Header Ads



UNP மீது மைத்திரி ஆத்திரம், கட்சியை பிளவுப்படுத்துவது நோக்கம், சஜித் சிக்கமாட்டார் என நம்புகிறேன்

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினையின் பின்னணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருப்பதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊடகம் ஒன்றின் சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோர் தமது பிரதிநிதிகளை அனுப்பி வைக்காமல், இருவரும் நேரடியாக சந்தித்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பேசி, இருவரும் இணைந்து செயற்படாமல் இந்த பயணத்தை மேற்கொள்ள முடியாது.

எல்பிட்டிய பிரதேசசபையின் தேர்தல் முடிவுகள் மூலம், ஜனாதிபதித் தேர்தலில் என்ன நடக்கும் என்பதை அனுமானிக்க முடியும். ஐக்கிய தேசியக் கட்சி பொருத்தமான நேரத்தில் வேட்பாளரை அறிவிக்கும்.

2015ஆம் ஆண்டு வேட்மனு தாக்கல் செய்யப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்.

இந்த முறை எமக்கு அவசரமில்லை. கோத்தபாய ராஜபக்ச வேட்பாளராக அறிவிக்கப்பட்டமை அவசரமானது.

காலம் செல்ல, செல்ல வேட்பாளரின் குறைகள், தவறுகள் மக்களுக்கு தெரிய ஆரம்பிக்கும். கோத்தபாய ராஜபக்ச கூறுவதும் செய்வது ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக உள்ளது. மக்களுக்கு இது புரிந்து போகும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய, சரத் பொன்சேகா, ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் பெயர்கள் அடிப்படுகின்றன.

அனைவரும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானத்தை எடுக்க வேண்டும். யார் வேட்பாளராக போட்டியிட்டாலும் கூட்டணி அமைக்காமல் வெற்றி பெற முடியாது.

வேட்பாளராக போட்டியிடும் நபர் யாராக இருந்தாலும் அவர் முழு நாட்டிலும் உள்ள சகல மக்களின் நம்பிக்கையை வென்றவராக இருக்க வேண்டும்.

அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியை இரண்டாக பிளவுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 52 நாட்கள் குறித்து நினைவிருக்கலாம். ஜனாதிபதியின் விருப்பத்திற்கு ஏற்ப ஐக்கிய தேசியக் கட்சி செயற்படாது.

அவர், ஐக்கிய தேசியக் கட்சி மீது கடும் ஆத்திரத்தில் இருக்கின்றார். கட்சியை இரண்டாக பிளவுப்படுத்துவதே அவரது இறுதி நோக்கம். இதன் பின்னணியில் ஜனாதிபதி இருக்கின்றார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார்பற்ற தலைவராக செயற்பட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சந்தர்ப்பம் இருந்தது.

எனினும் அவர் அதனை செய்யவில்லை. இதனால், ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீனமாக செயற்படக் கூடிய வேட்பாளர் அவசியம்.

அமைச்சர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதியின் வலைக்குள் சிக்க மாட்டார் என நான் நம்புகிறேன். பிரதமரும் அதில் சிக்க மாட்டார் எனவும் ஹிருணிகா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.