Header Ads



முஸ்லிம் சமூகத்திற்காக UNP குரல் கொடுக்கவில்லை, கோத்தபாய சிறுபான்மை சமூகத்தை புறம்தள்ளமாட்டார்

கோத்தபாய சிறுபான்மை சமூகத்தை புறம்தள்ளமாட்டார் என்பதில் எனக்கு பாரிய நம்பிக்கை இருக்கிறது என முன்னாள் பிரதி அமைச்சரும், வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று -23- இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவிடம் சிறுபான்மை சமூகம் சார்ந்து, பல்வேறு கோரிக்கைகளை நாம் முன் வைத்துள்ளோம். அதில் முக்கியமாக சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு, மத சுதந்திரம் உறுதிப்படுத்தபட வேண்டும் என்பதை சுட்டிகாட்டியதுடன், ஏனைய மாகாணங்களை போல வடமாகாணத்திலும் அபிவிருத்திகள் இடம்பெறவேண்டும் என்பதனையும் எடுத்து கூறியுள்ளோம். அவ்வாறான விடயங்களை பூர்த்திசெய்து தருவதாக எமக்கு அவர் உறுதி மொழி கூறியுள்ளார்.

தற்போது சஜித் பிரேமதாசவை எந்த நிபந்தனைகளும் இன்றி ஆதரிப்பதாக சிறுபான்மை கட்சிகள் தெரிவித்துள்ளன. காலி முகத்திடலில் அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டத்தில் சிறுபான்மை தலைவர்கள் பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கூட வழங்கப்படவில்லை. இது தான் தற்போதைய நிலமை. அவ்வாறிருக்கையில் கோத்தபாயவை ஒரு இனவாதியாக முத்திரை குத்த அனைவரும் முனைந்து வருகின்றனர்.

சஜித் பிரேமதாசவிற்கு தான் சிறுபான்மை சமூகத்தின் வாக்குகள் கிடைக்கும் என்பதான மாயை தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள வாக்களிப்பு அனைவருக்கும் உண்மையை உணர்த்தும்.

வடக்கில் பிரிந்திருந்த தமிழ்கட்சிகளை ஒன்றிணைத்து பல்வேறு கோரிக்கைகளை தயாரிப்பதற்கு இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி வரவேற்ககூடியது.

எனினும் அந்த கோரிக்கைகளை ஏனைய கட்சிகள் ஏற்றுக்கொள்வார்களா என்பதில் பாரிய பிரச்சினைகள் இருக்கிறது. இது பல்லின சமூகம் வாழும் நாடு, ஒரு பகுதியால் தயாரிக்கபட்ட அறிக்கையை ஏற்றுக்கொண்டால் மறுபகுதியால் கிடைக்கும் வாக்கை இழப்பதற்கு அவர்கள் முன்வரமாட்டார்கள் என்பது எனது கருத்து.

சிறுபான்மை சமூகத்தின் வாக்குகள் தேவையில்லை என்று கோத்தபாய கூறியதாக எனக்கு தெரியவில்லை. அவர் சிங்கள மொழியிலே பேசுவதை திரிபுபடுத்தி இங்கே கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றது.

2010 ஆம் ஆண்டு தேர்தலில் போரை வழிநடத்திய சரத் பொன்சேகாவிற்கு தமிழ்மக்கள் வாக்களிக்க முடியுமானால். கோத்தபாயிவிற்கு ஏன் வாக்களிக்கமாட்டார்கள் என்று எண்ணுகின்றனர். அனைத்து கட்சியிலும் இனவாத கருத்துக்களை கூறும் பிரதிநிதிகள் இருக்கிறார்கள்.

அண்மையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் கூட முஸ்லிம் சமூகத்திற்காக ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள பெரும்பாலோனோர் குரல் கொடுக்கவில்லை. அந்த சமூகத்தை சார்ந்த அமைச்சர்கள் தமது பதவிகளில் இருந்து விலகியே மக்களிற்கு ஏற்படவிருந்த அழிவினை தடுத்தார்கள்.

தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கூட ஆதரவாக கருத்து தெரிவிக்கவில்லை. அரசியல் வாதிகள் தமது சமூகத்தின் வாக்குகளை பெறுவதற்காக தான் இவ்வாறான சூழ் நிலைகளை பயன்படுத்துகின்றார்கள் என்பதே எனது கருத்து.

போரின் பின்னரான 2015 ஆம் ஆண்டு வரை வடக்கில் இடம்பெற்ற அபிவிருத்தியிலும் பார்க்க 2015 ற்கு பின்னர் தமிழ் கூட்டமைப்பு ஆளும் தரப்பில் இருக்கும் போது வடக்கில் இடம்பெற்ற அபிவிருத்திகளிற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை யாவரும் அறிவர்.

எனவே ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய சிறுபான்மை சமூகத்தை புறம்தள்ளமாட்டார் என்பதில் எனக்கு பாரிய நம்பிக்கை இருக்கிறது என்றார்.

ஊடக சந்திப்பில் வவுனியா நகரசபை உபதவிசாளர் சு.குமாரசாமி, பிரதேசசபை உபதவிசாளர் மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.