Header Ads



விழிப்புணர்வடைவோம், சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளாது தவிர்ந்திருப்போம்...!!

- ஷபீக் zஸுபைர் -

கடந்த சில தினங்கள் முன்பு (25/09/2019 அன்று)  மருத்துவ சிகிச்சை ஒன்றுக்காக கொழும்பு பெரிய ஆஸ்பத்திரியிற்கு சென்றிருந்த முஸ்லிம் பெண் ஒருவர் குறித்த ஆஸ்பத்திரியின் சிறு பகுதியொன்றை தனது கையடக்க தொலைபேசி மூலம் வீடியோ செய்தார் என்ற  காரணத்திற்காக    இனவாத நோக்குடன் நடாத்தப்பட்டிருந்தார். 

குறித்த வைத்தியசாலையின் சில டாக்டர்கள், வைத்தியசாலை நிருவாகம், அங்கு கூடி இருந்த பெரும்பான்மை சமூக மக்கள் சிலர்  என அனைவரும் இணைந்து ஒரு பயங்கரவாதியை நடாத்துவது போன்று அந்த பெண்ணை அவமதிப்புடன் நடாத்தி இருந்தனர். 

இறுதியில் அவ்விடத்திற்கு பொலிஸார்  அழைக்கப்பட்டு அந்தப் பெண் பொலிஸ் ஜீப்  வண்டியில் ஒரு குற்றவாளி போன்று அழைத்து செல்லப்பட்டார். (குறித்த கசப்பான நிகழ்வு பற்றி பலரும் அறிந்திருப்போம்) 

குறித்த சம்பவத்தை ஊதிப் பெரிதாக்கிய இனவாத மீடியாக்கள் முஸ்லிம் சமூகத்தின் மீது மீண்டும் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தும் விதத்தில் செய்திகளை வெளியிட்டன. தொடர்ந்தும் வெளியிட்டு வருகின்றன. 

ஏற்கனவே கடந்த வருடம் சுற்றுலா சென்ற முஸ்லிம் வாலிபர்கள் சிலர் பெளத்த ஆலய வளாகம் ஒன்றிற்குள் கைத்தொலைபேசியில் போட்டோ எடுத்ததற்காகவும், மற்றும் சில முஸ்லிம் வாலிபர்கள் தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க இடமொன்றில் போட்டோ பிடித்தனர் என்ற காரணத்திற்காகவும் கைது செய்யப்பட்டு பல வாரங்கள் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டிருந்த நிலையிலேயே கடந்த  25ம் திகதி  குறித்த முஸ்லிம் பெண் கொழும்பு பெரிய ஆஸ்பத்திரி வளாகத்தில் வைத்து பொலிஸாரால் அழைத்து செல்லப்பட்டுள்ளார். 

உண்மையில் போட்டோ பிடிக்க அனுமதியற்ற இடங்களை குறித்த அரச, தனியார் நிறுவனங்கள் தமது வளாக நுழைவாயில்களில்  தெளிவாக எழுதி மக்கள் பார்வைக்கு விட வேண்டும். 

அதனை செய்ய தவறியுள்ள குறித்த நிருவாகங்கள் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலா பயணிகள் குறித்த இடங்களில் போட்டோ பிடிப்பதை, புத்தரின் போட்டோ பொறிக்கப்பட்ட அணிகளன்களை அணிந்து கொள்வதை, அவற்றை  பாவனை செய்வதை  தாராளமாக அனுமதித்து விட்டு உள்நாட்டு சிறு பான்மை முஸ்லிம் சமூகத்தை மாத்திரம் வித்தியாசமாக நடாத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். 

எது எப்படியோ சட்டத்தை கையில் எடுத்துள்ள சில இனவாத சக்திகள்  சட்டமோ, நீதி மன்றத் தீர்ப்போ எம்மை கட்டுப்படுத்த முடியாது என கூறிக் கொண்டு சிறுபான்மை சமூகங்களை (குறிப்பாக சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை) அடக்கியாள துடிப்பதும் அதனை தடுக்க வேண்டியவர்கள் வேடிக்கை பார்த்து வருவதும்  இலங்கையில் எழுதப்படாத சட்டவிதியாக மாறியுள்ளது. 

ஆகவே எம்மை நாமே பாதுகார்த்துக் கொள்ள வேண்டும் என்ற வகையில் அரச அலுவலகங்கள், பெளத்த மதத்துடன் தொடர்புபட்ட இடங்கள், தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், பிரச்சினைகள் ஏற்படலாம் என சந்தேகிக்கப்படுகின்ற இடங்கள் போன்றவற்றில்  தனியாகவோ, கூட்டாகச்  சேர்ந்தோ போட்டோ பிடிப்பது, வீடியோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதை முற்றாக நாம் தவிர்த்துக் கொள்வோம். 

29/09/2019.

1 comment:

  1. எங்கட நாடு எப்பவும்போல இப்பிடித்தாங்க இருக்கும். இருக்கவும் வேணுங். தேர்தல் ஒன்னு வருவுது இல்ல. இனிம பிரதான வேட்பாளர்கள் பெரிய பெரிய பச்சைப் பொய்யை எல்லாங் சொல்ல வருவாங்க. “நாட்டை சிங்கப்பூர் ஆ மாத்துவேன். US எல்லாம் தோத்துப் போகும்படியா அபிவிருத்தியைக் கொண்டு வருவேன்”. அப்பிடி இப்பிடி எல்லாங் சொல்லுவாங்க. தேர்தல்னு வந்தா எதை வேணுங் என்டாலும் பேசலாம்தானே. பெற்றோல் டீசல் செலவா என்ன. வாயைத் தொறந்து விட்டா தன்னால வார்த்தை வருது. நம்மட நாட்டுல பாருங்க “இனவாதம்” இருக்குள்ள அதுதாங்க எங்கட அரசியல்வாதிங்கட ஒரு பெரிய “Plus Point". இது இல்லாட்டி எந்த அரசியல்வாதியும் இரவில் நிம்மதியா தூங்கமாட்டானுங்க. நாட்டு மக்களுக்கு என்ன நன்மையை செய்யலாம்னு யோசிக்கிறத விட எப்பிடி நாட்ல குளப்ப சூழ்நிலையை ஏற்படுத்தி அதனைத் தன்னுடைய வெற்றிக்குச் சாதகமாக்கலாம்னு யோசிக்கிறதிலேயே அவங்கட Time முழுதும் போய்டும். “கலவரம்” ன்னு ஒன்னு வந்தாலே மக்களின் வரிப்பணம்தான் இறைக்கப்படுகின்றது என்ற உண்மை பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு தெரிவதே இல்லங்க. மக்களும் தேர்தல் காலம் வந்துட்டா தங்கட தலைவருக்காக நாயா பேயா ஓடி அலையுறதுதான் மிச்சங். நடக்குறது நடக்கப்போவது ஒன்னுமே இல்லங்க.

    ReplyDelete

Powered by Blogger.