Header Ads



கபீரின் இணைப்புச் செயலாளரை சுட்ட, சஹ்ரானின் சகாக்கள் அடையாளம் காணப்பட்டனர்


(எம்.எப்.எம்.பஸீர்)

அமைச்சர் கபீர் ஹாஸிமின்  இணைப்புச் செயலர்களில் ஒருவரான மொஹம்மட் ராபிக் மொஹம்மட் தஸ்லீம் என்பவரை, மாவனெல்லை - தனாகம பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொலை செய்ய முயன்ற விவகாரத்தில், பிரதான சந்தேக நபராக சி.ஐ.டி. விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட , பயங்கரவாதி சஹ்ரான் குழுவின் ஆயுதப் பிரிவு பிரதனியாக கருதப்படும் மொஹம்மட் மில்ஹான் சாட்சியாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார். 

மொஹம்மட் தஸ்லீம் மீது  கடந்த மார்ச் 9 ஆம் திகதி அதிகாலை உறக்கத்தில் இருந்த போது வீடு புகுந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் படுகாயமடைந்தார். 

இந் நிலையில்  அது குறித்து சி.ஐ.டி. விஷேட விசாரணைகளை ஆரம்பித்த நிலையில், 21/4 தாககுதலின் பின்னர் அக்கொலை முயற்சியின் மர்மங்கள் துலக்கப்பட்டன.

அதன்படி இந்த கொலை முயற்சி தொடர்பில், பிரதான சந்தேக நபர்களாக மூவரை அடையாளம் கண்ட சி.ஐ.டி., அந்த மூவரையும் நேற்று மாவனெல்லை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ச் செய்து அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தியது. 

இதன்போது இந்த கொலை முயற்சி சம்பவத்துக்கு தலைமை வகித்ததாக அடையாளம் காணப்பட்டுள்ள பயங்கரவாதி சஹ்ரான் குழுவின் ஆயுதப் பிரிவு பிரதனியாக கருதப்படும் மொஹம்மட் மில்ஹான், சஹ்ரானின் சாரதியான கபூர் மாமா எனப்படும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை ஆகிய இருவரை சாட்சியாளர்கள் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காட்டியுள்ளனர்.  

இந் நிலையில் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்ட குறித்த சம்பவம் தொடர்பிலான மூவரையும் மீளவும் மேலதிக விசாரணைகளுக்காக சி.ஐ.டி. தலைமையகமான நான்காம் மாடிக்கு அழைத்து வந்ததாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர உறுதி செய்தார்.

முன்னதாக தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில்  குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விஷேட விசாரணைகளின் போதே, அதுவரை தீர்க்கப்படாது இருந்த முக்கிய இரு குற்றங்களின் ஆதி அந்தம் கண்டறியப்பட்டது.  

தற்கொலை தககுதல்களின் சூத்திரதாரியாக கருதப்படும் மொஹம்மட் சஹ்ரானின் வாகன சாரதியாக  கடமையாற்றிய கபூர் மாமாவைக் கைது செய்து முன்னெடுத்த விசாரணைகளிலேயே இவை வெளிப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.