Header Ads



ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிக்க 10 ஆயிரம் பேர்

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு மற்றும் முறைகேடுகளைக் கட்டுப்படுத்தும் பணிகளில் சுமார் 10 ஆயிரம் பேர் வரை ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். அத்தோடு தேர்தலைக் கண்காணிப்பதற்காக ஆசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பிலிருந்து 35 பேர் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் தேர்தலுக்கு முன்னர், தேர்தல் இடம்பெறும் தினத்தன்று, தேர்தலுக்குப் பின்னர் என்ற மூன்று அடிப்படைகளின் எமது கண்காணிப்புப் பணிகளை முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டிருக்கின்றோம்.

அதேபோன்று நேரடி வாக்குப் பதிவின் போதும், தபால் மூல வாக்குப்பதிவின் போதும் கண்காணிப்பு இடம்பெறும் என்பதுடன், நடமாடும் கண்காணிப்பு மற்றும் நீண்டகால கண்காணிப்பு என்பவற்றுக்கும் ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தத் தேர்தல் கண்காணிப்பு மற்றும் தேர்தல் முறைகேடுகளைக் கட்டுப்படுத்தும் பணிகளில் சுமார் 10 ஆயிரம் பேர்வரை ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

அதேபோன்று ஆசிய தேர்தல் கண்காணிப்பு தொடர்பான அமைப்பிலிருந்தும் 35 பேர் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரை தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதி தொடர்பில் வெகுவாக அவதானம் செலுத்துகின்றோம். ஏனெனில் தேர்தலுக்கு முன்னர் தான் அரச நிதி மற்றும் சொத்துக்கள் தவறாகப் பயன் படுத்தப்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகளவில் உள்ளன.

மேலும் வாக்காளர்கள் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள், பொதுமக்களுக்குப் பொருட்களை வழங்குதல், தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் சமத்துவ வாய்ப்பு இல்லாது போதல் என்பவை தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதியிலேயே இடம்பெறும். எனவே, அவற்றைக் கண்காணிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளோம்.

மேலும் இம்முறை தேர்தலில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டிய மற்றொரு விடயமாக சமூகவலைத்தளங்கள் உள்ளன. இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுடனும், குறிப்பாக பேஸ்புக் நிறுவனத்துடனும் கலந்துரையாடி உரிய வரையறைகளைத் தீர்மானிப்போம்.

நியாயமானதும், சுயாதீனமானதுமான தேர்தலை உறுதிசெய்வதற்கு சமூகவலைத்தளங்களைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளை எதிர்வரும் 10ம் திகதியிலிருந்து ஆரம்பிக்க முடியும்.

தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் இம்மாதம் 2ம் திகதி வரை 24 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவை குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.