Header Ads



யாழ் விமான நிலையம் 17 ஆம் திகதி திறப்பு - இலங்கையில் சர்வதேச விமான நிலையங்கள் 5 ஆக உயர்வு

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து வரும் 17ஆம் நாள் விமான சேவைகள் ஆரம்பித்து வைக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

பலாலி விமான நிலையத்தை யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையமாக பெயர் மாற்றம் செய்யும், அமைச்சரவைப் பத்திரம் அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது.

பலாலி விமான நிலையம் அனைத்துலக விமான நிலையமாக குறுகிய காலத்துக்குள் தரமுயர்த்தப்பட்டுள்ளது, அரசாங்கத்தின் முக்கியமான தொரு வெற்றியாகும் என்று அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

இந்த மாதத்தில் இருந்து பிராந்திய விமான சேவைகளை ஆரம்பிக்கும் வகையில்,  பலாலி விமான நிலையம் 22 பில்லியன் ரூபா செலவில்  சிறிலங்காவின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது.

ஜூலை 5ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகள்,  வரும் 10ஆம் நாளுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தை ஒக்ரோபர் 17ஆம் நாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்து விமான சேவைகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

முதற்கட்டமாக இங்கிருந்து, தென்னிந்திய நகரங்களுக்கு விமான சேவைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக பலாலி விமான நிலைய ஓடுபாதை 950 மீற்றருக்கு அபிவிருத்தி செய்யப்பட்டு, சி-100 வகையைச் சேர்ந்த 72 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

இரண்டாவது கட்டமாக ஓடுபாதையின் நீளம் 1.5 கி.மீற்றராக விரிவாக்கப்பட்ட பின்னர், 1800 கி.மீ தொலைவு வரை பயணிக்கக் கூடிய விமானங்களை தரையிறக்கக் கூடியதாக இருக்கும்.

மூன்றாவது கட்டமாக, இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை 2.3 கி.மீற்றராக விரிவாக்கப்பட்டு, ஏ-320 -321 விமானங்களைத் தரையிக்கக் கூடிய வசதிகள் செய்யப்படும்.

அதேவேளை, யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்துடன், கொழும்பு இரத்மலானை விமான நிலையம், மட்டக்களப்பு விமான நிலையம் ஆகியனவும் அனைத்துலக விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, சிறிலங்காவின் அனைத்துலக விமான நிலையங்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

2 comments:

  1. அபிவிருத்தி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். கண்ட கண்ட இடங்களில் புத்தர் சிலைகள் வைப்பதெல்லாம் அபிவிருத்தியில் லை. வரவேற்கிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.