September 29, 2019

எந்த வேட்பாளர், தீங்கைக் குறைத்து வைத்திருக்கின்றார்...?

ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இதுவரை தனது வேட்பாளர் நியமனத்தைப் பரபரப்பாக்கி வந்த ஐக்கிய தேசிய கட்சி, இப்போது ஒரு முடிவுக்கு வந்து அமைச்சர் சஜித் பிரேமதாசவின் விருப்பத்திற்கு இடமளித்திருக்கின்றது.  

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டுவதுடன், பொதுத் தேர்தலையும் வெற்றிகொள்வதாகத் தெரிவித்து வந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதியுச்ச விட்டுக்கொடுப்பைச் செய்து கட்சியின் கட்டுக்கோப்பைக் காப்பாற்றியிருக்கிறார். அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பெயரை, கட்சியின் செயற்குழுவில் பிரதமரே பிரேரித்திருக்கிறார். அந்தப் பிரேரணையைச் செயற்குழு அங்கீகரித்திருக்கிறது.  

இதன்படி, இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குகிறார். ஐக்கிய தேசிய கட்சியின் வரலாற்றில், கடந்த 25ஆண்டுகளுக்குப் பின்னர், வயது குறைந்த ஒரு வேட்பாளர் போட்டியிடுகிறார். ஆனால், அதுவும் ஐக்கிய தேசிய கட்சியின் சின்னத்திலா என்பதில் முடிவில்லாத ஒரு நிலை இருக்கின்றது. அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தந்தையார் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச 1993இல் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து டி.பீ.விஜேதுங்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றிருந்த 1994காலகட்டத்திற்குப் பின்னர் ஐக்கிய ​தேசிய கட்சியின் சார்பில் ஜனாதிபதியொருவர் தெரிவுசெய்யப்படவில்லை. 2010, 2015ஆகிய வருடங்களில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடாத நிலையில், அன்னம் சின்னத்தில் போட்டியிட்ட பொது வேட்பாளருக்கேஅக்கட்சி ஆதரவு வழங்கியது. அதன்படி, 2010இல் சரத் பொன்சேகாவிற்கும், 2015இல் மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு வழங்கியது.  

எனவே, இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் யானைச் சின்னத்தில் சொந்தக் கட்சியைச் சார்ந்த ஒருவரே களமிறங்க வேண்டும் என்பதில் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் விருப்பம் கொண்டிருந்தனர். இந்த நிலையில், பங்காளிக் கட்சிகளினதும் சார்பானவர் என்பதற்காகப் பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதுதான் சரியானது என்று அமைச்சர் சஜித் பிரேமதாச கருதக்கூடும். எவ்வாறாயினும், அவரைக் களமிறக்க வாய்ப்பு கிடைத்தமையே பெருவெற்றியாகும் என்கிறார்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள். இந்த வெற்றியின் மூலம், கடந்த நான்காண்டுகால ஆட்சியில் நிலவிய குறைபாடுகள், சில வேளை மக்களால் மறக்கடிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதவும் வாய்ப்பிருக்கின்றது.  

ஜனாதிபதி தேர்தல் பற்றிய செய்திகள் வெளியானபோது, கடந்த காலத்தின் செயற்பாடுகளை மக்கள் அசைபோட்டுப் பார்க்க முனைந்தபோதுதான், வேட்பாளர் சர்ச்சை உக்கிரமடைந்தது. இப்போது சர்ச்சை தணிந்திருக்கின்றது. என்றாலும், பிரசார உத்திகள் மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவனவாகத்தான் உள்ளன.  

