Header Ads



எனக்கு ஆதரவு தெரிவித்த முஸ்லிம்களின் வீடுகள், வாகனங்கள் சேதமாக்கப்பட்டமை குறித்து கவலையடைகின்றேன்

சிறுபான்மைச் சமூகங்களை இலக்குவைத்து இனவாதத்தை தூண்டி அரசியல் செய்ய முனையும் சக்திகளை கடுமையாக சாடியிருக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச மாத்தறை கிரிந்தவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சம்பவத்தை வன்மையாகக் கண்டித்திருக்கின்றார். இனவாதச் செயற்பாடுகளை முற்றாக நிராகரிப்பதாக கூறிய சஜித் பிரேமதாச இந்த தேர்தல் காலத்தில் சிறுபான்மையினர் மீது இனவாதத்தைத் தூண்டிவிட்டு அதில் அரசியல் இலாபம் தேட சிலர் ஈடுபட்டு வருவதைக் காண முடிகிறது. அதற்கு ஒருபோதும் வாய்ப்பளிக்கக்கூடாது எனவும் தெரிவித்தார்.

கொழும்பில் அமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.   இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது :-

நான் எவரையும் பகைத்துக்கொண்டு அரசியல் செய்ய முன்வரவில்லை. எல்லோரையும் அரவணைத்துக் கொண்டே இந்தப் பயணத்தை தொடர விரும்புகின்றேன். எனது வெற்றிக்காக உழைப்பதற்கு யார் வந்தாலும் அவர்களுக்காக எனது வாசல் கதவுகள் திறந்தே இருக்கின்றது. கட்சியிலிருந்த புரிந்து சென்றவர்களுக்கு நான் அழைப்பு விடுத்திருக்கின்றேன். சிலர் உடனடியாகவே எம்மோடு இணைந்துள்ளனர். மேலும் பலர் இணையவிருக்கின்றனர்.

எந்தக் கட்சியை சார்ந்தவராக இருப்பினும் வருபவர்களை அன்புடன் அரவணைக்க நான் தயாராகவே உள்ளேன். நாடு பூராவுமுள்ள மக்கள் இனம், மதம் கடந்து எனக்கு ஆதரவளிக்க அணிதிரண்டிருக்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தில் என்னை ஆதரிக்கும் சிறுபான்மை சமூகத்தவர்களை இனவாத கோணத்தில் பார்க்க முற்பட்டுள்ளனர்.

கிரிந்தவில் எனக்கு ஆதரவு தெரிவித்த முஸ்லிம்களின் வீடுகள், வாகனங்கள் சேதமாக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையிட்டு நான் பெரும் கவலையடைகின்றேன். நாட்டில் இனக்குரோதத்தை தூண்டிவிட்டு அதில் அரசியல் இலாபம் தேடமுனைவது வெறுக்கத்தக்கதான செயலாகும்.

இச்சம்பவம் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு நான் பாதுகாப்புத் தரப்பிடம் கோரியுள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் கூடடணியாகச் சேர்ந்து அன்னம் சின்னத்திலேயே போட்டியிடத் தீர்மானித்திருக்கின்றேன். ஐக்கிய தேசிய முன்னணியுடன் சிறுபான்மைக் கட்சிகள் உட்பட பல கட்சிகள் எம்மோடு இணைந்துள்ளன. அடுத்த வாரத்தில் ஜனநாயக தேசிய முன்னணி உதயமாகவுள்ளது அதன் அன்னம் சின்னத்தில் போட்டியிடவே நாம் தீர்மானித்துள்ளோம்.

எம்.ஏ.எம். நிலாம்  

2 comments:

  1. நாட்டு நடப்புகள் தெரியாத சஜித் தோல்வி தான்

    ReplyDelete
  2. வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் அஜன்களால் அது தீர்மானிக்கப்படுவதில்லை.

    ReplyDelete

Powered by Blogger.