Header Ads



என்னை முஸ்லிம் ஆளுநர் என்று கூறுகின்றனர்,, இது தவறானதாகும் - முஸம்மில்

நான் மதத்தால் முஸ்லிமாக இருந்தபோதிலும் முஸ்லிம்களுக்கான ஆளுநராக பதவி வகிக்கவில்லை. இனம், மதம், மொழி கடந்த மேல்மாகாண ஆளுநராகவே நியமிக்கப்பட்டுள்ளேன். மேல் மாகாணத்தில் வாழும் சகல இனமக்களுக்குமான ஆளுநராகவே உள்ளேன் எப்போதும் நான் இனம், மதம் கடந்த மனிதனாகவே செயற்பட்டுவருகின்றேன். சிலர் என்னை முஸ்லிம் ஆளுநர் என்று கூறுகின்றனர். இது தவறான எடுகோளாகும் என மேல்மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தினகரன் வார மஞ்சரிக்கு அளித்த நேர்காணலின்போது தெரிவித்தார். ஆளுநர் முஸம்மில் அளித்த நேர்காணல் விபரம் வருமாறு:-  

கேள்வி – முக்கியமான தேர்தலொன்று நடைபெற விருக்கும் இன்றைய சூழ்நிலையில் உங்களது ஆளுநர் செயலகப் பணிகளை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?  

பதில் – நான் மேல்மாகாண ஆளுநராக செயற்படுகின்றேன். தேர்தல் சட்ட விதிகள் எவ்வாறாக உள்ளதோ அதற்கு குந்தகம் ஏற்படக் கூடிய எந்த நடவடிக்கைகளுக்கும் இடமளிக்கப்போவதில்லை. நான் இன்று ஒரு பொது மகன். எனது பதவிக் காலத்தில் கட்சிக் கண்ணோட்டத்தில் எந்த விடயத்தையும் நோக்கப்போவதில்லை. மாகாணத்தின் அபிவிருத்திக்கான சேவைகளை உரிய விதத்தில் நிறைவு செய்வதற்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றேன்.  

மேல்மாகாணம் கொழும்பு, கம்பஹா, களுத்துறை என்ற மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கியதாகும். இதில் சனத்தொகை கூடிய மாவட்டம் கம்பஹா மாவட்டமாகும் அதே போன்று சனத்தொகை குறைந்த மாவட்டம் களுத்துறை கொழும்பு நாட்டின் தலைநகராகி அமையப் பெற்றுள்ளது. இந்த மூன்றையும் கவனத்தில் கொண்டு எந்தவொரு மாவட்டம் தொடர்பிலும் பாரபட்சமாக நடந்து கொள்ளமாட்டேன். எனது பணியை அரசியலுக்கு அப்பால் நின்றே முன்னெடுத்து வருகின்றேன்.  

கேள்வி :- உங்களது வேலைத் திட்டங்களில் கூடுதல் முன்னுரிமை கொடுக்கும் திட்டம் குறித்துக் கூறமுடியுமா?  

பதில் :- இதே கேள்வியை யார் கேட்டாலும் நான் அளிக்கும் பதில் கல்விக்குத்தான் முன்னுரிமை என்பதுதான். முதலாவதும் கல்வி, இரண்டாவதும் கல்வி. மூன்றாவதும் கல்விதான், அதன் பின்னரே வேறு திட்டங்கள் குறித்து யோசிப்பேன். நான் பெற்றோர்களிடம் வலியுறுத்துவது, உங்கள் பிள்ளைகளுக்கு கல்வியை புகட்டுவதற்கே முன்னுரிமை வழங்குங்கள் என்பதுதான். ஆண் – பெண் வித்தியாசம் பார்க்க வேண்டாம். எல்லாப் பிள்ளைகளுக்கும் கல்வியை புகட்டுங்கள்.   

