Header Ads



ரணிலை காதலிக்கும் சம்பந்தன், சுமந்திரன் - சஜித்துடன் பேச்சு தோல்வி, மீண்டும் சந்திக்க இணக்கம்

ஐதேகவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசிய முன்னணியின் அதிபர் வேட்பாளராக களமிறங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் முதற்கட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாரையும் ஆதரிப்பதாக இப்போது நேரடியாக அறிவிக்க முடியாது என்று, சஜித் பிரேமதாசவின் சார்பில், சந்தித்த அமைச்சர்கள் குழுவிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் அதிபர் வேட்பாளராக களமிறக்க முற்படும் சஜித் பிரேமதாசவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தை நேற்று அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் சஜித் பிரேமதாச சார்பில், அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், அதன் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

நேற்று முற்பகல் 11 மணியளவில் தொடங்கிய இந்தச் சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம்  நீடித்தது.

இதன்போது, புதிய கூட்டணியின் அதிபர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்று கூட்டமைப்பின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

தேசியப் பிரச்சினை தொடர்பாக தெளிவான நிலைப்பாட்டை அவர் கொண்டிருக்காததால், அவருக்கு வடக்கு, கிழக்கில் வாக்குகள் கிடைக்காது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தச் சந்திப்பின் போது  அமைச்சர் மங்கள சமரவீர கருத்து வெளியிடுகையில், ஐதேகவில் பெரும்பான்மையானோரின் ஆதரவை சஜித் பிரேமதாச பெற்றிருப்பதாகவும், அவரை விரைவில் ஐதேமுவின் அதிபர் வேட்பாளராக ஐதேக அறிவிக்கும் என்றும், கூறியதுடன், சிறுபான்மையின மக்களும் கட்சிகளும் அவரது வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கோரினார்.

அதற்கு கூட்டமைப்பு தலைவர்கள் பதிலளிக்கையில், தேசியப் பிரச்சினை தொடர்பான எந்தப் புரிதலையும் சஜித் பிரேமதாச கொண்டிருக்கவில்லை என்றும், அதற்கு அவர் எந்த தீர்வையும் முன்மொழியவில்லை என்றும் தெரிவித்தனர்.

இதன்போது, சஜித் பிரேமதாசவுக்கு, சுமந்திரன் எதிராக இருப்பதாகவும், சஜித் பிரேமதாச போட்டியிடுவதற்கு எதிராக கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களின் ஆதரவை அவர் திரட்டியிருப்பதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர குற்றம்சாட்டினார்.

அந்தக் குற்றச்சாட்டை நிராகரித்த சுமந்திரன்,  ஒரு தனிநபரின் கருத்தினால், தனது கட்சி திசை திருப்பப்படவில்லை என்று குறிப்பிட்டார்.

அத்துடன்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சஜித் பிரேமதாசவுக்கும்  இடையிலான பேச்சு இதுவரை வெற்றியளிக்கவில்லை எனவும், அவருக்கு வாக்களிப்பதன் மூலம், வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் வாக்காளர்களுக்கு என்ன கிடைக்கும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கேள்விக்கு சஜித் பிரேமதாசவினால் தெளிவாக பதிலளிக்க முடியவில்லை என்றும் கூறினார்.

அப்போது, சஜித் பிரேமதாச தரப்பில் பங்கேற்ற அமைச்சர்கள், தமிழ் வாக்காளர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை விளக்குமாறு கேட்டனர்.

அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள், 2000 ஆம் ஆண்டில் முன்னாள் அதிபர் சந்திரிகா குமரதுங்காவும், அனைத்துக் கட்சி மாநாட்டுக்குப் பின்னர் மகிந்த ராஜபக்சவும் தீர்வாக வாக்குறுதி அளித்ததை விட வேறு எதையும் அவர்கள் எதிர்பார்க்கமாட்டார்கள் என பதிலளித்துள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிபர் வேட்பாளராக போட்டியிட்டால் அவரை ஆதரிக்க தாம் தயாராக இருப்பதாகவும், ஏனென்றால், அவர் தேசியப் பிரச்சினையைப் பற்றிய தெளிவான புரிதலைக் கொண்டிருக்கிறார் என்றும், தேசிய பிரச்சினையை தீர்க்கும் விடயத்தில் பல ஆண்டுகளாக அவர் கருத்துக்களை வெளியிட்டு வந்திருக்கிறார் என்றும்  கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சஜித் பிரேமதாசவை மீண்டும் சந்தித்துப் பேச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளது.

No comments

Powered by Blogger.