Header Ads



தமிழ்ப் பயங்கரவாதிகள் என்று தம்மிடையே எவருமில்லையாம் - விக்னேஸ்வரன் சொல்கிறார்

தமிழ்ப் பயங்கரவாதிகள் என்று எம்மிடையே எவரும் இல்லை என தெரிவித்துள்ள, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,அரச பயங்கரவாதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களே எம்மிடையே உள்ளார்கள் என்றும் எம் மக்களை மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்படும் நபர்களுடன் முடிச்சுப் போடாதீர்கள் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் பேரணி இன்று ((16) நடைபெற்றது.

இந்த பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் சி.வி.விக்னேஸ்வரன் இதனைக் கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “இன அழிப்பு என்பது வெறும் கொல்லுதலைக் குறிக்கமாட்டாது. உடல், மனோரீதியான பாதிப்பு, பௌதிக அழிப்பு, இனப் பெருக்க ஆற்றலை பலாத்காரமாக நீக்குதல், குழந்தைகளைப் பலாத்காரமாக தமது குடும்பங்களில் இருந்து மாற்றுதல் போன்ற பலவும் இன அழிப்பே.

1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்ததற்கும் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைவதற்கும் இடைப்பட்ட காலத்தில் எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வடிவங்களிலான இன அழிப்பு நடவடிக்கைகள் மூலம் பெரும் அளவில் எமது பாரம்பரிய நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன.

சிங்களக் குடியேற்றங்கள் மூலம் வடக்கு கிழக்கின் குடிசன பரம்பலில் திட்டமிட்ட மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான எமது மக்கள் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.

ஆயிரக்கணக்கான எமது பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். எமது பாரம்பரிய வரலாற்று, தொல்லியல், கலாசார சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இலட்சக்கணக்கான எமது மக்கள் தமது சொந்த இடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு வெளிநாடுகளில் அகதிகளாக வாழ்கின்றார்கள். பெருமளவில் எமது சொத்துக்கள் அழிக்கப்பட்டு பொருளாதாரம் சிதைக்கப்பட்டுள்ளது.

காலத்துக்கு காலம் ஏற்பட்ட வெளிநாட்டு தலையீடுகளாலோ, சமரச முயற்சிகளாலோ மனித குலத்துக்கு எதிரான இந்தக் குற்றங்களைத் தடுக்க முடியவில்லை.

எமது தமிழ் நாட்டு உறவுகள் எமது போராட்டங்களுக்கு தமது ஆதரவை வெளிப்படையாகத் தெரியப்படுத்தி வருகின்றார்கள். தமிழ் மக்கள் வடக்கு - கிழக்கு இணைந்த  தமது தாயகத்தில் சுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில் இந்தியா தீர்வு ஒன்றினை கொண்டுவரும் என்று எமது மக்கள் திடமாக நம்புகின்றார்கள்.

இலங்கை இன பிரச்சினை தொடர்பில் இந்தியா இதுவரை கடைப்பிடித்து வரும் மென்போக்கு நிலையில் இருந்து விலகி தமிழ் மக்களின் இருப்பையும் அடையாளத்தையும் பாதுகாக்கும் வகையில் துணிச்சலான நடவடிக்கைகளைத் தாமதம் இன்றி எடுக்க வேண்டும் என்று இந்த 'எழுக தமிழ்' மூலம் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

எம்மை நாமே ஆட்சிசெய்து சுய கௌரவத்துடன் வாழ்வதற்கு எமக்கு இருக்கும் சுய நிர்ணய உரிமையினை ஏற்றுக்கொள்ளுங்கள்; அங்கீகரியுங்கள் என்று எமது சிங்கள, முஸ்லிம் சகோதரர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

எமது மக்கள் என்ன தீர்வினை விரும்புகின்றார்கள்  என்பதை அவர்களின் கருத்தை அறியும் ஒரு சர்வஜன வாக்கெடுப்பை எமது மக்கள் மத்தியில் நடத்தி  முடிவுசெய்யுங்கள் என்று அரசாங்கத்தைக் கேட்டு வைக்கின்றோம்.

சிங்கள சகோதரரும் தமிழ் மக்களும் இந்த நாட்டில் காலம் காலமாக உள்ளுர் சுதேச மக்களாக வாழ்ந்து வருபவர்கள். எமது சகோதர இனமான உங்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் நாம் என்றைக்கும் தடையாக இருந்ததில்லை.

நீங்களும் வாழவேண்டும் நாமும் வாழவேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம். நீங்கள் தற்போது எமக்கு எதிராக மேற்கொண்டுவரும் எல்லா செயற்பாடுகளையும்  நிறுத்தி எமது சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பீர்கள் என்று நம்புகின்றோம்.

இறுதி யுத்தத்தில் மிகமோசமான போர்க்குற்றம் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்ததாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவை இலங்கை இராணுவத்தின் தளபதியாக நியமித்துள்ளமை எந்த அளவுக்கு இலங்கை உலக அபிப்பிராயங்களை கணக்கில் எடுக்கின்றது என்பதை எடுத்தியம்பும்.

