Header Ads



மகிந்த ஓய்வுபெறும்போது, பொதுஜன பெரமுன கட்சி மூடப்படும் - சஜின்வாஸ்

ஊடகவியலாளர்களுக்கு கேள்விகளைக் கேட்கும் சந்தர்ப்பத்தை மறுத்துவருகின்ற ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவினால் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு வழங்கப்படும் என்று கேள்வியெழுப்பபட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சஜின்வாஸ் குணவர்தன இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெற்றவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அரசியல் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிடும் என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதசவிற்கு ஆதரவு கோரி அம்பலாங்கொடையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“முன்னாள் அரசாங்கத்தில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியின் வலது கரமாக இருந்த என்னை அவர் ஒரு திருடனாக சித்தரித்து அழுத்தங்களை மேற்கொண்டு இறுதியாக எனக்கான வேட்பு மனு சந்தர்ப்பத்தை தேர்தலின்போது வழங்கவில்லை.

நாமல் ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்சவின் நோக்கத்திற்காகவே அவர் அப்படி செய்தார். அது எனது தனிப்பட்ட விடயம் என்றாலும் இன்று பகிரங்கப்படுத்துகின்றேன்.

அப்படி எனக்கே அநீதி செய்தவர்களுக்கு என்னதான் செய்யமுடியாது? எதிர்காலத்தில் இந்த நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாட்டின் தலைமைத்துவத்தை யாரால் வகிக்க முடியும் என்பது பற்றி நான் சிந்தித்தேன்.

பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றை எடுத்து சிந்தித்தால், சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.

அக்கட்சியிலுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று பொதுஜன முன்னணியுடன் இணைந்துவிட்டார்கள். ஆனால் சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் அனைவருமே இன்று எம்முடன் இருக்கிறார்கள்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அனைத்து தீர்மானங்களும், செயற்பாடுகளும் மகிந்த ராஜபக்சவின் பேரில் காணப்படுகின்றன. அக்கட்சியின் அனைத்து வேட்பாளர்களுக்கும் மக்கள் வாக்களிப்பது மகிந்த ராஜபக்சவின் முகத்திற்காகவே ஆகும்.

ஆகவே அவர் அரசியலிலிருந்து ஓய்வுபெறும்போது கட்சி மூடப்படும். மகிந்தவுக்கு வழங்கும் கௌரவத்தை மக்கள் பசில், நாமல் ராஜபக்சவுக்கு வழங்கமாட்டார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கே இந்த நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும். கடந்தவாரம் ஊடக சந்திப்பை கோத்தபாய நடத்தியபோது என்ன நடந்தது என்பதை அவதானித்தோம்.

அதன் பின்னர் ஊடக சந்திப்பில் பேசிய டளஸ் அழகப்பெரும, கோத்தபாயவின் கருத்துக்களை செவிமடுக்குமாறும் கேள்விகளைக் கேட்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

அதுதான் அவர்கள் ஆட்சிக்கு வந்தபின்னரும் வழங்கும் ஊடக சுதந்திரமா? எனக்கும் பல்வேறு அச்சுறுத்தல் காணப்படுகின்றது. திருடர்கள் என்று என்னை ராஜபக்சவினர் வர்ணிக்கின்றனர்.

இருப்பினும் இந்த தேர்தலில் ஒரு குடும்பத்தை காப்பாற்றுவதா அல்லது நாட்டின் எதிர்காலத்தை காப்பாற்றுவதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.