Header Ads



சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக தெரிவுசெய்து, நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல உதவுங்கள்

ஈழக் கொடியை ஏற்றி தனிநாட்டை பிரகடனப்படுத்திய வரதராஜ பெருமாளும், சரணடைந்த பொலிஸாரை சுட்டுக்கொன்ற கருணாவுமே கோத்தபாய தரப்புடன் இணைந்திருப்பதாக என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை, வெலிகமை தொகுதியின் உறுப்பினர்களின் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில்,

கோத்தபாய ராஜபக்சவுடன் இருப்பது, 1989ஆம் ஆண்டு திருகோணமலை நகரில் ஈழக் கொடியை ஏற்றி தனிநாட்டை பிரகடனப்படுத்திய வரதராஜ பெருமாள்.

மற்றைய நபர் 600 பொலிஸார் சரணடைந்த போது சுட்டுக்கொன்ற கருணா. இவர்களுடன் இணைந்திருக்கும் அதே நேரத்தில் எம் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

அத்துடன் இவர்களே குற்றம் சுமத்திய ஹிஸ்புல்லா அடிப்படைவாதத்தை போஷித்த நபர். பல்கலைக்கழகத்தை நிர்மாணிக்க மோசடியான முறையில் பணத்தை கொண்டு வந்ததாக கூறினார்கள்.

அவர் தற்போது எங்கிருக்கின்றார் பாருங்கள். நாட்டை பிளவுப்படுத்த காத்திருக்கும் சக்திகள் கோத்தபாய ராஜபக்சவின் அணியிலேயே இருக்கின்றனர்.

நாட்டை ஒன்றிணைத்த சக்திகள் எங்களுடன் இருக்கின்றனர் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

தற்போது இவர்கள் வழமைப் போல் படையினரை விற்று சாப்பிடுகின்றனர். போருக்கு பின்னர், படையினரை கூறி குடும்ப அதிகாரத்தை ஸ்தாபித்தனர்.

படையினருக்காக எதனையும் செய்யவில்லை. மூன்று மாதங்களுக்கு முன் அங்கவீனமுற்ற படையினர் மாத்தறையில் என்னை சந்தித்தனர்.

அவர்களின் கோரிக்கைக்கு அமைய அங்கவீனமுற்ற அனைத்து படையினருக்கும் சகல கொடுப்பனவுகளுடன் வாழ்நாள் முழுவதும் முழு சம்பளமும் கிடைக்கும்.

இதனால், பொதுஜன பெரமுனவினர் முதலை கண்ணீர் வடிக்கின்றனர். இராணுவத்தில் இருக்கும் சாதாரண சிப்பாய்கள் கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

கோத்தபாய ராஜபக்சவின் வீட்டில் நாய்களை நீராட்டவும், பசில் ராஜபக்சவின் மனைவி சேலைக்கு பின் குத்தவும் தம்மால் முடியாது என்று அவர்கள் கூறுகின்றனர்.

அந்த காலத்தில் படையினர் வீதியில் காய்கறி விற்றனர், காடுகளை சுத்தம் செய்தனர். வீதியை துப்பரவு செய்தனர்.

இந்த நிலைமை மீண்டும் ஏற்படுவதை படையினர் விரும்பவில்லை. இதனால், சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக தெரிவு செய்து, நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் என மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.