Header Ads



சஜித்தை பின்தள்ள, ரணிலின் புதிய தந்திரம் - பின்வாங்கினார் கரு

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முடிவெடுக்க ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழுவையும் – செயற்குழுவையும் ஒரே நேரத்தில் கூட்டவுள்ளார் அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க.

வரும் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை இந்த கூட்டம் நடக்கவுள்ளது. 17 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கும் முடிவுகள் இந்த கட்சிக் கூட்டத்தில் பேசப்படவுள்ளது.

தம்மை ஜனாதிபதி வேட்பாளராக்கி சஜித்தை பிரதமர் வேட்பாளராக நியமிக்கலாமென கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலருடன் ஆலோசனை நடத்தியுள்ளார் ரணில். கரு ஜெயசூரியாவின் பெயர் சிபாரிசு செய்யப்பட்ட போதும் இப்போதுள்ள சர்ச்சை நிலைமையில் வேட்பாளராக வருவதற்கு அவர் தயங்குவதாக தெரியவந்துள்ளது.

ரணிலின் வியூகம் !
இதேவேளை ரணிலுக்கு நெருக்கமான சிலர் நேற்றிரவு கூடி சஜித்துக்கு கட்சிக்குள் இருக்கும் ஆதரவு குறித்து ஆராய்ந்துள்ளனர். 29 எம் பிக்கள் சஜித்துக்கு நேரடி ஆதரவை வழங்குவது இதன்போது தெரியவந்துள்ளது.

இதனால் பாராளுமன்றக் குழுவும் செயற்குழுவும் ஒரே நேரத்தில் கூடும்போது சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதா என்பது குறித்து பகிரங்க வாக்கெடுப்பை நடத்த பிரதமர் ரணில் தீர்மானித்துள்ளார்.

இரகசிய வாக்கெடுப்பு நடத்தாமல் பகிரங்க வாக்கெடுப்பை நடத்தினால் ரணிலால் செயற்குழுவுக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் ரணிலின் நிலைப்பாட்டுக்கே ஆதரவளிப்பார்களென ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வேட்புமனு பெற ரணிலிடமே செல்ல வேண்டும் என்பதால் பெரும்பாலான எம் பிக்களும் பகிரங்க வாக்கெடுப்பில் ரணிலுக்கு ஆதரவாகவே இருப்பார்களென அந்த வட்டாரங்கள் மேலும் கூறின. TN

No comments

Powered by Blogger.