது ‘இஸ்மாமிய அரசில் மக்கள் சுதந்திரம்’ என்ற நூல் வெளியீட்டு  விழா, சரியாக மாலை 09.30 மணியளவில் துஆவுடன் இனிதே நிறைவு பெற்றது.

dr.jmnasree

No comments

Powered by Blogger.