Header Ads



நன்றி உணர்வு இருந்தால் பதவி விலகுங்கள்

டிலான் பெரேரா மற்றும் எஸ்.பி. திஸாநாயக்க ஆகியோருக்கு நன்றி உணர்வு இருந்தால் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி தாங்கள் விரும்புகின்ற கட்சிக்கு கீழே நின்று பேசலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“தேசியப் பட்டியலில் இடம்பிடித்த டிலான் பெரேரா மற்றும் எஸ்.பி. திஸாநாயக்க ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்களானது மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமானது என்று சிலர் கூறுகின்றனர்.

கடந்த தேர்தலில் நான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தின் கீழ் போட்டியிட்டோம். அதேபோல பலரும் சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டனர். இந்தக் கட்சிகளின் தலைவராக மகிந்த ராஜபக்ச அல்ல, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே இருக்கின்றார்.

அதனால் வெற்றிலைச் சின்னத்திற்கு வழங்கப்பட்ட வாக்குகளிற்கான உரிமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணிக்கே இருக்கின்றது. மாறாக தனிப்பட்ட நபர்களுக்கு அல்ல.

ஆகவே தேசியப் பட்டியலில் தெரிவாக அந்த இரண்டு உறுப்பினர்களுக்கும் நன்றி உணர்வு இருந்தால் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி தாங்கள் விரும்புகின்ற கட்சிக்கு கீழே நின்று பேசலாம், எமக்கெதிராக குற்றஞ்சாட்டலாம். வேண்டியவற்றை செய்யலாம்.

ஆனால் மக்களின் வாக்குகளால் உறுப்பினர்களாக தெரிவாகாதவர்கள் அப்பதவியை வைத்திருக்க முடியாது.

கடந்த தேர்தலில் டிலான் பெரேரா மற்றும் எஸ்.பி திஸாநாயக்க இருவரும் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிய போதிலும் அவர்களுக்கு எமது கட்சி தேசியப் பட்டியல் பதவியை வழங்கியது.

பலரும் அதனை எதிர்த்தனர். ஊடகங்களும் கேள்வி எழுப்பின. மக்களின் ஆணைக்கு துரோகம் இழைப்பதாகச் சொன்னார்கள். இருந்த போதிலும் அவற்றை நான் எதிர்கொண்டு முடிவெடுத்தோம்.

இறுதியில் கட்சிதாவி தேசியப் பட்டியல் உறுப்புரிமையை அப்படியே பயன்படுத்திக் கொண்டு சம்பளத்தையும் பெற்றுக்கொண்டுவரும் அவர்களுடன் நான் கருத்து மோதலில் ஈடுபட தயாராக இல்லை. அதனால் அவர்கள் உணர்ந்து அப்பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.