Header Ads



அபிவிருத்தியைவிட நிம்மதியான வாழ்க்கையையே, முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கிறது - ஹக்கீம்

அபிவிருத்தியை விட நிம்மதியான வாழ்க்கையையே இன்று முஸ்லிம் சமூகம் எதிர்பார்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

சீர்குழைந்துள்ள இயல்பு வாழ்க்கையை மீட்டிக்கொள்வதற்கான தருணமாகவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முஸ்லிம் மக்கள் பயன்படுத்தி கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குருநாகல் மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தங்களது தெரிவு தொடர்பில் குழப்பங்கள் இருந்தால், தமது தீர்மானம் எந்த விவகாரங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை ஆராயவேண்டும்.

அந்த தெரிவு முஸ்லிம்களைப் பொறுத்தவரை தனி நபர்களைப் பொறுத்த விடயமல்ல.

சமூகம் சார்ந்த முடிவுகளையே நாங்கள் எடுத்தாக வேண்டியிருக்கிறது.

முஸ்லிம் சமூகத்தை நாட்டிலுள்ள ஏனைய சமூகங்கள் அச்சத்தோடும் சந்தேகத்தோடும் பார்க்கின்ற ஒரு நிலவரத்தை உருவாக்குவதற்கு சில சக்திகள் திட்டமிட்டு செயற்பட்டன.

இதன் விளைவாக எமது சமூகம் பாரிய நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டது.

இனியும் இந்தமாதிரியான நெருக்கடிகள் வரமாட்டாது என்பதற்கு எந்தவித உத்தரவாதங்களும் இல்லை.

இப்படியானதொரு சூழலில்தான் நாங்கள் தீர்மானமிக்க இன்னுமொரு தேர்தலுக்கு முகம்கொடுக்கவுள்ளோம்.

இப்படியான சூழலில் எங்களுடைய வேட்பாளர் தெரிவில் நாங்கள் தெளிவாக இருக்கவேண்டும்.

எங்களால் மட்டும்தான் ஒழுக்கத்தையும், புதுவிதமான அரசியல் கலாசாரத்தையும் உருவாக்க முடியும்.

நாங்கள்தான் எல்லாவற்றையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் என்ற சொல்லி திரியும் ஆட்களினால் அவற்றை செய்ய முடியாது.

நாங்கள் பீதியும் பயமும் உள்ளதொரு வாழ்க்கைக்கு மீண்டும் செல்ல முடியாது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.