Header Ads



வெடிகுண்டு வதந்தியை கிளப்பி, தேர்தல் பிரச்சாரம் - பீதியை ஏற்படுத்துகின்ற 500 சம்பவங்கள்

நாட்டின் பல இடங்களிலும் தற்போது இடம்பெற்றுள்ள வெடிகுண்டு பீதிக்குப் பின்னால் தேர்தல் பிரசாரமொன்று இடம்பெறுகிறதா என்கிற சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது.

வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மற்றும் ஹட்டன் ஆகிய பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் பதற்றம் ஏற்பட்ட நிலையிலேயே கபே என்கிற சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலுக்கான மத்திய இயக்கம் இதனைக் கூறியுள்ளது.

கொழும்பு மட்டக்குளி இந்துக் கல்லூரிக்கு அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த சொகுசு வாகனம் ஒன்றினால் அந்த பகுதியில் வெடிபொருள் பீதி ஏற்பட்டது.

இதன் காரணமாக பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டு பாரிய தேடுதல்களும் நடத்தப்பட்ட நிலையில் இறுதியில் எந்தவொரு வெடிபொருளும் மீட்கப்படவில்லை.

அதேபோல ஹட்டன் பொகவந்தலாவ ஆகிய பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் வெடிபொருள் இருப்பதாக வெளியான தகவலை அடுத்து மோப்ப நாய்களுடன் பொலிஸார் பாரிய சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

எனினும் விசாரணையில் எந்தவொரு வெடிபொருட்களும் கைப்பற்றப்படவில்லை. இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கும் கபே அமைப்பு, தேர்தல் பிரசாரத்திற்காக இப்படியான சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டிருக்கிறது.

இப்படியான பீதியை ஏற்படுத்தி அதனை தேர்தல் பிரசாரங்களுக்காக பயன்படுத்தும் முயற்சிகள் இடம்பெறலாம் என்கிற கோணத்தில் விசாரணைகளை நடத்தும்படி தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பொலிஸாருக்கு கபே அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை அநாவசியமாக பீதியை ஏற்படுத்துகின்ற 500க்கும் மேற்பட்ட சம்பவங்கள் இதுவரை பதிவாகியிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் நான்கு வாரங்களே உள்ள நிலையில், நேற்று வரை 762 தேர்தல் வன்முறைகள் பதிவாகியிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.