Header Ads



புதிய சாதனைகளைப் படைத்து, வரலாற்றில் இடம்பிடிக்கும் 2019 ஜனாதிபதித் தேர்தல்

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில், புதிய சாதனைகளைப் படைக்கும் தேர்தலாக அமைந்துள்ளது.

இந்த தேர்தலே, இலங்கையின வரலாற்றில் அதிகளவு வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதி தேர்தலாக உள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் 19 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர், இம்முறை 41 வேட்பாளர்களுக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ள நிலையில், இரண்டு மடங்கு வேட்பாளர்கள் களத்தில் குதிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலையும் பரிதாபமாகியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு 4 பில்லியன் ரூபா செலவாகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு மதிப்பீடு செய்திருந்தது.

ஆனால் அதிகளவு வேட்பாளர்கள் களமிறங்குவதால், மேலதிகமாக 1 பில்லியன் ரூபா செலவு ஏற்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

41 வேட்பாளர்கள் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதால், இம்முறை மிக நீளமான வாக்குச்சீட்டை அச்சிட வேண்டியிருக்கும் என்றும் தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவற்றை விட இந்த தேர்தல் பதவியில் உள்ள ஜனாதிபதி அல்லது பிரதமர் யாரும் போட்டியிடாத முதல் ஜனாதிபதி தேர்தலாகவும் இது அமைந்துள்ளது.

இப்போது பதவியில் உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் போட்டியிடத் தகுதி பெற்றிருந்தும், அவர்கள் போட்டியில் இருந்து ஒதுங்கியுள்ளனர்.

இந்த தேர்தலே இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர் ஒருவர் அதிகாரபூர்வ வேட்பாளராக போட்டியிடாத முதல் தேர்தலாகவும் அமைந்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி இதற்கு முன்னர் 2010, 2015 தேர்தல்களில் பொது வேட்பாளரை ஆதரித்திருந்தது. இதனால் தமது கட்சியின் வேட்பாளரை நிறுத்தவில்லை.

எனினும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி இம்முறையே முதல் தடவையாக போட்டியில் வேட்பாளரை நிறுத்தாமல் பின்வாங்கியுள்ளது.

No comments

Powered by Blogger.