Header Ads



சஜித்தின் பக்கம் சரியவுள்ள, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் - திஸ்ஸ அத்தநாயக்க தகவல்

சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளரானால் இணைந்து செயற்பட முடியும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் தன்னிடம் கூறியதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, அடுத்த மூன்று நான்கு வாரங்களிலும் முக்கியமான மாற்றங்கள் பல இடம்பெறும் என்றும் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் அழைப்பை ஏற்று மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துள்ள கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

சஜித் எனக்கு விடுத்த அழைப்புக்கு அமைய கட்சியின் குறைபாடுகளை இனங்கண்டு கட்சியை கொண்டு செல்வதே எனது கடமை. அரசியல் காரணிகளுக்காக எம்மை விட்டு விலகி சென்றவர்களை மீண்டும் இணைப்பதே எனது கடமை. எனது கடமையை நான் சரியாக செய்து முடிப்பேன். 

இப்போது எமக்குள்ள பிரதான இலக்கு என்னவென்றால் சஜித் பிரேமதாசாவை ஜனதிபதியக்குவதே. அவர் இளம் தலைவர். ஆகவே அவரால் சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும். ஆகவே அதனை இலக்காக கொண்டே நாம் செயற்பட வேண்டும். இப்போதுள்ள நேரத்தில் எமக்குள்ள வேலைத்திட்டம் என்னவென்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

ஐக்கிய தேசிய கட்சியை விட்டு வெளியேறிய தயாசிறி ஜெயசேகர போன்றவர்கள் மற்றைய அனைவருக்கும் நாம் அழைப்பு விடுக்கிறேன். அவர்களும் எம்முடன் கைகோர்க்க வேண்டும்.

சஜித் பிரேமதாச வேட்பாளரானால் இணைந்து செயற்பட முடியும் என கூறிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் என்னுடன் பேசினார்கள். அடுத்த மூன்று நான்கு வாரங்களிலும் முக்கியமான மாற்றங்கள் பல இடம்பெறும். இது அரசியல் கட்சி மாறுதல்கள் அல்ல, நாட்டுக்காக கைகோர்க்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் கூறினார்.

No comments

Powered by Blogger.