அமைச்சர் சஜித் பிரேமதாச வெற்றியீட்டியதும் எதிரணியினருக்குச் சிறைச்சாலை உடையான 'ஜம்பரை' அணிவிக்கப்போவதாக, ஐக்கிய தேசிய கட்சியினர் கூறத்தொடங்கியுள்ளனர். மாறாக, அவ்வாறு சொன்னவர்கள்தான் ஜம்பர் அணிய வேண்டிவரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ பதிலடி கொடுத்திருக்கிறார். இதனை அவதானித்துள்ள பிரதமர், ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளரின் வெற்றியை இலக்காகக்கொண்டு கௌரமான பிரசாரத்தை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறார். பிரதமரைப் பொறுத்தவரைத் தாம் ஒரு கனவான் அரசில்வாதி என்பதைப் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்திருக்கிறார். கட்சியின் ஜனநாயகப் பண்பினை மதிக்கும் ஒருவராக மாத்திரமன்றி, தேசிய அரசியல் நீரோட்டத்திலும் தான் ஒரு கனவான் என்பதை நிரூபித்திருக்கின்றார்.  

அமைச்சர் சஜித்தைப் பொறுத்தவரையிலும் அவர் பிரதமரின் அறிவுறுத்தலுக்குப் பின்வாங்காதவர் என்றே சொல்ல வேண்டும். அவரது மக்கள் பணியைப் பிரதமரே வெகுவாகப் பாராட்டியிருக்கிறார். கொழும்பில் பிரதமரின் பாராட்டுதலைப் பெற்றுக் கொண்டு பதுளைக்குச் சென்றவர்தான், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் விருப்பத்தை பதுளை கூட்ட மேடையில் அறிவிக்கின்றார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டங்களில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலரும்கூட இணைந்து சென்றிருந்தார்கள். இஃது ஒரு வகையில், அமைச்சர் சஜீத் பிரேமதாசவை தேர்தல் சந்தைப்படுத்தல் என்றும் சிலர் குறிப்பிட்டிருந்தார்கள்.  

எவ்வாறாயினும், ஜே.ஆர்.ஜயவர்தனவின் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையின் கீழ் தனிப்பட்ட ஆளுமைக்குத்தான் அதிக எதிர்பார்ப்பும் நம்பிக்ைகயும் இருந்தது. அதிலும், சிறுபான்மையினரின் பாதுகாப்புக் கவசமாகவே நிறைவேற்று அதிகாரம் நோக்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பிலேயே 2000ஆம் ஆண்டில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்குச் சிறுபான்மை மக்கள் ஆதரவு வழங்கினார்கள். எனினும், நிறைவேற்று அதிகாரத்தால், எதிர்பார்த்த எதுவும் நிறைவேறவில்லை; நிறைவேற்றப்படவும் இல்லை.  

2005இல் மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக வந்தால், அவரை மோதலுக்கு இழுத்து வெற்றியடையலாம் என்ற தமிழர் தரப்பின் எதிர்பார்ப்பும் விழலுக்கு இறைத்த நீரானது.  

2010இல் அவரை சர்வதேசத்தின் பாதுகாப்பு வலையமைப்பில் சிக்க வைத்துக் காரியமாற்றலாம் என்ற எதிர்பார்ப்பும் தவிடுபொடியானது. பின்னர், 2015இல் மைத்திரி, ரணில் அரசாங்கத்தில் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வினைக் கண்டுவிடலாம் என்று நம்பிக்ைக வைத்தபோதிலும், அந்த நம்பிக்ைகயும் வீணடிக்கப்பட்டது.  

இப்போது மீண்டும் ஒரு தேர்தலை சிறுபான்மைச் சமூகம் சந்திக்கின்றது. சிறுபான்மைச் சமூகம் மாத்திரமன்றி முழு நாடும் ஓர் அரசியல் சவாலை எதிர்நோக்கியிருக்கின்றது. எந்த வேட்பாளர் தீங்கைக் குறைத்து வைத்திருக்கின்றார்? என்பதுதான் அது. தமிழ் மக்கள், தமிழ்பேசும் மக்கள் மாத்திரமன்றி, முழு நாட்டு மக்களும் தீயது குறைந்த ஒருவரைத் தேடும் நிலையே ஏற்பட்டிருக்கின்றது.  

அமைச்சர் சஜித் பிரேமதாசவை தீயது குறைந்த ஒருவரெனச் சொல்வதா, அல்லது பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவைச் சொல்வதா? அல்லது மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தீயது குறைந்த ஒருவர்தானா? என்பதே இன்று மக்கள் மத்தியில் உலாவரும் கேள்வி!  

