Header Ads



யார் இந்த கோத்தபாய..? (முழு விபரம் இணைப்பு)

இலங்கையில் எதிர்வரும் சில மாதங்களில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்சவின் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில், யார் இந்த கோத்தபாய ராஜபக்ச என்ற ஓர் விசேட தேடல்,

கோத்தபாய ராஜபக்ச...

இலங்கையின் தென் மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்திலுள்ள ஹம்பாந்தோட்டை - வீரகெட்டிய எனும் பகுதியில் 1949ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20ஆம் திகதி அரசியல்வாதியான டி.ஏ.ராஜபக்ச தம்பதியினருக்கு நந்தசேன கோத்தபாய ராஜபக்ச பிறந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ச ஆகியோரின் சகோதரனாக கோத்தபாய ராஜபக்ச பிறந்தார்.

தனது ஆரம்ப கல்வியை கொழும்பு ஆனந்த கல்லூரியில் கோத்தபாய ராஜபக்ச பயின்றுள்ளார்.

இராணுவ வாழ்க்கை...

1971ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி கேடட் அதிகாரியாக இலங்கை ராணுவத்தில் இணைந்து, தனது ராணுவ பயணத்தை கோத்தபாய ராஜபக்ச ஆரம்பித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, கோத்தபாய ராஜபக்ச 1972ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் திகதி இலங்கை ராணுவத்தின் இரண்டாம் நிலை லெப்டினனாக பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.

இலங்கை ராணுவத்தின் ஸ்ரீலங்கா சிங்ஹ ரெஜிமென்ட், ரஜரட்ட ரயிபைல்ஸ் ஆகிய படைப்பிரிவுகளில் கடமையாற்றிய அவர், 1983ஆம் ஆண்டு ராணுவத்தின் கஜபா ரெஜிமென்ட்டில் இணைந்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச, தனது 20ஆண்டு கால ராணுவ வாழ்க்கையில் இலங்கை ராணுவத்திற்காக ஆற்றிய சேவைக்காக அந்த காலப் பகுதியில் ஆட்சி பீடத்தில் இருந்த மூன்று ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தன், ரணசிங்க பிரேமதாஸ மற்றும் டி.பி.விஜேதுங்க ஆகியோரிடம் விருதுகளையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

1983ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்த காலப் பகுதியில் இலங்கை ராணுவத்தில் முன்னின்று கோத்தபாய ராஜபக்ச செயற்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, 1992ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தின் பல பிரிவுகளில் கட்டளை தளபதியாகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.

இந்த நிலையில், பாதுகாப்புத் துறையில் பல உயரிய பதவிகளை வகித்த அவர், 1992ஆம் ஆண்டு இலங்கை ராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.

அமெரிக்க பிரஜாவுரிமை...

இலங்கை ராணுவத்திலிருந்து 1992ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற கோத்தபாய ராஜபக்ச, அந்த காலப் பகுதியிலேயே அமெரிக்காவிற்கு குடியேறி அமெரிக்க பிரஜை உரிமையை பெற்றுக் கொண்டுள்ளார்.

இலங்கை மற்றும் அமெரிக்கா என்று இரட்டை பிரஜை உரிமையை பெற்றவராக கோத்தபாய ராஜபக்ச திகழ்ந்தார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவி...

தனது சகோதரனான மஹிந்த ராஜபக்ச, 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியதன் ஊடாக, அமெரிக்க பிரஜை உரிமையை பெற்ற கோத்தபாய ராஜபக்ச, இலங்கையை நோக்கி மீண்டும் வருகைத் தந்தார்.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய மஹிந்த ராஜபக்ச, அந்த ஆண்டு நவம்பர் மாதம் கோத்தபாய ராஜபக்சவை பாதுகாப்பு செயலாளராக நியமித்தார்.

உள்நாட்டு யுத்தம் வலுப் பெற்றிருந்த நிலையிலேயே கோத்தபாய ராஜபக்ச இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்படுகின்றார்.

விடுதலைப் புலிகளின் கொலை முயற்சி...

பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோத்தபாய ராஜபக்சவை கொலை செய்யும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்றும் நடத்தப்பட்டிருந்தது.

கொழும்பு - கொள்ளுபிட்டி பகுதியில் 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி கோத்தபாய ராஜபக்ச பயணித்த வாகன தொடரணி மீது, தமிழீழ விடுதலைப் புலிகள் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியிருந்தனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் கோத்தபாய ராஜபக்ச உயிர் தப்பியிருந்த பின்னணியில், அந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்திருந்ததுடன், 14 பேர் காயமடைந்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை நிறைவு செய்ய கோத்தபாய ராஜபக்ச பாரிய பிரயத்தனத்தை வழங்கியிருந்தார்.

இந்த நிலையில், 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்ததாக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அறிவிக்கப்பட்டது.

யுத்த குற்றச்சாட்டு...

ஈழப் போரின் போது, இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி தலைவர்களை கொலை செய்ய உத்தரவிட்டதாக பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அத்துடன், வெள்ளை வேனில் பலர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கும், கோத்தபாய ராஜபக்சவிற்கும் தொடர்பு காணப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு...

இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்காவில் இருவேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமைக்கு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்து, லசந்த விக்ரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்ரமதுங்கவினால் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக தமிழ் இளைஞர் ஒருவரும், அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்ததாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு தெரிவித்திருந்தது.

கனடா பிரஜையான ரோய் சமாதானம் 2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொழும்பில் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் சித்திரவத்தைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும், 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டது.

சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றஞ்சுமத்தியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டிருந்த அறிக்கையில் அன்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அமெரிக்கா - கலிபோர்னியா நீதிமன்றத்திலேயே இந்த இரண்டு சிவில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

மேலும், தனது தந்தையான டி.ஏ.ராஜபக்சவின் பெயரில் அமைக்கப்பட்ட அருங்காட்சியக நிதியில் மோசடி இடம்பெற்றதாக கூறப்படும் வழக்கொன்றும் கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

அமெரிக்க பிரஜா உரிமை இரத்து...

இரட்டை பிரஜைவுரிமை கொண்டவர்களுக்கு இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் போட்டியிட முடியாது என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இலங்கை இரட்டை பிரஜைவுரிமை கொண்டிருந்த கோத்தபாய ராஜபக்ச, தனது அமெரிக்க பிரஜைவுரிமையை ரத்து செய்யும் ஆவணத்தை இந்த ஆண்டில் ஆரம்பத்தில் சமர்ப்பித்திருந்தார்.

இதன்படி, அமெரிக்க பிரஜை உரிமையை ரத்து செய்யும் வகையில் கோத்தபாய ராஜபக்சவினால் விண்ணப்பிக்கப்பட்டிருந்த ஆவணத்திற்கு அமெரிக்கா கடந்த மே மாதம் 3ஆம் திகதி அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்காவிற்கான வெளிநாட்டு பிரஜைவுரிமை சேவை திணைக்களத்தின் முத்திரையுடன் அமெரிக்கா இந்த ஆவணத்தை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்க பிரஜைவுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - BBC - Tamil

2 comments:

  1. இவர்களின் வழக்குகலால் கோத்தாபாயாவுக்கு எந்த பிரச்சினையும் வரப்போவதில்லை.ஏனெனில்,அமெரிக்கா கூட கோத்தாவின் குடியுரிமையை ரத்து செய்து விட்டது.எனவே அவர் மீது அங்கே வழக்கு போடவும் முடியாது.இப்போது கோத்தா citizen of Sri Lanka.so,மேற் குறிப்பிட்ட எந்த நபரின் வழக்காலும் கோத்தாவின் ஒரு மயிரை கூட பிடுங்க முடியாது.

    ReplyDelete
  2. saho rizard, ungal pin ooddalgal anaithaium nan virumbi parppavan ,kotha meethu ungalukku irukkum aatharavai thavirtu kollungal,ina vaathathai muthalil inku arimugam seithavanai aatharikka vendam.pls

    ReplyDelete

Powered by Blogger.