Header Ads



UNP க்குள் ஜாதிப் பிரச்சினையா..? பிரேமதாச ஜனாதிபதியாக நானே உதவினேன் என்கிறார் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவி ஜாதி அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜாதி பிரச்சினை காரணமாகவா சஜித் பிரேமதாசவிற்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவி வழங்கப்படவில்லை என முக்கிய அமைச்சர் ஒருவர் நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பியுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் உடன் பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க “தாம் ஜாதி அடிப்படையில் செயற்படும் நபரில்லை என தெரிவித்துள்ளார். தாம் ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதிக்கு உதவியவர் எனவும், 2010ம் ஆண்டில் சரத் பொன்சேகாவிற்கு தாம் ஆதரவு வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.”

எவ்வாறெனினும் சஜித்தின் தந்தை ஆர். பிரேமதாசவிற்கு எதிராக கிளர்ச்சி செய்த காமினி திஸாநாயக்கவின் புதல்வர் அமைச்சர் நவீன் திஸாநாயக்க சஜித்திற்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவி வழங்கப்படக் கூடாது என்ற அடிப்படையில் காய்களை நகர்த்தி வரும் தரப்பின் முக்கியமானவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த இரண்டு அமைச்சர்களில் ஒருவராக நவீன் திஸாநாயக்க திகழ்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சஜித் பிரேமதாசவை சேர் என விளிப்பதற்கு சில உயர் சாதியைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் விரும்பவில்லை என ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி. லால்காந்த அண்மையில் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.