Header Ads



இம்முறை தேர்தல் மிகவும் அமைதியாக, மோசடிகள் அற்றதாக இருக்கும் - ஜனாதிபதி

பல சவால்களுக்கு மத்தியிலும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகமான தேர்தல் முறையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல இலங்கைக்கு முடிந்துள்ளமை உலக ஜனநாயக நாடுகளில் பெரும் பாராட்டை பெற்றுள்ளதாக நெதர்லாந்து வெளிவிவகார அமைச்சர் ஸ்டெப் பிலோக் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று -19- சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நெதர்லாந்து வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதியை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று முற்பகல் சந்தித்தார்.

இலங்கைக்கும், நெதர்லாந்துக்கும் இடையில் இருத்தரப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள் தொடர்பாக இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தான் நடு நிலையாக செயற்படுவதாக ஜனாதிபதி, நெதர்லாந்து அமைச்சரிடம் கூறியுள்ளார்.

மேலும் இம்முறை தேர்தல் மிகவும் அமைதியான, ஜனநாயக மற்றும் மோசடிகள் அற்ற தேர்தலாக இருக்கும் என தன்னால் உறுதிப்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் மற்றும் முப்படையினர் தனது பொறுப்பின் கீழ் இருப்பதால், தேர்தல் சமயத்தில் நாட்டின் சட்டம், ஒழுங்கை பாதுகாத்து, பக்கசார்பின்றி, சுயாதீனமாக தேர்தலை நடத்த பங்களிப்பை வழங்குமாறு அவர்களுக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.