Header Ads



சோறு சாப்பிட ஆசைப்பட்டால் அன்னம் சின்னத்திற்கு, வாக்களித்து சஜித்தை ஜனாதிபதியாக்குங்கள்

நிவாரணம் கோரி போராடிய மக்களுக்கு மஹிந்த அரசாங்கம் துப்பாக்கி தோட்டாக்களால் பதிலளித்தாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெடி குண்டுகளை உணவாக உட்கொள்ள மீண்டும் வாய்பளிப்பதா? அல்லது தற்போதுள்ள சூழலை போன்று சோறு சாப்பிடுவதற்கு வாய்பளிப்பதா? என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டார். 

லக்கலையில் இன்று (19) இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே பிரதமர் இதனை கூறினார். 

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர், கோட்டாபய ராஜபக்ஷ புதிய நாடு ஒன்றை உருவாக்க போவதாக கூறுகின்றார். 

சுமார் 10 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்த ராஜபக்ஷர்களால் புதியதொரு நாட்டை உருவாக்க முடியாமல் போனது. ஆகவே தற்போது மீண்டும் புதிய நாட்டை உருவாக்க போவதாக கூறுவது எவ்வாறு? 

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆட்சி செய்த விதத்தை போன்றதொரு ஆட்சியை நடத்தவே அவர்கள் மீண்டும் அரசாங்கத்தை தருமாறு கேட்கினறனர். 

தமது முன்னைய 10 வருட ஆட்சியில் பொருட்கள் சேவைகளின் விலையை குறைத்து மக்களுக்கு நிவாரணம் அளிக்காதவர்கள் தற்போது அவற்றை செய்வதாக கூறுவது எவ்வாறு? 

தற்போதைய அரசாங்கம் 2015 இல் ஆட்சிக்கு வந்தபோது பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 162 ரூபாவாக இருந்தது. அதேபோல் அன்று டீசல் லீட்டர் ஒன்றின் விலை 118 ரூபாவாக காணப்பட்டது. ஆனால் இன்று 104 ரூபா. அன்று மண்ணெண்ணை  லீட்டர் ஒன்றின் விலை 110 ரூபா இன்று 90 ரூபாவாகும். 

அதேபோல் அன்று சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 2650 ரூபாவாக காணப்பட்டது இன்று அதன் விலை 1493 ரூபா, அன்று பருப்பு ஒரு கிலோ 240 ரூபாவாக இருந்ததுடன் இன்று 120 ரூபாவாக அது குறைந்துள்ளது. அதேபோல் அன்று 400 கிராம் பால்மா பைக்கற்றின் விலை 410 ரூபாவாக காணப்பட்டது இன்று 345 ரூபாவாக குறைந்துள்ளது. சீனி அன்று 120 ரூபாவாக காணப்பட்ட நிலையில் இன்று அதன விலை 100 ரூபாவாகும் டின் மீன் அன்று 275 ரூபாவாக காணப்பட்டதுடன் இன்று அதன் விலை 190 ரூபாவாக காணப்படுகின்றது. 

ராஜபக்ஷ அரசாங்கம் அன்று எரிப்பொருள் விலை ஏற்றத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய சிலாபம் அந்தோனி என்பவர் மீது துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்தது. 

சம்பள உயர்வை வலியுறுத்தி போராட்டம் நடத்திய ரொசேன் சானக்க மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தி அவரை கொலை செய்தனர். அதேபோல் குடி நீர் கேட்டு போராடிய ரத்துபஸ்வல மக்கள் மீதும் துப்பாக்கி பிரயோகம் நடத்தினர். 

அதற்கு பதிலாக 2015 ஆம் ஆண்டு நாம் மக்களுக்கு சுதந்தரம் வழங்கினோம். அன்று துப்பாக்கி சூட்டை உட்கொண்டதற்கு பதிலாக நாம் சோறு உண்ணும் யுகத்தை ஏற்படுத்தினோம். 

அதனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெடி குண்டுகளை உணவாக உட்கொள்ள மீண்டும் வாய்பளிப்பதா? அல்லது தற்போதுள்ள சூழலை போன்று சோறு சாப்பிடுவதற்கு வாய்பளிப்பதா? என்பதை தீர்மானிக்க வேண்டும். 

சோறு சாப்பிடுவதற்கு ஆசைப்பட்டால் அன்னம் சின்னத்திற்கு வாக்களித்து சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக தெரிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.