Header Ads



"ஜனநாயக தேசிய முன்னணி"க்கான உடன்படிக்கை புதன் கைச்சாத்து - தொண்டமானும் இணைவாரா..?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவாகவுள்ள ‘ஜனநாயக தேசிய முன்னணிக்கான உடன்படிக்கை எதிர்வரும் புதன்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளது. அதற்கான யாப்பு இறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகள் ஐ.தே.கவுக்கு வழங்கப்படவுள்ளன.  

ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே செயற்படவுள்ளார். 
இந்த உடன்படிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி, ஜாதிக ஹெல உருமய, தமிழ் முற்போக்குக் கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கவுள்ள மேலும் பல தரப்பினரும் கைச்சாத்திடவுள்ளனர். 

இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாசவிடம் முன்வைக்கவுள்ள முக்கிய கோரிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக எதிர்வரும் 01 ஆம் திகதி செவ்வாக்கிழமை தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அரசியல் உயர்பீடம் கூடவுள்ளது. 

செவ்வாக்கிழமை மு.ப. 11 மணிக்கு கொழும்பில் அமைந்துள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைமையகத்திலேயே கூட்டணியின் உயர்பீடம் கூடவுள்ளது.   மேலும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. 

இதற்காக ஊவா மாகாண அமைச்சரும், இ.தொ.காவின் உப தலைவருமான செந்தில் தொண்டமான் மற்றும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோரை கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. 

ஐ.தே.கவுடன் இணைவது குறித்து இ.தொ.கா. பேச்சுவார்த்தை நடத்தியுள்ள போதிலும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சில உறுப்பினர்கள் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக அறிய முடிகிறது. 

No comments

Powered by Blogger.