Header Ads



கோத்தாபயவின் சிறிலங்கா குடியுரிமையை, சவாலுக்குட்படுத்தியவர்களுக்கு கொலை அச்சுறுத்தல்

கோத்தாபய ராஜபக்சவின் சிறிலங்கா குடியுரிமையை சவாலுக்குட்படுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்த சிவில் செயற்பாட்டாளர்களான காமினி வியாங்கொட மற்றும் பேராசிரியர் சந்ரகுப்த தெனுவர ஆகியோருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கோத்தாபய ராஜபக்சவின் இரட்டைக் குடியுரிமை சான்றிதழ் முறைகேடான வகையில் வழங்கப்பட்டுள்ளது என்றும், அதனை அடிப்படையாக வைத்து, வழங்கப்பட்ட கடவுச்சீட்டு, மற்றும் தேசிய அடையாள அட்டை ஆகியனவற்றை ரத்துச் செய்து, கோத்தாபய ராஜபக்சவின் சிறிலங்கா குடியுரிமையை ஏற்றுக் கொள்ள இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி, சிவில் செயற்பாட்டாளர்களான காமினி வியாங்கொட மற்றும் பேராசிரியர் சந்ரகுப்த தெனுவர ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் யசந்த கோத்தாகொட தலைமையிலான மூன்று நீதியரசர்கள் குழு அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

இந்தநிலையில், கோத்தாபய ராஜபக்சவின் குடியுரிமையை சவாலுக்குட்படுத்தி மனுத்தாக்கல் செய்த சிவில் செயற்பாட்டாளர்களான காமினி வியாங்கொட மற்றும் பேராசிரியர் சந்ரகுப்த தெனுவர ஆகியோருக்கு நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் கோத்தாபய ராஜபக்சவின் ஆதரவாளர்கள் கொலை அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர்.

நீதிமன்ற தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின்னர், தனக்கும், பேராசிரியர் தெனுவரவுக்கும் எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக  காமினி வியாங்கொட தெரிவித்தார்.

தொலைபேசி மூலம் தனக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும், சமூக ஊடகங்களில் துஸ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஒரு சமூக ஊடகப் பதிவில், எம்மை கொலை செய்ய முன்னர் சித்திரவதை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதுபோலவே, தெனுவரவுக்கும், தொலைபேசி மூலம் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், வீதியில் நடந்து செல்லும் போது கூச்சலிட்டு அச்சுறுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

தேவைப்பட்டால், தாங்கள் காவல்துறையின் பாதுகாப்பை கோருவோம் என்றும் காமினி வியாங்கொட தெரிவித்துள்ளார்.

தன்னை எதிர்ப்பவர்களுக்கு கோத்தாபய ராஜபக்ச பல பாடங்களைக் கற்பித்திருக்கிறார் என்றும், லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட, போத்தல ஜயந்த, கீத் நொயார் போன்றவர்களுக்கு நடந்தது அதற்கான உதாரணங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், தமக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை தீவிரமாக  எடுத்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.