Header Ads



5 தமிழ் கட்சிகள் கையொப்பமிட்டு சஜித், கோத்தாவிடம் முன்வைக்கவுள்ள ஆவணம்

தமிழ் தேசத்தினை அங்கீகரித்து அதற்குத் தனித்துவமான இறமை உண்டு என்பதனையும் தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதனையும் அங்கீகரித்து சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் அரசியல் தீர்வு, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கம் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை முன்வைத்து பொது ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்களால் ஒழுங்கமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட பொது உடன்பாட்டு ஆவணத்தில் தமிழ் அரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, புளொட் மற்றும் ஈபிஆர்எல்எப் ஆகிய 5 தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

அந்த ஆவணத்தின் முழுமையான விவரம் வருமாறு:

இலங்கைத் தீவின் தேசியக் கேள்வியாக கடந்த பல பத்தாண்டுகளாக நீடித்து வந்திருப்பதும்3 பத்தாண்டுகளுக்கு மேலாக நீடித்து நிகழ்ந்த போருக்கும் வழிவகுத்ததுமான, தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு என்பது தமிழ் தேசிய இனத்தின் அரசியல் வேணவாக்களை அங்கீகரித்து, வடக்கு – கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பிரதேசம் தமிழ் தேசியத்தின் வரலாற்று ரீதியான வாழ்விடம் என்பதனையும் மரபுவழித் தாயகம் என்பதனையும் அங்கீகரித்து அதற்கு தனித்துவமான இறமை உண்டு என்பதனையும் அங்கீகரித்து, தமிழ் மக்களுக்கு சர்வதேச சட்டத்தின் கீழ் சுயநிர்ணய உரிமை உண்டு என்பதனை அங்கீகரித்து, சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் ஏற்படுத்தப்படவேண்டும் எனும் எமது நிலைபாட்டுக்கு அமைவாக;

நடந்து முடிந்த போரின் தாக்கத்தாலும் நீடித்து கொண்டிருக்கும் விளைவுகளாலும் தமிழ் மக்கள் தொடர்ந்து எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வை சாத்தியமான வழிகளில் காணமுடியும் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளாகிய நாம் இதற்குக் கீழ் காணப்படும் கோரிக்கைகளை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகளிடமும் வற்றின் ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் முன்வைக்கின்றோம்.

கோரிக்கைகள்

புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பில் ஒற்றையாட்சி முறைமையை நிராகரித்து தமிழ் தேசத்தினை அங்கீகரித்து அதற்குத் தனித்துவமான இறமை உண்டு என்பதனையும் தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதனையும் அங்கீகரித்து சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் இலங்கையின் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும்.

இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பவற்றுக்கு முழுமையான மற்றும் பக்கச்சார்பற்ற சர்வதேசப் பொறிமுறையிலான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் / சர்வதேச தீர்ப்பாயம் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படல் வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேசப் பொறிமுறையின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நிலை கொண்டிருக்கும் அரச படைகள் போருக்கு முன் தமிழ் மக்களின் பாவனையிலிருந்த தனியார் மற்றும் அரச காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு அக்காணிகள் அனைத்தும் உடனடியாக விடுவிக்கப்படுவதுடன், மீள்குடியமர்வு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படல்வேண்டும்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அரச ஆதரவுடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிங்களமயமாக்கல், பௌத்தமயமாக்கல் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

வடக்குக்கு மகாவலி நதியை திசை திருப்புவது என்ற போர்வையில் வடக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கு மாத்திரமே திட்டமிட்டுச் செயற்படும் சபையாக மகாவலி அதிகார சபை இயங்குவதால் மகாவலி அதிகார சபையின் நியாயாதிக்கம் வடக்கில் இல்லாது ஒழிக்கப்படல்வேண்டும். அத்துடன், கிழக்கில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்படல்வேண்டும்.

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மொரகஸ்கந்த நீர்பாசனத் திட்டத்தின் கீழ் வன்னிப் பிரதேசத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படல்வேண்டும்.

