Header Ads



எம்மை திட்டினாலும், எம்மிடம் குறைகள் இருந்தாலும், சுதந்திரம் உள்ளது என நினைவில் கொள்ளுங்கள்

அனைவரும் ஒன்றாக பணியாற்றியதால், தற்போது சுதந்திரமாக பேசக் கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முழுமையான ஜனநாயக சுதந்திரம் இலங்கையில் இருப்பதாகவும் அதனை தவறாக பயன்படுத்தும் போதும் அழுத்தங்கள் கொடுக்கப்படுவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் வெள்ளை வான் இல்லை. வெள்ளை வான் கலாசாரம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பொலிஸார் சட்டத்தை அமுல்படுத்துகின்றனர். அப்படியென்றால் நாம் சுதந்திரமாக வாழ முடியும்.

இது மாத்திரமல்ல, இந்த திருத்தங்களை நாங்கள் முழுமையாக அமுல்படுத்தினால், சுதந்திரம் மேலும் வலுவடையும். அமைச்சரவை முற்றாக நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டி வரும். நாடாளுமன்ற கூட்டங்கள் தற்போது பகிரங்கமாக ஒளிப்பரப்படுகிறது. எதனையும் மறைப்பதில்லை. மறைக்கவும் போவதில்லை.

தற்போது ஊடக சுதந்திரம் இருக்கின்றது. ஊடகங்களுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுவதில்லை. அந்த சுதந்திரத்தை நாம் பாதுகாக்க வேண்டும். தகவல் அறியும் சுதந்திரம் இருக்கின்றது. மனித உரிமை ஆழணைக்குழு, உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் என அனைத்து நீதிமன்றங்களும் சுதந்திரமாக செயற்படுகின்றன. சிறுபான்மை பலத்துடன் இவற்றை எம்மால் மேற்கொள்ள முடிந்தது. நல்லிணக்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும்.

கல்வி, சுகாதாரம், கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு பெருந்தொகை பணத்தை முதலீடு செய்து முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஒரு உதாரணம் சுரக்சா, அனைத்து பிள்ளைகளுக்கும் நாங்கள் காப்புறுதியை வழங்கியுள்ளோம். இருதய நோயாளிகளுக்கு ஸ்டென்ட் இலவசமாக வழங்கப்படுகிறது. அம்புலன்ஸ் சேவை உள்ளது.

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கிடைத்துள்ள சுதந்திரத்தை முன்னெடுத்துச் செல்ல அடுத்த சில வருடங்கள் முக்கியமானவை. வருடங்கள் முக்கியம் என்றால், தற்போதைய அரசாங்கம் ஆட்சியில் இருக்க வேண்டும் . அரசாங்கம் ஆட்சியில் இருக்க வேண்டுமாயின் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். எமது வேட்பாளராக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச நிறுத்தப்பட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் வெற்றியுடன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். பெரும்பான்மை பலத்தை பெற வேண்டும்.

சிறுபான்மை அரசாங்கமாக செய்ய முடியாதவற்றை பெரும்பான்மை அரசாங்கமாக செய்ய முடியும். இந்த சுதந்திரத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள். எம்மை எப்படி திட்டினாலும் எம்மிடம் குறைகள் இருந்தாலும் சுதந்திரம் இருக்கின்றது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எம் மீது குறைக் கூற சுதந்திரம் இருக்கின்றது. அது அவர்களின் சுதந்திரம். அந்த சுதந்திரத்தை நாங்கள் பறிக்கவில்லை. மக்களின் அந்த சுதந்திரத்தை ஏற்றுக்கொள்கிறோம். நாட்டில் உள்ள அனைவரும் இலங்கையர்கள் என்று நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் எனவும் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.