Header Ads



சஜித்திற்கும், கபீருக்கும் கடிவாளம் போட திட்டம் - விஜேதாஸ ராஜபக்ஷ

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிதலைவர் சஜித் பிரேமதாஸ, மற்றும் தவிசாளர் காபீர் ஹசீம் ஆகியோருக்கு கடிவாளமிடுவதற்காகவே எம்மிலிருந்து ஒழுக்காற்று நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜேதாஸ ராஜபக்ஷ, அத்துரலிய ரத்ன தேரர் ஆகியோர் கட்சியின் விதிமுறைகளை மீறியுள்ளமையால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைக் எடுக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் சட்டச் செயலாளர் அறிவித்துள்ள நிலையில் அதுகுறித்து கருத்துவெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, எம்மீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே ஐ.தே.கவுடன் கொள்கை ரீதியான முரண்பாடுகள் காரணமாக நானும், அத்துரலிய ரத்ன தேரரும் தனித்தே இயங்கி வருகின்றோம். அச்செயற்பாடு எப்போதே ஆரம்பித்தாகிவிட்டது.

அவ்வாறிருக்கையில் தற்போது திடீரென ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் எம்மை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படவில்லை.

மாறாக ஐ.தே.கவினுள் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை நியமிக்குமாறு பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. சஜித் பிரேமதாஸவும் வேட்பாளராக களமிறங்குவதற்கு தயார் என்று கூறியுள்ளார். தவிசாளரான கபீர் ஹசீமும் அவருக்கான ஆதரவுப் போக்கில் இருக்கின்றார்.

ஆகவே கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்களை கட்டுப்படுத்துவதற்கு முன்னதாக முக்கிய பதவிகளில் உள்ளவர்களை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியதாகின்றது. இதனாலேயே நேரடியாக அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்க முடியாதிருப்பதன் காரணமாக எம்மிலிருந்து ஆரம்பித்துள்ளார் என்றார்.

மேலும், ஐ.தே.க.வின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான அத்துரலிய ரத்னதேரர், எனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுப்பதை விடவும் அதிகாரங்களில் உள்ளவர்கள் மீது தான் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். எனக்கு இன்னமும் அதிகாரங்கள் கிடைக்கவில்லை. எனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் நாம் மாற்றுவழிகள் குறித்து ஆராய வேண்டிய நிலைக்குச் செல்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

(ஆர்.ராம்)

No comments

Powered by Blogger.