Header Ads



எமது தேர்தல் விஞ்ஞாபனத்தினை ஏற்பவருக்கே, எங்களது 2 வது விருப்பு வாக்கு - ஹிஸ்புல்லாஹ்

எங்களைப் பொறுத்தவரையில் சஜித், கோட்டாபாய, மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க அனைவரும் ஒன்று தான். இவர்கள் யாரும் முஸ்லிம் சமூகத்தினுடைய பிரச்சினைகளுக்கு தீர்ப்பதற்கு முன்வர மாட்டார்கள் என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனரும், ஜனாதிபதி வேட்பாளருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஓட்டமாவடி எம்.பி.சி.எஸ். வீதியில் நேற்று (24) இரவு நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தேர்தல் விஞ்ஞாபனத்தினை தயாரித்துள்ளோம். நாங்கள் யாருடைய முகவர்களும் அல்ல. கோட்டா மற்றும் சஜித்தினுடைய முகவர்கள் அல்ல. எங்களைப் பொறுத்தவரையில் சஜித்தும் ஒன்று தான், கோட்டாபயவும் ஒன்று தான், மஹிந்தவும் ஒன்று தான், ரணிலும் ஒன்று தான். இவர்கள் யாரும் முஸ்லிம் சமூகத்தினுடைய பிரச்சினைகளுக்கு தீர்ப்பதற்கு முன்வருபவர்கள் அல்ல. 

நாங்கள் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்திருக்கின்றோம். சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் இருந்திருக்கின்றோம். அமைச்சர்களாக அதிகாரத்தில் இருந்தோம், ஆளுனராக இருந்தோம். ஆனால் முஸ்லிம் சமுதாயம் அழிக்கப்படுகின்ற, அடிக்கப்படுகின்ற, உரிமைகள் மறுக்கப்படுகின்றது, பள்ளிவாயல்கள் எரிக்கப்படுகின்ற, முஸ்லிம் சமூதாயம் படுகொலை செய்யப்படுகின்ற, கோடிக்கணக்கில் சொத்துக்கள் எரிக்கப்பட்ட போதெல்லாம் நாங்கள் அமைச்சர்களாகத் தான் இருந்தோம். எங்களால் அவற்றை தடுக்க முடியவில்லை. 

எங்களது பதவிகளை கொண்டு எதையும் செய்ய முடியவில்லை. கடந்த காலங்களில் எங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு புதிய வியூகத்தில் எமது சமூதாயத்தினை கொண்டு செல்வதற்கு நிறைய கலந்துரையாடல்கள் நடாத்தினோம். இவ்விடயமாக உலமாக சபைகள், கல்வியலாளர்கள், தௌபீக் அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட அமைப்புகளுடன் 50 க்கும் மேற்பட்ட கலந்துரையாடல்களை நடாத்தினோம். 

இதற்கு பின்னர் இந்த தீர்மானத்தினை மேற்கொண்டோம். உண்மையிலே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைவர் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு இருக்க வேண்டும். அவர்கள் அதற்கு தகுதியானவர். போட்டியிட்டு இருந்தால் மிக வேகமாக இந்த தேர்தல் கலத்தினை சந்தித்திருக்க முடியும். 

இந்த தேர்தல் களத்தில் குதித்திருப்பது. மிகவும் பயங்கரமான, நெருப்பு குழிக்குள் காலை விட்ட ஒரு பயங்கரமான சூழ்நிலையில் தான் கலத்தில் இறங்கியுள்ளேன். தேர்தல் மனுதாக்கலுக்கு முன்பு எமது முஸ்லிம் மக்கள் என் மீது மிகவும் அன்பு வைத்திருந்தார்கள். 

பல்கலைக்கழகம் பறிக்க போராட்டம் செய்த போது எனக்கான துஆ செய்தார்கள், அளுனர் பதவியை பறிக்க போராட்டம் செய்த போது முஸ்லிம் சமூகம் அழுதது. தேர்தல் மனுதாக்கல் செய்து முஸ்லிம் வேட்பாளராக நிறுத்தப்பட்டேனோ உடனடியாக அனைவரும் என்னை விமர்சிக்க தொடங்கி விட்டார்கள். 

என்னை துரோகி என்கின்றார்கள், பச்சோந்தி என்கின்றார்கள். முஸ்லிம் சமூகத்தின் வாக்கை பிரிக்க வந்த காட்டிக் கொடுக்கும் துரோகி என்கின்றார்கள். முஸ்லிம் சமூகத்தின் தலைமைகள் எல்லாம் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் றிசாட் பதியூதீன், அமைச்சர் அமீர் அலி, அமைச்சர் அலிசாஹிர் மௌலானா ஆகியோர் மேடைக்கு வந்தால் எனக்கு மாத்திரம் திட்டிப் பேசுகின்றார்கள். 

