Header Ads



பௌத்த வாக்குகளை முழுமையாக வேட்டையாடுவதற்காக, இனவாத அரசியலை கையிலெடுக்ககூடும்...!

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவையே ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணி கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியல் களத்தில் ஜனாதிபதி தேர்தலானது முன்கூட்டியே சூடுபிடித்துள்ளது.

இரு முனைப்போட்டிக்கு பதிலாக இம்முறை மும்முனைப்போட்டியே நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்தவகையில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச பெயரிடப்பட்டுள்ளார்.

சிங்கள, பௌத்த வாக்குகளை முழுமையாக வேட்டையாடுவதற்காக அவர்கள் இனவாத அரசியலை கையிலெடுக்ககூடும்.

ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையின மக்களே தீர்மானிக்கும் சக்தி என்பதால் நாம் அனைவரும் விழிப்பாகவும், பொறுப்புணர்வுடனும் செயற்படவேண்டும்.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் பொதுவேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டார்.

ஆனால், அந்த பயணம் நீடிக்கவில்லை.

எனவேதான் ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த, மக்களால் கோரப்படும் வேட்பாளரை இந்த தடவை களமிறக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

இன, மத, மொழி, குல பேதங்களுக்கு அப்பால் அனைத்து மக்களுக்கும் தான் சிறப்பாக சேவைகள் வழங்கக்கூடிய அரசியல்வாதி என்பதை சஜித் பிரேமதாச செயற்பாடுகள்மூலம் நிரூபித்துள்ளார்.

மக்கள் கோரிக்கைக்கு செவிமடுத்து சஜித்தை களமிறக்கினால் வெற்றியை நோக்கி பயணிக்ககூடியதாக இருக்கும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.