Header Ads



ரணிலின் நிபந்தனைகளையடுத்து நாளை, கட்சி தலைவர்களை சந்திக்கின்றார் சஜித்

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்கிற முடிவை எடுப்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் கலந்துரையாடல் அடுத்தவாரம் நடைபெறவுள்ளது.

அமைச்சர் மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார். அந்த வகையில், பிரதமரின் நிபந்தனைக்கு அமைய, அமைச்சர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களை நாளை கொழும்பில் வைத்து சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் இழுபறியில் காணப்படுகின்ற நிலையில், அலரிமாளிகையில் அண்மையில் நடத்திய பேச்சுவார்த்தை ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே நடைபெற்றது.

முன்னணியில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து அவர்களுடைய அனுமதியை பெற்றால் வேட்பாளர் பதவியை வழங்கத்தயார் என்ற நிபந்தனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு விதித்தார்.

அந்த வகையில், பிரதமர் ரணில் விதித்த நிபந்தனையின் பிரகாரம், நாளை அமைச்சர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே கடந்த செவ்வாய்க்கிழமை பேச்சு நடைபெற்றபோது, ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள பங்காளிக் கட்சியின் தலைவர்களிடம் பேச்சு நடத்திய பின்னர் அனைவரும் இணைந்து கலந்துரையாடுவோம் என்று கூறியுள்ளார்.

அதன்படி ரவூப் ஹக்கீம், ரிஸாட், சம்பிக்க அதேபோல என்னிடம் பேச்சு நடத்தி வரும்படி அறிவுறுத்தியிருக்கின்றார். இதற்கமைய நாளை இரவு கொழும்பில் சந்தித்து பேசவுள்ளோம்.

அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் பேச்சு நடத்தி எடுக்கப்படும் தீர்மானத்தை எடுத்துக்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் எதிர்வரும் வாரம் 17ம் திகதி முதல் 19ம் திகதி வரையான மூன்று நாட்களில் ஜனநாயக தேசிய முன்னணி என்ற எமது அரசியல் கூட்டணிக்காக முன்நிறுத்தப்படும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக கலந்துரையாடி அறிவிக்கவிருக்கின்றோம்.

கொழும்பில் நடத்தப்படவுள்ள மிகப்பெரிய மக்கள் கூட்டத்திற்கு இலட்சக்கணக்கான மக்களை அழைத்துவரவிருக்கின்றோம்.

இன்று அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்திருக்கின்ற நிலையில் ஏன் ஐக்கிய தேசிய முன்னணி ஆரம்பிக்கவில்லை என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

அவர்களிடம் ஒன்றைக் கூறுகின்றேன். இன்று மக்கள் எம்மைப்பார்த்து எங்கே உங்கள் வேட்பாளர், யார் வேட்பாளர் என்று ஆசையுடன் எதிர்பார்ப்புடன் கேட்கின்றனர். அதன்படி நாங்கள் ஆரம்பத்திலேயே பிரசாரங்களை ஆரம்பித்துவிட்டோம் என்பதற்கு இதுவே உதாரணம்.

மக்களின் எதிர்பார்ப்பின்படி சிறந்த வெற்றிபெரும் வேட்பாளரை விரைவில் அறிவிப்போம். ஆனால் எதிரணியில் பாருங்கள். அவர்கள் கோத்தபாயவை அறிவித்துவிட்டார்கள். அந்த நாளில்மட்டுமே அதன் பரபரப்பு இருந்தது. இப்போது நீங்கிவிட்டது.

மக்கள் விடுதலை முன்னணியும் சிறப்பாக வேட்பாளரை அறிவித்த போதிலும் இப்போது அதன் பரபரப்பு குறைந்துவிட்டது. ஆனால் ஐக்கிய தேசிய முன்னணியின் பரபரப்பு இன்னும் நீங்கவில்லை.” என கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் சஜித், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடைய ஆதரவு தனக்கு கிடைப்பதாகவும், அதற்காக அவர்களுடன் பேச்சு நடத்த அவசியமாகாது என்றும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.