இவர்கள் சஜித் பிரேமதாச, கோட்டபாய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரைப் பற்றி பேசுவதில்லை. நான் தான் ஜனாதிபதியாக வருவதற்கு போட்டியிடுவது போன்று ஏசுகின்றனர். ஜனநாயக நாட்டில் முஸ்லிம் சமூகத்தினுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தேர்தலில் போட்டியிடுகின்ற உரிமை எனக்கு இருக்கின்றது. நீங்கள் மேடைகளில் உங்களது பிரச்சாரங்களை செய்யுங்கள். 

உங்களது கொள்கை என்ன, ஏன் சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கின்றீர்கள் என்று சொல்லுங்கள். நான் சஜித் பிரேமதாசாவுக்கு எதிராகவே, கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு ஆதாரவாகவோ இந்த தேர்தல் களத்தில் இறங்கவில்லை. நாங்கள் முஸ்லிம் சமூகத்தினுடைய முகவர். கடந்த முப்பது வருடம் வாக்களித்தோம், சில்லறை வியாபாரத்தை செய்தோம். சொத்துக்கள் மற்றும் மூலதனங்கள் என்பவற்றை இழந்து இன்று ஓட்டயாண்டியாக முகவரி இல்லாமல் வீதியில் நிற்கின்றோம். 

தேர்தல் முடிந்ததும் முஸ்லிம் சமூகத்திற்கு எல்லா தடைகளையும் போடுவதற்கு சில தீவரவாதிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த நாட்டில் என்பது வீதமான சிங்களர்கள் வாழ்கின்றார்கள் 6000 பன்சலை உள்ளது. ஆனால் 10 வீதமான முஸ்லிம்களுக்கு 2000 பள்ளிவாய்கள் இருக்கின்றது. அவர்களுக்கு 600 பள்ளிவாயல்கள் தான் தேவை. தேர்தல் முடிந்ததும் மிகுதி பள்ளிவாசல்களை மூட வேண்டும் என்று ஒரு அமைச்சர் தெரிவித்திருந்தார். 

எமது முன்னோர்கள், மூதாதையர்கள் பெற்றுத் தந்த உரிமைகளை பறிப்பதற்கு சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் பக்கமுள்ள தீவிரவாதிகள் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றார்கள். இந்த சூழலில் தான் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளோம். முஸ்லிம் சமூகத்தினுடைய சகல பிரச்சினைகளையும் உள்வாங்கிய தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 28 ஆம் திகதி வெளியிடப்படும். 

தேர்தல் விஞ்ஞாபனம் வெயிளிட்டதன் பிற்பாடு இந்த நாட்டிலுள்ள சிவில் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து 20 பேர் கொண்ட குழுவினர் சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருடன் பேசுவார்கள். நாங்கள் தனிநாடு, வடக்கிழக்கு இணைக்க கேட்பதும் இல்லை. 

வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றுங்கள் என்று கேட்பதுமில்லை. சமஸ்டி ஆட்சி தாருங்கள் என்று கேட்பதுமில்லை. அதிகார பரவலாக்கம் செய்யுங்கள் என்று கேட்பதுமில்லை. இந்த நாட்டில் முஸ்லிம்கள் மானத்தோடு, மரியாதையோடு, கௌரவத்தோடு, நிம்மதியாக 5 நேரம் பள்ளிவாயலில் தொழுகை செய்து கொண்டு எமது மார்க்க விழுமியங்களை பேணிக் கொண்டு வாழ வேண்டும் என்று விஞ்ஞாபனத்தில் கேட்டுள்ளோம். 

எந்த வேட்பாளர் எங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தினை ஏற்றுக் கொள்கின்றாரோ அவருக்கே எங்களது இரண்டாது விருப்பு வாக்குகளை வழங்குவது என்று தீர்மானிப்போம் என்றார். 

ஓட்டமாவடி பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் யூ.எல். அஹமட் லெவ்வை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஏறாவூர் நகர சபை பிரதி தவிசாளர் ரெபூபாசம், வாகரை பிரதேச சபை உறுப்பினர்களாக எம். தாஹிர், எம். றஹீம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

(மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்)

1 comment:

  1. இப்படி உன்மையாக நடந்து கொண்டால் உங்களை வரவேற்கிறோம்.ஆனால் முதலில் நீங்கள் அந்த இரு பிரதான வேட்பாளருடனும் பேச்சு வார்த்தையை ஏன் ஆரம்பிக்கவில்லை.தேர்தல்லுக்கான நேரம் நெருங்கி விட்டது.எனவே விரைவாக பிரதான வேட்பாளர் இருவரிடமும் விரைவாக பேச்சு வர்த்தை நடத்தி மக்களுக்கும் தெரிய வேண்டி உள்ளதால் இறுதியில் யாரை ஆதரிக்கப் போகிரீர்கல் என்பதை தெளிவு படுத்துவது சிறப்பாக இருக்கும்

    ReplyDelete

Powered by Blogger.