August 18, 2019

பந்தயத்திற்கு தயாராகும், இரண்டாவது குதிரை:

ஜனாதிபதி வேட்பாளராக தோழர் அனுரவின் பெயர் இன்று -18- அறிவிக்கப்படும் வரை அவர்தான் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான புதிய அணியின் வேட்பாளர் என்று பலருக்கு தெரிந்திருக்கவில்லை.
ஏனென்றால் முன்னணிக்குள் வேறு பல பெயர்களும் முன்னர் அடிபட்டன.
காலி முகத்திடலில் அறிவிப்பு வெளியாகும் என்றதும் எனது மனதுக்குள் கிடந்த சஞ்சலமெல்லாம் மஹிந்த தரப்பு ஒரு முறை மே தினத்தன்று காலி முகத்திடலை மக்களால் நிரப்பியது போன்று மக்கள் விடுதலை முன்னணியால் செய்ய முடியுமா என்பதே!
அது இன்று முடிந்திருக்கிறது.
சாப்பாட்டுப்பார்சலுக்கும், சாராயத்திற்கும் பஸ்களில் ஏற்றி வந்து இறக்கப்படும் பெருந்தேசியவாத கட்சிகளின் சனத்திற்கும் மக்கள் விடுதலை முன்னணியின் சனத்திரளுக்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு.
மக்கள் விடுதலை முன்னணி ( JVP) ஆதரவாளர்கள் அற்ப சலுகைகளுக்காக அள்ளுண்டு போகிறவர்கள் அல்ல. அவர்கள் ஒரு கொள்கையின் பின்னால் திரள்கிற கூட்டம்.
ஒரு கொள்கைக்காக காலி முகத்திடலை நிரப்பும் அளவு கூட்டம் சேர்ந்திருப்பது இலங்கையினை பொறுத்த மட்டில் வியப்பாகவே இருக்கிறது.
இந்த சனத்திரளின் பிரதிபலிப்பு வாக்களிப்பில் இருக்குமா என்பது ஜேவிபி யின் தேர்தல் வரலாறு நெடுகிலும் கேட்கப்படும் கேள்வியே! அதற்கு கடந்த காலங்களில் கிடைத்த பதில்களும் ஏமாற்றங்களே!
ஹிங்குராகொடை , கிராந்துருக்கோட்டை, மஹியங்கனை, உஹனை தொடக்கம் ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி என தலை நகர் வரை வந்திருந்த மக்களுள் கை தவறிப்போன பிள்ளைகளை பற்றி வந்த அறிவிப்புகள் மேற்சொன்ன ஊர்களையும் உச்சரித்ததை அவதானிக்கும் போது நாட்டின் நாலா புறங்களிலும் இருத்து பெருந்திரளான மக்கள் இன்றைய கூட்டத்திற்கு வந்திருக்கிறார்கள்.
கடந்த முறை நல்லாட்சி வேட்பாளரை வெளிப்படையாக ஆதரிக்காத போதும் மஹிந்தவை பகிரங்கமாக எதிர்க்கும் வேலையினை ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி செய்தது.
அதனாற்தான் நல்லாட்சி தடம் மாறிய போது அதற்கான கூட்டுப்பொறுப்பினை ஏற்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலையிலிருந்து அதனால் தப்ப முடிந்தது.
இந்த debacle நிலைமையினை ஓரளவு அனுமானித்தே அப்போது நல்லாட்சி மேடையில் ஜேவிபி அமர்வதை தவிர்த்தது.
இப்போது நல்லாட்சி மீது நம்பிக்கையிழந்து மக்கள் நலிவடைந்து போய் காணப்படும் இந்த சூழலில் தேர்தல் ஒன்றை தீவிரமாக கோரி நின்ற அணிகளில் மொட்டும், மணியும் பிரதானமானவை.
அவை இரண்டுமே தமது பந்தயக்குதிரைகளையும் முந்திக்கொண்டு கட்டியுள்ளன.
ஐதேக தமது வேட்பாளரை தெரிவு செய்வதில் நிகழ்த்தும் இழுபறியே அதனது முடிவை தெளிவாக கட்டியங்கூற போதுமானது.
சுதந்திரக்கட்சியிலிருந்தும் ஒரு வேட்பாளர் வருவாரா என்ற கேள்வி நாளுக்கு நாள் நலிந்து செல்கிறது.
பெருந்தேசியவாதத்தின் அலை வெகுவாக எழும்பியிருக்கிற இந்த சூழலில் கோட்டா அணிக்கு செல்ல வேண்டிய பெரும்பான்மை சமூகத்தின் திரள் வாக்குகள் திடமாக அதிகரித்து செல்வதை பலரோடு உரையாடியதில் உணரமுடிகிறது.
நல்லாட்சியில் வெறுப்படைந்த வேறு வழியற்ற கோட்டாவை விரும்பாத மக்களதொகையொன்று அனுரவிற்கு வாக்களிக்கும் வாயப்புகள் உண்டு.
அது தவிர ஜேவிபி இற்கு கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் கிடைத்த சுமார் ஏழரை லட்சம் வாக்குகளும் இன்னும் சற்றுப்பெருக வாய்ப்புகள் உண்டு.
அனுர களனி பல்கலைக்கழக பட்டதாரி. ஆங்கிலத்தை முறையாக கற்கவேண்டும் என்ற ஆர்வத்தில் கேகாலையில் உள்ள ஒரு ஆசிரியரிடம் பிரத்தியேகமாக சென்று கற்றுத்தேர்ந்தவர்.
தனிப்பட்ட வாழ்விலும் பொது வாழ்விலும் எளிமையானவர், நேர்மையானவர்.
இந்த நாட்டின் ஜனாதிபதி ஆகக்குறைந்தது ஒரு பட்டதாரியாக இருக்கவேண்டும். வெளிநாடுகளுக்கு சென்றால் பார்த்தாவது ஆங்கிலத்தை சரியாக வாசிக்க கூடியவராக இருக்கவேண்டும் என்பது எனது குறைந்த எதிர்பார்ப்பு.
அதற்கெல்லாம் மேலாக நல்ல பண்புகளை கொண்டவராக தேசத்தையும் அதன் மக்களையும் பாகுபாடின்றி நேசிக்க கூடியவராகவும் இருக்கவேண்டும்.
தேசத்தின் முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணிக்க கூடியவராக திகழ வேண்டும்.
இந்த பொருத்தங்கள் இப்போதைக்கு அனுரவிடம் இருக்கிறது, வேட்பு மனுக்கள் இறுதியாகும் போது கூட அவை அனுரவிடம் மாத்திரமே இருக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படிவரும் போது என்னால் எப்படி வாக்குச்சீட்டை குறுக்கே கீறிவிட்டு வரமுடியும்?

mujeeb ibrahim

4 கருத்துரைகள்:

We need change.we must give a chance to jvp.good or bad we must give at least one chance to jvp to rule this country.both unp slfp.slpp destroyed this country over 70 years.

Dear friends we will support jvp this time why no curuption this good for the future srilanka

We are definitely with JVP or SDP

Post a comment