இந்தக் கேள்விக்குப் பதிலைத் தேட வேண்டுமென்றால், நிறைவேற்றதிகாரம் முழுவதுமாக நடைமுறையில் இருந்த காலத்திற்கும் பத்தொன்பதாவது திருத்தச் சட்டம் கொண்டு வந்த காலத்திற்கும் இடையிலான வித்தியாசத்தைச் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் நல்லவர் யார் என்ற கேள்வி எழுந்திருக்க வேண்டும். ஏனெனில், 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பானது, ஒரு தனிமனிதனின் ஆளுமையில் தங்கியிருந்தது. அந்த ஆளுமையைப் பத்தொன்பதாவது திருத்தச்சட்டம் தகர்த்திருக்கிறது என்றால், இன்றைய காலகட்டத்தில், ஆணைப் பெண்ணாகவோ, பெண்ணை ஆணாகவோ மட்டும் மாற்ற முடியாத ஜனாதிபதி முறைமை இல்லாமல் செய்யப்பட்டிருக்கும் வேளையில், வேட்பாளர்கள் மீதான கரிசனை அவசியமானதா? என்று தெரியவில்லை.  

கடந்த வாரம் அவசர அவசரமாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், நிறைவேற்றதிகாரத்தை முற்றாக இல்லாமற் செய்வதற்கான பிரேரணை தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது. அப்படியென்றால், பத்தொன்பதாவது திருத்தச் சட்டம் என்ன செய்திருக்கிறது? என்ற கேள்வி எழலாம். உண்மையில், நிறைவேற்றதிகாரத்தை இல்லாமல் செய்யும் அவசர முயற்சிக்குத் தாம் உடன்பட முடியாது என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்திருப்பதும் இங்குக் கவனிக்கத்தக்கது. ஒன்றில் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்க வேண்டும், அல்லது பிரதமருக்கு (பாராளுமன்றத்திற்கு) இருக்க ​வேண்டும். பத்தொன்பதாவது திருத்தச் சட்டம் அங்குமிங்கும் பகிர்ந்து சீரழித்திருக்கிறது என்கிறார்கள் சிலர். ஏப்ரல் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைக் கூடத் தடுக்க முடியாது போனமைக்கு இந்தப் 19ஆவது திருத்தச் சட்டமே காரணம் என்ற கருத்தும் இருக்கிறது. அதனால்தானோ என்னவோ, அமைச்சர் சஜித் இதனை அவ்வளவாக விரும்பவில்லைபோலும்.  

அவரைப்பற்றி மேலும் சொல்வதாக இருந்தால், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், அநுரகுமார திசாநாயக்கவுக்கு முன்பே அரசியலுக்கு வந்தவர். 1994ஆம் ஆண்டு கட்சியின் அமைப்பாளராகப் பொறுப்பேற்றுப் படிப்படியாக செயற்பாட்டு அரசியலில் ஈடுப்பட்டு 2000-ஆம் ஆண்டில் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டவர். ஒரு தேசிய கட்சியில் பிரதித் தலைவராகவும் அமைச்சராகவும் செயற்பட்டு அனுபவம் பெற்றவர். கூடவே தந்தையாரின் அரசியல் சாணக்கியத்தையும் சேர்த்து வைத்திருப்பவர். அடிமட்ட மக்கள் மத்தியில் சென்று பணியாற்றுபவர். அதனால், அனைவராலும் ஏற்றுக்ெகாள்ளப்படுவார் என்று நம்பப்படுபவர். எதுவானாலும், நாட்டின் தேசிய இனப்பிரச்சினை பற்றிய தெளிவான நோக்குடையவரா? என்பது இன்னமும் தெரியவில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைக்குப் பிளவுபடாத நாட்டில், ஒற்றையாட்சியின் கீழ் அதியுச்ச அதிகாரப் பகிர்வு வழங்கப்படும் என்கிறார். நாட்டின் சகல தரப்பினரின் நம்பிக்ைக யையும் வென்றெடுத்துப் பிரச்சினையைத் தீர்த்துவைப்பேன் என்று மட்டும் சொல்கிறார். அவரைப் பொறுத்தவரை, பெரும்பான்மைச் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றுக்ெகாள்வது முதன்மையாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது. எந்தவொரு வேட்பாளராலும் தனியே சிங்கள மக்களின் வாக்குகளாலோ சிறுபான்மை மக்களின் வாக்குகளினாலோ ஜனாதிபதியாக வந்துவிட முடியாது.  

