Header Ads



"அரச தலைவர்கள் கேலிக்கூத்து, மக்களுக்கு சலிப்பு, நல்லாட்சி பொல்லாத ஆட்சியாகிவிட்டது" - மகிந்த

ஐக்கிய தேசியக் கட்சி ஒரு வேட்பாளரை தெரிவுசெய்யும் முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தமது பயணத்தை நிறைவுசெய்திடும் என எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் மாலைதீவிலும், இன்னுமொருவர் குருநாகலையிலும் இருப்பதாக தெரிவிக்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார், “30 வருடங்களாக இடம்பெற்ற போரினை முடிவுக்குக் கொண்டுவந்து மலரச்செய்த சமாதானமானது கடந்த வருடங்களாக காணாமலாக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21ம் திகதி ஏற்பட்ட அழிவுபோல இன்னுமொரு அழிவுக்கு மீண்டும் இடமளிக்கக்கூடாது. அதற்கு தேசிய பாதுகாப்பு மிகமுக்கியமானதாகும். தேசிய பாதுகாப்பு மற்றும் மக்களின் பாதுகாப்பு குறித்து உறுதிப்படுத்த எவராலும் இன்று முடியாதிருக்கிறது.

இந்த அரசாங்கம் அதனை உறுதிசெய்யாது. பொருளாதாரம் வீழ்ந்துள்ளது, முதலீட்டாளர்களும் வருவதில்லை. இருக்கும் முதலீட்டாளர்கள் வெளியேறுகின்றனர். முதலீட்டார்கள் இங்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது இந்த அரசாங்கத்திற்கு பிரச்சினையாகாது.

நாட்டை ஆட்சிசெய்கின்ற இடையே இப்படியான கேலிக்கூத்துக்களையும் அரசாங்கம் அரங்கேற்றுகிறது. அரச தலைவர்கள் கேலிக்கூத்துக்களை செய்கின்றனர். நாட்டில் தலைவர்கள் இருக்கின்றார்களா இல்லையா என்பதே தெரியவில்லை.

நியமிக்கப்பட்ட தலைவர்கள் அவர்களை நியமித்த மக்களுக்கே சலிப்பாகிவிட்டது. அவர்களால் ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் அவர்களுக்கே இன்று பொல்லாத ஆட்சியாகிவிட்டது.

இந்த பிரச்சினையிலிருந்து நாட்டை வெகுவிரைவில் மீட்டெடுத்து அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச்செல்வது எமது கடமை என்பதை தெரிவிக்கின்றேன்.

நாட்டை பாதுகாக்கின்ற ஒழுக்கத்திற்கு இட்டுச்செல்கின்ற அனைத்துக் கட்சியினாலும் சர்வ மதங்களும் ஏற்கின்ற ஒரு சிறந்த தலைவர் ஒருவரை நீங்கள் அடையாளம் கண்டிருக்கிறரீகள் என்பதை நினைவுப்படுத்துகின்றேன்.

மக்கள் எதிர்பார்க்கும் நாட்டின் பாதுகாப்பு, சமாதானம், ஐக்கியம் அனைத்தும் அந்த வேட்பாளரால் நிறைவேற்ற முடியும் என்பதில் சந்தேகம் இல்லை. ஐக்கிய

தேசியக் கட்சியில் வேட்பாளர் ஒருவரை தெரிவுசெய்ய முடியாமல் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. வேட்பாளர் மாலைதீவிலும், இன்னுமொரு வேட்பாளர் குருநாகலையிலும் இருப்பதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் அவர்களால் ஒரு நபரை தெரிவுசெய்வதற்கு முன்னர் நாங்கள் எமது பயணத்தை நிறைவுசெய்துவிடுவோம்.” என கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.