Header Ads



முஸ்லிம் சமூகம் நிதானமாகவும், புத்திசாதுரியமாகவும் நடந்து கொள்ள வேண்டும்

இலங்கைத் தேசம் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை எதிர்நோக்கியுள்ள நிலையில், முஸ்லிம் சமூகம் மிகவும் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் வாக்களிப்பின் ஊடாக உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் சிந்தித்து செயலாற்ற வேண்டும் எனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வழிகாட்டல்களை வழங்கும் வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி  ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அது தொடர்பான பிரசாரப் பணிகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை மையப்படுத்தி பல்வேறு கட்சிகளும் தமது பிரசாரங்களை முன்னெடுத்துள்ளன.

முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் தேசிய கட்சிகளில் அங்கம் வகிப்போரும் சுயேட்சையாக களமிறங்கியுள்ளோரும் தத்தமது தரப்புகளை நியாயப்படுத்தும் வகையிலான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். இது அவர்களது ஜனநாயக உரிமை என்றபோதிலும்,   தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்போரும் அவர்களது ஆதரவாளர்களும் நாட்டின் சட்டத்தை மதித்தும் இஸ்லாமிய வரையறைகளை மீறாத வகையிலும் தமது தேர்தல் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.

அத்துடன் அரசியல்வாதிகளும் அவர்களது ஆதரவாளர்களும் சமூக வலைத்தளங்கள் ஊடாக முரண்பாடுகளைத் தூண்டும் வகையிலான கருத்துக்களை முன்வைப்பதை அவதானிக்க முடிகிறது. இவை சமூகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளமை கவலைக்குரியதாகும். அந்த வகையில் சமூகத்தைப் பிளவுபடுத்தும் வகையிலான கருத்தாடல்களிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் சகலரையும் வினயமாக வேண்டிக் கொள்கிறோம்.

ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதலின் பின்னர் நடைபெறும் தேசிய மட்ட தேர்தல் என்ற வகையில், இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத கருத்துக்களும் பிரசாரங்களும் மேலோங்கியிருப்பதை அவதானிக்க முடிகிறது. இனவாத சக்திகள் முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டும் விதத்தில் கருத்துக்களை வெளியிட்டாலும் உணர்ச்சிவசப்படாது அவற்றை எதிர்கொள்வதில் முஸ்லிம் சமூகம் நிதானமாகவும் புத்திசாதுரியமாகவும் நடந்து கொள்ள வேண்டும். 

வாக்களிப்பது நமது ஜனநாயக உரிமை மட்டுமன்றி, இஸ்லாமிய நோக்கில் அது ஒரு அமானிதமும் கடமையும் சாட்சியமளித்தலுமாகும். அந்த வகையில் வாக்குரிமையை துஷ்பிரயோகம் செய்யாது, சமூக நலனை மையப்படுத்தி தமது வாக்குகளை அளிக்க ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.

அந்தவகையில்  நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கவுள்ள இத் தேர்தலில் எமது வாக்குகளை முறையாக பயன்படுத்த முன்வருவதுடன் தேர்தல் முடிவுகள் நாட்டிற்கும் சமூகத்திற்கும் நன்மைபயக்கும் வகையில் அமைய வேண்டும் என  பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் வேண்டுகோள்விடுக்கிறோம்.

No comments

Powered by Blogger.