ஆகவே, அவர்கள் இந்த இருசாராரையும் சமாளித்துக்ெகாண்டு வாக்குகளைப் பெற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியே உள்ளனர். தற்போதைக்கு எட்டுப்பேர் போட்டியிடுவது உறுதியாகியிருந்தபோதிலும், மூன்றுபேர் மட்டுமே நேரடிப் போட்டியாளர்களாக வர முடியும். அதுவும் இருவர் கணிசமான வாக்குகளைப் பெற முடியாத நிலையில், மூன்றாவதாக ஒருவரும் வரிசையில் நிற்க முடியும்.  

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, இந்தத் தேர்தலில் களமிறங்கும் அரசியல் புதுமுகமாக இருக்கிறார். அமைச்சர் சஜித் பிரேமதாச ஒரு முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் என்ற பின்புலத்தைக்ெகாண்டிருப்பதைப்போன்று, கோட்டாபய ராஜபக்‌ஷ ஒரு முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர் என்ற அந்தஸ்தையும் பின்புலத்தையும் கொண்டிருப்பதுடன் அமைச்சர்கள் பலரின் சகோதரராகவும் விளங்குகிறார். ஓர் இராணுவ அதிகாரியாக மாத்திரமல்லாது, அரச நிர்வாகியாகத் தம் திறமைகளைக் காண்பித்தவர். என்றாலும், அவரது கடுமையான நிர்வாகச் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் சிலாகித்துப் பேசப்பட்டாலும், தமிழ் மக்கள் அவரை வேறுவிதமாகவே நோக்குகிறார்கள். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததில் கோட்டாபயவுக்குப் பெரும் வகிபாகம் இருப்பதால், தமிழ் மக்கள் அவரை ஏற்றுக்ெகாள்வார்களா? என்ற கேள்வி எழவே செய்கிறது. எனினும், இராணுவத்தளபதியாகவிருந்த சரத் பொன்சேகாவுக்ேக வாக்களிக்கத் தயாராக இருந்த தமிழ் மக்கள், பாதுகாப்புச் செயலாளருக்கு ஏன் வாக்களிக்க மாட்டார்கள்? என்று கேள்வி எழுப்புவோரும் இருக்கிறார்கள்.  

அதேசமயம், சரத் பொன்சேகாவைத் தமிழர்கள் ஆதரித்தமைக்கான காரணம், அவர் இராணுவத்தளபதியாக இருந்தவர் என்பதற்கும் அப்பால், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் வந்த பொதுவேட்பாளர் என்பதே உண்மையான காரணம். இவ்வாறான சூழ்நிலையில், இந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிப்பார்கள் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். அவர்கள் தங்களின் அரசியல் தலைவர்கள் சொல்வதைச் செய்வார்களா, அல்லது சுயமாகச் சிந்தித்து முடிவெடுப்பார்களா? என்பது களமிறங்கியிருக்கும் ஜனாதிபதி வேட்பாளர்களின் கரங்களிலேயே தங்கியுள்ளது.  

இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளராகக் களமிறங்கியிருப்பவர் 1990களில் சோசலிஷ அமைப்புகளில் செயற்பட்டுப் பின்னர் ஜேவிபியின் தலைவராக உயர்ந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க. ஜேவிபியைப் பொறுத்தவரையிலும் தேசிய இனப்பிரச்சினையை வித்தியாசமாகவே நோக்குகிறது.  

2000ஆம் ஆண்டில் முதன்முறையாகப் பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்ட அநுரகுமார, 2004இல் ஜேவிபி, அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்து, அந்தக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியபோது, விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக பதவி வகித்திருந்தார். 2008இல், ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார்.  

