Header Ads



ஈஸ்டர் தாக்குதலில் மனைவியை இழந்தபிறகும் 'இலங்கை காதலை' கைவிடாத அமெரிக்கர்

கடந்த 35 வருடங்களாக இலங்கையுடன் மிகவும் நெருங்கிய உறவை பேணி வந்த அமெரிக்க பிரஜையான லுவிஸ் எலன், இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவராக இருக்கிறார்.

மாணிக்கக்கல் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள லுவிஸ் எலன், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இலங்கைக்கு வருகை தருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இலங்கையில் லுவிஸ் எலனுக்கு பல நெருங்கிய நண்பர்கள் இருக்கின்றனர்.

தனது வாழ்க்கை முன்னேற்றம் அடைவதற்காக இலங்கை வழங்கிய பாரிய ஒத்துழைப்புக்கு, நன்றிக் கடன் செலுத்தும் வகையில், லுவிஸ் எலன், இரத்தினபுரி வைத்தியசாலையின் சிறுவர் பிரிவிற்கான கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கான ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்.

இலங்கையிலுள்ள அவரது நண்பர்களின் உதவியுடன் இந்த செயல்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

2017ஆம் ஆண்டு இரத்தினபுரி வைத்தியசாலையின் கட்டடத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வின் போது, லுவிஸ் எலனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கௌரவித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் விடுமுறையை கழிப்பதற்காகவும், வைத்தியசாலையின் கட்டட நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காகவும் லுவிஸ் எலன், நெதர்லாந்து பிரஜையான தனது மனைவி மற்றும் மூன்று மகன்களுடன் இலங்கை வந்திருந்தார்.

ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி இரத்தினபுரி வைத்தியசாலைக்கு சென்ற இவர்கள், தனது மனைவியின் கோரிக்கைக்கு அமைய, வைத்தியசாலையின் சிறுவர் பிரிவிற்கான கட்டடத்தின் மூன்றாவது மாடியை நிர்மாணிப்பதற்கு உறுதி வழங்கினார்.

''வைத்தியசாலையின் மூன்றாவது மாடியை கட்டுவதற்கு நான் விருப்பம் தெரிவித்ததை அடுத்து, அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். நாம் கொழும்பு வரும் வரை அவர் அந்த விடயம் குறித்தே பேசிக் கொண்டு வந்தார்" என லுவிஸ் எலன் தனது நினைவுகளை இவ்வாறு பகிர்ந்துக் கொண்டார்.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் தனது மனைவி மற்றும் மகன்கள் காலை உணவை உட்கொண்டிருந்த தருணத்திலேயே, அந்த பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் லுவிஸ் எலனின் மனைவியான மோனிகா உயிரிழந்தார்.

உயிரிழந்த லுவிஸ் எலனின் மனைவி மோனிகாவின் இறுதிக் கிரியைகள் இரத்தினபுரியிலுள்ள அவரது நண்பரின் வீட்டில் நடத்தப்பட்டது.

''ஒரு விநாடியில் எனது வாழ்க்கையில் அனைத்து விடயங்களும் மாறி விட்டன. இலகுவில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. எனினும், இவ்வாறான விடயங்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நடக்கும். அவற்றை அனுபவமாக எடுத்துக் கொண்டு நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். நான் எமது மூன்று பிள்ளைகளுடன் அமைதியான வாழ்க்கையொன்றை வாழ்ந்து வருகின்றேன்" என லுவிஸ் எலன் பி.பி.சி சிங்கள சேவைக்கு தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் லுவிஸ் எலன், கடந்த 29ஆம் தேதி மீணடும் இலங்கைக்கு வருகைத் தந்தார்.

கொழும்பில் தற்போது நடைபெற்று வருகின்ற 2019ஆம் ஆண்டு சர்வதேச மாணிக்கக்கல் மற்றும் தங்க ஆபரண கண்காட்சியின் பிரதம விருந்தினராக கலந்துக்கொள்வதற்காகவே அவர் இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.

தனது நண்பர்களின் ஏற்பாட்டில் நடைபெறுகிற இந்த கண்காட்சிக்காக, ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த தனது ஒரு மகனுடனேயே அவர் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்.

''இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை நான் இலங்கைக்கு வருகை தருவேன். எனினும், இந்த முறை கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது. வீட்டில் உள்ளவர்களுடன் காலத்தை கடத்தி வந்தேன். இலங்கைக்கு மீண்டும் வருகை தர வாய்ப்பு கிடைத்தமை மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும், கொஞ்சம் மன கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது. இலங்கையில் ஒரு பிரச்சினை இருக்கிறது என நான் நினைத்தேன்" என அவர் குறிப்பிட்டார்.

''நான் விமான நிலையத்திலிருந்து வெளியில் வந்து பார்த்ததும், வாகன நெரிசல் மற்றும் மக்கள் வேலை செய்வதை பார்த்ததும், இலங்கை மக்கள் முன்னோக்கி செல்வதை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்" என அவர் கூறினார்.

தனது மனைவி உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த சிலர், இலங்கையின் தவறு காரணமாகவே இது நடைபெற்றதாக கூறியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அவரது மனைவியின் விருப்பத்திற்கு அமைய இரத்தினபுரி வைத்தியசாலையின் மூன்றாவது மாடியை நிர்மாணித்து, அதன் பணிகளை நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

லுவிஸ் எலனின் நண்பர்கள் உதவிடன் இந்தப் பணிகள் மிகவும் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலையின் சிறுவர் பிரிவில் அவசர சிகிச்சை பிரிவொன்று அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது மனைவிக்கு செய்யும் கௌரவமாக, அந்த வைத்தியசாலையின் கட்டிடத் தொகுதிக்கு மோனிகா எலன் என பெயர் வைக்க எதிர்பார்த்துள்ளதாக லுவிஸ் எலன் கூறியுள்ளார்.
ஏதோ ஒன்று இடம்பெறுமாயின், ஏதோ ஒரு காரணத்திற்காக என தான் நினைப்பதாகவும், அதன் ஊடாக இலங்கை மேலும் வலுப் பெறும் என தான் எண்ணுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

''வெளிச்சம் என்பது என்ன? அனைத்து சந்தர்ப்பங்களிலும் இருளே வெற்றி பெறுகிறது" என கூறி லுவிஸ் எலன் தனது கருத்துக்களை நிறைவு செய்கிறார்.

No comments

Powered by Blogger.