Header Ads



சந்திரிக்கா இன்று நாடு திரும்புகிறார் - கோத்தாவுக்கு எதிராக களத்தில் குதிக்கிறார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான அணி முடிவெடுத்துள்ளதுடன், எதிர்வரும் ஐந்தாம் திகதி அதுதொடர்பிலான விசேட அறிவிப்பை வெளியிடவும் தீர்மானித்துள்ளனர். வெளிநாட்டிலிருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று -27- நாடுதிரும்பவுள்ள  நிலையில், சில தீர்மானமிக்க கலந்துரையாடல்களை கொழும்பில் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

கொழும்பு கிராண்ட் ஒரியன்ட் ஹோட்டலில் நேற்று முன்தினம் குமார வெல்கம தலைமையில் நடைபெற்ற  சந்திப்பில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக இக்கூட்டத்தில் கலந்துகொண்ட கொழும்பு மாநகர சபை உறுப்பினர் உமா சந்திரபிரகாஷ் தெரிவித்தார்.

 “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆரம்பம் முதலே தனித்தே அனைத்து தீர்மானங்களையும் எடுத்துவந்தது. சு.கவின் ஒத்துழைப்பு அவசியமில்லையென்பதை கருதியே அவர்களது அனைத்து நடவடிக்கைகளும் அமைந்திருந்தன. இந்த விடயங்கள் தொடர்பில் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோருடன் நாம் தொடர்ச்சியாக கலந்துரையாடி வந்ததுடன், சு.கவை பாதுகாக்க தோல்வியடைந்தாலும் தனித்து வேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே அடிமட்ட தொண்டர்கள் முதல் உயர்மட்டம்வரை அனைவரும் இருந்தனர்.

அதற்கு செவிசாய்த்திருந்தவர்கள் இறுதி தருணத்தில் எவருடனும் கலந்துரையாடாது பொதுஜன பெரமுனவுடன் உடன்படிக்கையை கைச்சாத்திட்டிருந்தனர். இந்த உடன்படிக்கை தொடர்பில் எவ்வித தெளிவூட்டல்களும் அடிமட்ட தொண்டர்களுக்கு வழங்கப்படவில்லை.

அடுத்துவரும் பாராளுமன்ற, மாகாண சபை தேர்தல்களில் எவ்வாறு போட்டியிடுவதென எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

அதன் காரணமாக சு.கவை பாதுகாக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையில் அணியொன்றை அமைத்துள்ளோம்.

எமது முதலாவது இலக்கு கோட்டாபய ராஜபக்ஷவை தோற்கடிப்பதாகும். அதற்கான அனைத்து வேலைகளும் செய்யப்படும். தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அபிலாஷைகளை பாதுகாக்கும் வகையிலேயே கோட்டாவுக்கு எதிரான நடவடிக்கையை நாம் எடுக்கவுள்ளோம்”- என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

1 comment:

  1. Time is running out. Why wait till November 5th? There won’t be enough time to campaign against Gota if you wait till November 5th. Start right away.

    ReplyDelete

Powered by Blogger.