மற்றொரு விடயத்தையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஆத்மீக நெறி கலந்த கல்விக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அப்போது தான் ஒழுக்க விழுமியம் கொண்ட சமுகத்தை எம்மால் கட்டியெழுப்ப முடியும். ஒழுக்க விழுமியமின்றி எந்தளவுதான் கல்வியில் உயர்ந்தாலும் அது விழலுக்கிரைத்த நீர் போன்றாகிவிடும் என்பதை மறந்துவிடக் கூடாது. ஆன்மிக நெறி என்பது அவரவர் மதங்களை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கலாம். தான் பின்பற்றும் மத விழுமியங்களின் அடிப்படையில் செயற்படும் போது மனங்கள் மாசற்றதாக மேன்மையடைய முடியும்.  

கேள்வி – சிலர் உங்களைப் பற்றி விமர்சனக் கண்ணோட்டத்தில் கருத்துத் தெரிவிக்கின்றனர். இது குறித்து அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?  

பதில் – நான் விமர்சனங்கள் பற்றி அலட்டிக் கொள்ளமாட்டேன். எனது வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ சவால்களைச் சந்தித்து கரை சேர்ந்தவன். விமர்சனங்களைக் கண்டு பயப்பட மாட்டேன். எனக்கு எது சரியெனப்படுகின்றதோ அதைச் செய்ய ஒருபோதும் தயங்க மாட்டேன்.  

என்னை முஸ்லிம் ஆளுநர் எனச் சிலர் அடைமொழியிட்டுக் காட்ட முற்படுகின்றனர். நான் மேல் மாகாணத்தின் முஸ்லிம்களுக்கான ஆளுநர் அல்லன். இந்த மாகாணத்தில் வாழும் சகல இனமத மக்களுக்குமான ஆளுநராகவே செயற்பட்டுவருகின்றேன்.  

எனது பணி இனம், மதம், மொழி கடந்த பணியாகும். மாகாணத்தில் வாழும் சகல இன மக்களுக்காகவும் பாரபட்சமின்றி எனது பணியை முன்னெடுத்துவருகின்றேன். நான் பிறப்பால் முஸ்லிமாக இருக்க முடியும். ஆனால் இந்த நாட்டின் பிரஜையாகவே முதன்மைப்படுத்திக் கொண்டுள்ளேன்.  

எப்போதும் நான் ஒரு மனிதன் என்றே சிந்திக்கின்றேன். மனிதனாக கருதி சகல மக்களுடனும் மனிதாபிமானத்தோடு வாழவே விரும்புகின்றேன். மதம் இரண்டாம் பட்சமானது முஸ்லிம் தாய் – தந்தையர்க்குப் பிறந்ததால் நான் முஸ்லிம். அதே சமயம் இந்த மண்ணில் பிறந்த மனிதர்களில் நானும் ஒருவன் என்பதே யதார்த்தமானது. அதன் பிரகாரம் அனைத்து இன மக்களுடனும் இணைந்து, இணங்கி வாழவே நான் என்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளேன்.  

இந்த மண்ணில் சமாதான சகவாழ்வு நிலைபெறவேண்டும் என்பதே எனது இலட்சியமாகும். நாம் ஒன்று பட்டுச் செயற்பட்டால் எந்தச் சவாலையும் எம்மால் வெற்றி கொள்ளமுடியும். கடந்த காலங்களில் இன, மத ரீதியாக பிளவுபட்டதால் எண்ணற்ற இன்னல்களுக்குள் சிக்கி கரைசேர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டோம். இந்த அவலம் தொடரக் கூடாது. முதலில் நாம் மனிதர்களாக வாழப்பழகுவோம். மதங்கள் ஒருபோதும் பிரிவினையை ஆதரிக்கவில்லை. நாம் தான் மதங்களாக பிளவுபட்டுள்ளோம்.  

நாம் அனைவரும் இணங்கியும், இணைந்தும் வாழ்வதன் மூலம் நல்லிணத்தையும், சமாதான சகவாழ்வையும் நிலைபெறச் செய்ய முடியும். இந்த நல்லெண்ணம் ஒவ்வொருவர் மனங்களிலும் ஏற்பட வேண்டும். மனங்கள் வெல்லப்பட்டால் எந்தவொரு சக்தியாலும் எம்மை அழித்து விடமுடியாது என்பதை மனதில் இருத்திச் செயற்படுவோம்.    

எம்.ஏ.எம். நிலாம்

No comments

Powered by Blogger.