Header Ads



ஹேமசிறி, பூஜித மீது கொலைக் குற்றச்சாட்டுகள்

முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ மற்றும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் மீது கொலை மற்றும் கொலைச் சதி குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ மற்றும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணையை மீளாய்வு செய்யக் கோரி, கொழும்பு மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நேற்று இடம்பெற்றது.

இந்த விசாரணைகளில் சட்டமா அதிபர் தரப்பில் முன்னிலையான பிரதி சொலிசிற்றர் ஜெனரல் திலீப பீரிஸ், முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ மற்றும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் மீது, கொலை மற்றும் கொலைச் சதிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன என்று தெரிவித்தார்.

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தாக்குதல்கள் குறித்து, இவர்கள் இருவருக்கும் அரச புலனாய்வு சேவையினால் திரும்பத் திரும்ப எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதும், உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினர் என்றும், பிரதி சொலிசிற்றர் ஜெனரல் திலீப பீரிஸ், கூறினார்.

காவல்துறை மா அதிபருக்கு 131 தடவைகளும், முன்னாள் பாதுகாப்புச் செயலருக்கு 97 தடவைகளும், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தொடர்பான புலனாய்வு எச்சரிக்கைகள், அரச புலனாய்வு அமைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த எச்சரிக்கைகளை கவனத்தில் கொள்ளாமல், கொலைகள் இடம்பெறுவதற்கு காரணமாக இருந்துள்ளனர் என்ற அடிப்படையிலேயே இவர்களுக்கு எதிராக கொலை மற்றும் கொலைச் சதி வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும், பிரதி சொலிசிற்றர் ஜெனரல் திலீப பீரிஸ், தெரிவித்துள்ளார்.

கார்வண்ணன்

1 comment:

  1. Scape goats. Same charges should be laid against Ranil and Maithri.

    ReplyDelete

Powered by Blogger.