Header Ads



சஜித் ஜனாதிபதி வேட்பாளராக, 3 நிபந்தனைகளை ரணில் விதித்தாரா..?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நாளைய தினம் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச களமிறக்க ரணில் கொள்கையளவில் இணங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

என்றபோதும், சில நிபந்தனைகளை முன்வைத்து அதற்கு சஜித் இணங்கும் பட்சத்திலேயே தமது முழுமையான ஆதரவை ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பார் என்ற தகவலும் அறியக்கிடைத்துள்ளது.

இதன்படி, சஜித்தை கட்சியின் வேட்பாளராக நிறுத்துவதெனில் மத்தியகுழு சம்மதிக்க வேண்டும், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க சஜித் ஒப்புக் கொள்ள வேண்டும் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி வைக்கும் அனைத்து கட்சிகளும் சஜித்தின் நியமனத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளே முன்வைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாசவே களமிறக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக காணப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆறாம் திகதி அலரி மாளிகையில் ஐக்கிய தேசிய முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான சந்திப்பில் வைத்து ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிட உள்ளதாக ரணில் விக்ரமசிங்க அறிவித்தார் என தகவல் வெளியாகியிருந்தது.

இதனையடுத்து நேற்றைய தினம் ரணில் விக்ரமசிங்கவுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெறவிருந்த போதும் நாளைய தினத்திற்கு குறித்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.