தொல்லியல் திணைக்களம், வனவளத்திணைக்களம், வன உயிரினங்கள் திணைக்களம் உள்பட பல அரச திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நில, வழிபாட்டுத்தல ஆக்கிரமிப்புகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படல்வேண்டும். மேற்குறிப்பிடப்பட்ட திணைக்களங்கள் ஊடாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசிதழ் பிரகடனங்களிலிருந்து விடுவிக்கப்படவேண்டும்.

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தியையும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினையும் ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு வெளிநாடுகளில் வாழ் இலங்கையர்களிடமிருந்து நேரடி முதலீடுகளை இலகுவாக பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக இங்கு காணிகளையும் நிதிகளையும் கையாள்வதில் இப்போது அவர்கள் எதிர்கொள்ளும் சட்டப்பிரச்சினைகளை தீர்க்கவேண்டும்.

வடக்கு – கிழக்குக்கான அரச மற்றும் தனியார் துறைகளின் வேலைவாய்ப்புக்களில் அந்தந்த மாகாணத்தைச் சார்ந்த மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படல்வேண்டும்.

வடக்கு – கிழக்கினை போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தி அதன் அபிவிருத்திக்கான நிதியினைக் கையாள்வதற்கு வடக்கு – கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் நெறிப்படுத்தலில் பொதுக்கட்டமைப்பு ஒன்றினை உருவாக்குதல் வேண்டும்.

மேற்சொன்ன கோரிக்கைகளில் உடனடியாக தீர்க்கப்படவேண்டிய விடயங்களுக்கு ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து புதிய ஜனாதிபதி பதவியேற்று 3 மாதகாலப் பகுதிக்குள் தீர்வு காணப்படல்வேண்டும் -என்றுள்ளது.

4 comments:

  1. தமிழ் காட்சிகள் அப்பாவி தமிழ் மக்களை மறுபடியும் ஏமாற்றுவதட்காக முன்வக்கப்பட்டுள்ள கோரிக்கைகள். கையொப்பம் இட்டு ஜனாதிபதி ஆன பின் நடைமுறை படுத்துவிட்டாள் என்ன செய்வீர்கள்??

    ReplyDelete
  2. MUSLIMGALAI VITRU,SHAMBATHIKUM
    POLI MUSLIM THALAIVAN,
    AVAN MUSLINGALIN THUROKI,HAKIM.
    AVANODU VADAKKU - KILAKKAI
    INAIPTHARKU SHEITHA OPPANDAM,
    KANAVAAKAVE MAARUM.AIIIA.

    ReplyDelete
  3. கோத்தாபேய ஜனாதிபதியாக வர வேண்டும் எனும் ஆசை சிங்கள மக்களில் 55-65% ஆனவர்களிடம் இருந்தாலும், அவர் ஜனாதிபதியாக வந்து விடக்கூடாது எனும் எண்ணம் (வெறி) தமிழ் மக்களில் 95-98% ஆனவர்களிடம் உண்டு என்பது எல்லோரும் அறிந்த உண்மை. எனவேதான் சஜித் உங்களை பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை, கடைசியில் அவருக்குத்தான் வாக்களிக்கும் நிர்பந்தம் உங்களுக்கு உள்ளதை உலகறியும்.

    எதோ வடக்கும் கிழக்கும் உங்களுக்கு மாத்திரம் சொந்தம் என்பதை போலுள்ளது உங்களது கதை.
    அங்கு வாழும் முஸ்லீம் மற்றும் சிங்களவர்கள் எங்கு செல்வது.

    எது எப்படியோ, அடுத்த 2024 ஜனாதிபதி தேர்தலிலும் இதே நிபந்தனைகளை காட்டி உங்கள் தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டி இருப்பதனால் இதனை கவனமாக கசங்காமல் வைத்திருக்கவும்.

    ReplyDelete
  4. these demands may lead Tamils to avoid voting, and, at the same time may boost the repressive thinking of racists...? and may end with great suppressible situation....?

    ReplyDelete

Powered by Blogger.