Header Ads



ரணிலை 71 தடவைகள் பாதுகாத்து, 71 தடவைகள் பிரதமர் பதவியை நிராகரித்துள்ளேன் - சஜித்

ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் விசேட மாநாடு கொழும்பில் இன்று -07- நடைபெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோரின் பங்கேற்புடன் இந்த மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாச வருகை தந்ததை அடுத்து மாநாடு ஆரம்பமானது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச நியமிக்கப்பட வேண்டும் என்ற பிரேரணை, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலரினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் சர்வமதத் தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் பங்கேற்றிருந்தனர்.

இம்மாநாட்டில் அமைச்சர் சஜித் பிரேமதாச பின்வருமாறு உரை நிகழ்த்தினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நானும் உடன்படிக்கை​யொன்றை ஏற்படுத்தினேன். அது வேறு எதற்காகவும் அல்ல. ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கும் உடன்படிக்கையை நான் ஏற்படுத்தினேன். அந்த உடன்படிக்கையை ஏற்படுத்தியபோது நெருங்கிய தொடர்பைப் பேணியவர்கள் எனக்கு சேறு பூசினர். நான் ஒருபோதும் அரசியல் சூழ்ச்சியூடாக எனது அரசியல் பயணத்தை முன்னெடுப்பதில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமருடனேயே நான் மக்களுடன் இணைவேன் என்பதையும் நான் இந்த சந்தர்ப்பத்தில் கூற வேண்டும்.

இந்தளவு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட, திருடாத, கொள்ளையிடாத, பொதுமக்களுக்கு விசேட சேவையை ஆற்றுவதற்கு முயற்சிக்கும் எனக்கு சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு ஏன் தடுமாறுகின்றனர்? என்னால் புரிந்துகொள்ள முடியாதுள்ளது. சில தீர்மானம் மிக்க சந்தர்ப்பங்களில் பல்வேறு வகையிலான வேட்பாளர்களை அறிவிப்பதில் பிரச்சினையிருக்கவில்லை. இவ்வளவு மக்களின் கருத்திற்கு ஏன் செவிசாய்க்காதுள்ளனர்?

பின்வாங்க வேண்டாம் என சிலர் என்னிடம் கூறுவது எனக்குக் கேட்டது. ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் சிந்திப்பதற்கான நேரம் உதயமாகியுள்ளது. என்னுடைய தலைவரை 71 தடவைகள் பாதுகாத்துள்ளேன். 71 தடவைகள் எனக்கு பிரதமர் பதவி வழங்கப்படவிருந்த நிலையில், நான் அவற்றை நிராகரித்தேன். அது வேறு எதற்காகவும் அல்ல. எனது தலைவர் மற்றும் கட்சி மீது எனக்குள்ள கௌரவம் காரணமாகவே. இந்த கௌரவத்தை விட, ஆத்ம திருப்தி சஜித் பிரேமதாசவிற்கு பெறுமதியானது என்பதே காரணம்.

இன்னும் எவ்வளவு தடுமாறுவார்கள் என எனக்குத் தெரியவில்லை. எவ்வளவு பின்தள்ளினாலும் தீர்மானங்களை எடுப்பதில் சஜித் பிரேமதாச ஒரு அடி அல்ல, மில்லிமீட்டர் அளவுகூட பின்வாங்கப் போவதில்லை என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் கூறுகின்றேன்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களால் 20 வருடங்கள் காத்திருக்க முடியுமா என கேட்க விரும்புகின்றேன். பிரதமர், கரு ஜயசூரிய ஆகியோரின் ஆசீர்வாதத்துடன் நேர் வழியில் பொதுமக்கள் யுகத்தை உருவாக்குவதற்கு சஜித் பிரேமதாச முன்வருவேன்.

No comments

Powered by Blogger.