September 02, 2019

பாராளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டால் 76 Mp க்களுக்கு பேரிடியாக மாறும் செய்தி

19ஆம் திருத்தச்சட்டத்தின் ஊடாக நாடாளுமன்றத்தின் ஆயுட் காலத்தை 5 வருடங்களாக குறைத்தமையினால் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 76 உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்தாகும் நிலை உருவாகியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஓய்வூதியம் பெறுவதற்கு அவர் நாடாளுமன்ற உறுப்பினராக 5 வருடங்களைப் பூர்த்திச் செய்திருக்க வேண்டும்.

முன்னர் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் 6 வருடங்களாக இருந்தமையினால் இவர்களுக்கு ஓய்வூதியம் பெருவதில் சிக்கல் இருக்கவில்லை.

எனினும் 19ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் ஆயுட் காலம் 5 வருடங்களாக குறைக்கப்பட்டது.

இருப்பினும் ஓய்வூதியம் பெறுவதற்கான கால எல்லையில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை.

இவ்வாறான நிலையில் ஐந்து வருடங்கள் பூர்த்தியடைவதற்கு ஒரு நாளைக்கு முன்னரேனும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் 76 உறுப்பினர்களுக்கு உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காமல் போகும் என தெரியவந்துள்ளது.

ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களின் பிரகாரம் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் இந்நிலை உருவாகும்.

தற்போது உள்ள நாடாளுமன்றம் 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது. அதன் ஐந்து ஆண்டு ஆயுட்காலம் 2020ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.

5 வருடங்களை பூர்த்தி செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதுடன் 5 வருடத்திற்கு ஒரு நாளேனும் குறைவடைந்தால் அது இரத்தாகிவிடும்.

2 கருத்துரைகள்:

நாட்டு மக்களின் நலன்களையும் அவர்களின் எதிர்காலத்திட்டங்களையும் சரியாக முன்வைத்து செயல்படுத்த அவர்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றம்சென்ற மக்கள் அங்கத்தவர்கள், தற்போது மக்களையும் நாட்டையும் முற்றாக மறந்து அவர்களின் சொந்த நலன்களை மாத்திரம் கருத்தில்கொண்டு தற்போதைய பாராளுமன்றம் இயங்குவதாகத் தெரிகிறது. தயவுசெய்து அந்த 76பேரும் ஓய்வூதியம் பெறுவதற்கு நாட்டு மக்கள் அவர்களின் வியர்வை ஓட்டி சம்பாதிக்கின்ற பணத்தை செலவிடத் தயாராக இல்லை. எனவே, அந்த 76பேரின் ஓய்வூதியத்தை முற்றாக ஒழித்து மற்ற பெருஞ்சாலிகளான மந்தி(ரி)களின் ஒய்வூதியத்துக்கு தகுதி பெற்றிருந்தால் அவற்றை உடனடியாக இல்லாமல் செய்யும் சட்டத்தை இயக்கி அந்த சட்டங்கள் உடனடியாகசெயல்படுத்துமாறு பொதுமக்கள் சார்பாக வேண்டிக்கொள்கின்றேன்.

ஒரு அரச ஊழியர் தனது ஒரு சம்பள உயர்ச்சியினைப் பெறுவதற்கு படும் பாடு சொல்லும் தரமன்று. எத்தனையோ படிகளைத் தாண்டியே அவர்கள் தமது ஒரு சம்பள உயர்ச்சியினை அடைகின்றனர். இப்படியே அவர்கள் தமது 25 – 30 வருட காலமும் பெரும் மனவுலைச்சலுக்கு ஆளாகியே தமது சம்பள உயர்ச்சியினை வருடாந்தம் பல எச்சரிக்கைகளுக்கு மத்தியில் பெறுகின்றனர். ஒரு ஆசிரியரை எடுத்துக் கொண்டால் பாடசாலையில் படிப்போ படிப்போன்னு படிப்பித்து வீட்டிலும் பல்வேறு வகையான முன் ஆயத்தங்களை மனைவியின் ஏச்சுப் பேச்சுகளுக்கு ஆளாகி செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றனர். அவர்களை Periodical மேற்பார்வை செய்வதற்கு அவர்களையும் விட கல்வித்தரங்களில் குறைவுள்ளவர்கள் தராதரம் தெரியாமல் நியமிக்கப்பட்டுள்ளமை ஒரு “கவர்ச்சி” கரமான அம்சமாகும். மூன்று நாட்கள் மூன்று செக்கன்ஸ் தாமதமாகச் சென்றாலும் அதற்கும் தண்டனை உண்டு. இவை எல்லாம் இலங்கை தாபன விதிக் கோவை, நிதிப் பிரமாணங்கள் மற்றும் நிர்வாக ஒழுங்கு விதிமுறைகள் என்பனவற்றில் மிகத் தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. எவராவது ஒருவர் அரச உத்தியோகத்திற்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர் இவைபற்றிய அறிவினைப் பெற்றிருந்தால் அல்லது ஊட்டப்பட்டிருந்தால் ஐயோ சாமி ஆளை விடுங்கப்பா நான் வெள்ளாமை வெட்டியே என் காலத்தை போக்கிடுவேன் என்று ஒரே ஓட்டமாக ஓடிவிடுவார். இலங்கையின் அரச சேவை இப்படியான நெருக்குவாரத்தில்த்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அரச ஊழியர்களாவது ஏதோ பத்துக்கு நாலாவது சரியாகச் செய்து ஓய்வூதியம் பெறும் வரை தமது தொழிலை எப்படியோ செய்து முடித்து விடுகின்றனர். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்லும் எமது உறுப்பினர்கள் என்ன செய்கின்றார்கள்;? அவர்களுடைய பதவிக்கான வேலைப்பட்டியல் என்ன? அவர்களுடைய Trip Report, Program of Work, Work done Report எல்லாம் யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பன போன்ற அறிவுறுத்தல்கள் ஏதும் இருக்கின்றனவா என்றால் அதுதான் இல்லை. அவர்கள் பாராளுமன்றத்திலும் அரச அலுவலங்களிலும் மக்களுக்கு எத்தகைய சேவைகள் செய்துள்ளனர் என்று கேட்டால் அதற்கும் பொருத்தமான விளக்கம் இல்லை. அவர்களுடைய விடுமுறை விபரங்கள் மற்றும் எப்படியான மக்கள் குறைநீக்கும் காரியங்கள் எத்தனை அவரகளது காலத்தில் செய்து முடிக்கப்பட்டுள்ளனவென்றால் அதற்கும் பதில் வராது. மக்களால் தெரிவு செய்யப்பட்டு மக்களின் வரிப்பணத்தில் சகல வசதிகளையும் அனுபவிக்கும் இவர்கள் மக்களுக்குச் சேவை செய்வதில்லை என்பதுதான் உண்மை. இவர்களுக்கு எதற்கு ஓய்வூதியம்? அது மட்டும்தான் பெரும் குறை. இவர்கள் தமது சேவையினைத் திறம்படச் செய்திருந்திருந்தால் தொடர்ந்து உறுப்பினர்களாகவே இருந்திருக்கலாம் அல்லவா? சென்ற தேர்தலில் 79 பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிதாக தெரிவுசெய்யப்பட்டார்கள் என்றால் மக்களுக்கு சேவை செய்யாத 79 பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனர் என்பதே கருத்தாகும்.

Post a Comment