அரசாங்கம் சர்வதேச  சமூகத்தையும் ஏமாற்றி தமிழ் மக்களையும் ஏமாற்றி இன அழிப்பு  நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. எந்த அளவுக்கு நாம் எமது மக்களையும், நிலங்களையும், பொருளாதாரத்தையும் இழந்திருக்கின்றோம், இழந்துவருகின்றோம் என்பதை நாம் நன்கு உணர்ந்தவர்களாகவே சர்வதேச நாடுகளின் உடனடியான தலையீட்டை இந்த 'எழுக தமிழ்' நிகழ்வின் ஊடாகக் கோரி நிற்கின்றோம்.

எமது மக்கள் தமது அன்றாட நிகழ்வுகளை எல்லாம் கைவிட்டு வந்து, கடைகளை அடைத்து வைத்துவிட்டு வந்து இன்று இந்த 'எழுக தமிழ்' நிகழ்வின் ஊடாக மேற்கொள்ளும் சாத்வீக போராட்டத்தின் செய்தியினை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகின்றோம்.

இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றதுக்கு கொண்டுசென்று கையாளுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து சர்வதேச சமூகம் கவனம் செலுத்தவேண்டும்.

தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை ஒரு விசேட பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்றும்  தொடர்ந்தும் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்தும் வகையிலும் கண்காணிக்கும் வகையிலும் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலயம் வடக்கு கிழக்கில் தனது அலுவலகங்களை திறக்க வேண்டும் என்றும் இந்த 'எழுக தமிழ்' நிகழ்வின் மூலம் நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.

இலங்கை தீவில் ஒரு நிலையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பக்கூடிய தீர்வு தொடர்பில் தமிழ் மக்களின் கருத்தை அறியும் வகையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை  நடத்துவதற்கான முயற்சிகளையும் சர்வதேச சமூகம், சர்வதேச மனித உரிமைகள் சட்டக் கோட்பாடுகளுக்கு அமைவாக மேற்கொள்ளவேண்டும்.

தமிழ்ப் பயங்கரவாதிகள் என்று எம்மிடையே எவரும் இல்லை. அரச பயங்கரவாதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களே எம்மிடையே உள்ளார்கள். எம் மக்களை மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்படும் நபர்களுடன் முடிச்சுப் போடாதீர்கள்.

எமது இளைஞர்கள், யுவதிகள் மற்றோர் யாவரும் எமது விடுதலைக்காகப் போராடினார்கள். அரச பயங்கரவாதத்திற்கு ஈடுகொடுக்க ஆயுதம் ஏந்தியவர்களே எமது மக்கள்.

அவர்களுக்குப் பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தி அவர்களின் சுதந்திர வேட்கையைக் கொச்சைப்படுத்தியுள்ளன தொடர்ந்து வந்த மத்திய அரசாங்கங்கள். அவ்வாறு தொடர்ந்து செய்வதைத் தவிருங்கள் என்று அரசாங்கங்களுக்குக் கூறி வைக்கின்றேன்.

இளைஞர், யுவதிகள் ஆயுதமேந்த காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் தொடர்ந்து வந்த சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்களே. இவற்றை எல்லாம் அலசி ஆராய்ந்து உண்மையை எமது சிங்களச் சகோதர சகோதரிகள் அறிந்து கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது.

சரித்திரத்தைத் திரித்து, உண்மையை மழுங்கடிக்கப் பண்ணி, பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்று எம் மக்கள் மீது அநியாயமாகக் குற்றம் சுமத்தி சட்டத்திற்குப் புறம்பான சட்டங்கள் மூலம் தண்டித்த காலங்களை வெட்கத்துடன் நோக்க வேண்டிய தருணம் தற்போது எமது சிங்கள சகோதர சகோதரிகளுக்கு வந்துள்ளது. இதுவரை காலமும் நடாத்தப்பட்ட பொய் சார்ந்த அரசியல் நடவடிக்கைகளை உணர்ந்து சகோதரர்களாக தமிழ் மக்களுக்கு விடிவு காலம் ஏற்படுத்த எமது சிங்கள சகோதர சகோதரிகள் முன்வர வேண்டும்” என்றார்.

3 comments:

  1. en illai KARUNA,PILLAYAN VIYALENDIRAN,CHARLES AND jAFFNA MUSLIM la AJAN - ANUSH endu 2 puli bayangaravadi iruki

    ReplyDelete
  2. ஐயா, நீங்கள் 'சிங்கள சகோதர சகோதரிகளே' என்று மீண்டும் மீண்டும் விளித்துப் பேசுவது ரெம்ப அற்புதமாக இருக்கின்றது. இதனால் தான் உங்கள் இரு பிள்ளைகளையும் முன்னேற்பாடாகவே தாரைவார்த்துக் கொடுத்தீர்களோ?

    நீதியரசர் எனப்படும் உங்களைக் கூட குண்டு சட்டிக்குள் கரணம் விடும் ஆளாகத்தான் காணுகின்றோம். இனிமேலாவது வயதுக்கு ஏற்ப சற்று பரந்து சிந்தித்து, பரந்து பேசி, பரந்து செயற்படுங்கள். நீங்கள் எழுதிவைத்துப் பேசுவது போல இந்த விடயத்தையும் கொஞ்சம் வாசித்துப் பாருங்கள் ஐயா அவர்களே! மானம் உள்ள இனம் அடுத்தவர் கூறுவதை ஏன் கேட்க வேண்டும் என்று கூறிவிடாதீர்கள்.

    ReplyDelete
  3. why don't you apply the same theory for Kashmiri people, the innocents fought & fitting for your so called freedom fights, against the Modi & their past of INDIA.

    ReplyDelete

Powered by Blogger.