2014பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி இடம்பெற்ற ஜே.வி.பியின் 7ஆவது தேசிய மாநாட்டில், அக்கட்சியின் தலைவராக, அநுரகுமார திஸாநாயக்க தெரிவுசெய்யப்பட்டார். மேலும், 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, தேசிய அரசாங்கம் அமைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எதிர்க் கட்சித் தலைவராக பதவி வகித்தபோது, எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக அநுரகுமார திஸாநாயக்க செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இடதுசாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள், “சிங்கள- பௌத்த” தேசியவாதம் என்பவற்றைத் தாண்டி, ஜே.வி.பியின் முகம் பரவலாக அனைவரையும் சென்றடையக்கூடிய வகையில், அநுரகுமாரவின் பேச்சுகள் அமைந்திருந்ததை மறுக்க முடி யாது.  

தமிழ் மக்கள் முன்னிறுத்தும் “தமிழ்த் தேசியத்தையோ” அதன் அடிப்படையையோ ஜே.வி.பி. ஒருபோதும் ஆதரிக்கப் போவதில்லை. ஜே.வி.பியும் அநுரகுமார திசாநாயக்கவும் இன்று பேசும் இன சௌஜன்யம் என்பது, இலங்கையின் தேசியக் கட்சிகளின் சில தலைமைகள் பேசும் இன சௌஜன்யத்திலிருந்து பெரிதும் வேறுபட்டதொன்றல்ல என்கிறார் சட்டத்தரணி அசோக்பரன். “ஒரு நாடு, ஒரு தேசம்” என்ற “சிங்கள-பௌத்த” தேசியவாதத்திலிருந்து உதித்த “ஒற்றையாட்சி” வரைவிலக்கணத்தைத் தகர்த்தெறியும் எந்தத் தத்துவமும், ஜே.வி.பியிடம் கிடையாது. ஒவ்வொரு முறையும் இனப்பிரச்சினை பற்றிய கேள்வி அவர்களிடம் எழுப்பப்படும் போதும், ஜே.வி.பியும் அநுர குமாரவும் வர்க்கப் பிரச்சினையைப் பேசி, அதற்கான பதிலை மழுப்பும் போக்கை நாம் அவதானிக்கலாம். ஆகவே, வெற்று வார்த்தைகளுக்கு அப்பால் அநுரகுமார திசாநாயக்கவும் ஜே.வி.பியும் “இடதுசாரித்துவத்தை” தாண்டி எத்தகையதொரு மாற்றுத்தெரிவாக அமையப்போகிறார்கள் என்பது கேள்விக்குரியதே. குறிப்பாகச் சிறுபான்மையினர், அதிலும் தமிழர்கள், பிரதான தேசியக் கட்சியின் வேட்பாளர்களைத் தாண்டி அநுர குமாரவைத் தேர்ந்தெடுப்பதற்கான நியாயங்கள் என்னவென்பதுதான் இங்கு முக்கியக் கேள்வி என்கிறார் அசோக்பரன்.  

எனவே, அரசியல் கட்சிகள் தங்களின் சுயலாப அரசியலை நிலைநிறுத்துவதற்காகவும் அதிகாரத்தைத் தக்கவைத்துக்ெகாள்வதற்கும் காய்நகர்த்தல்களை மேற்கொள்வதைத் தவிர்த்து, நாட்டில் புரையோடிப்போயிருக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முன்மொழிவுகளை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். உதாரணமாகக் கடந்த ஆட்சிக்காலத்தில் ஊழலுக்கு எதிராகவும் போதைப்பொருளுக்கு எதிராகவும் மாத்திரம் நடவடிக்ைக முன்னெடுப்பதாகச் சொல்லப்பட்டதை எந்தவிதத்திலும் மக்கள் ஏற்றுக் ெகாள்ளவில்லையென்பதே உண்மை. மக்கள் எதிர்பார்த்தது நல்லாட்சியேயன்றி, வழக்குகள் அல்லவென்பதை இனிவரும் ஆட்சியாளர்களாவது புரிந்துகொள்ள வேண்டும்.  

விசு கருணாநிதி

0 கருத்துரைகள்:

Post a Comment