Header Ads



மாகாணத் தேர்தல் தொடர்பான உச்சநீதிமன்ற பொருள்கோடல் அமர்வில் மு.கா. ஆஜராகும் - நிஸாம் காரியப்பர்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தைக் கோரி ஜனாதிபதி தாக்கல் செய்துள்ள பொருள்கோடல் மனு மீதான விசாரணை அமர்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் சட்டத்தரணிகள் ஆஜராகுவர் என்று அக்கட்சியின் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலை பழைய விகிதாசார முறைப்படி நடத்துவதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆட்சேபனை கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் பொருள்கோடல் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறித்து கேட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

"மாகாண சபைத் தேர்தலை புதிய முறையில் நடத்துவதற்காக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டமூலத்தின் பிரகாரம் வகுக்கப்பட்ட எல்லை நிர்ணயம் சிறுபான்மையினருக்கு பாதிப்பானது என்பதால் மீள் எல்லை நிர்ணயம் செய்வதற்கென பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்ட உபகுழுவானது இன்னும் மீளமைக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. இதன் காரணமாக மாகாண சபைத் தேர்தல் தாமதமடைந்து செல்கிறது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை ஜனாதிபதி கோரியிருக்கிறார். அது தொடர்பிலான மனு எதிர்வரும் 23ஆம் திகதி உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கிறது.

இதன்போது முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் சட்டத்தரணிகள் ஆஜராகி எமது தரப்பு வாதங்களை முன்வைக்கவுள்ளோம். எம்மைப்பொறுத்தவரை புதிய தேர்தல் முறையின் கீழ் வகுக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கையை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. முஸ்லிம்களுக்கு பாதகமான அந்த எல்லை நிர்ணயம் சீர்செய்யப்படாத நிலையில் புதிய முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதை அனுமதிக்க மாட்டோம்.

எனினும் எல்லை நிர்ணய குளறுபடிகள் தீர்க்கப்படும் வரை பழைய விகிதாசார முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்குமாயின், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்முடிவுடன் இணங்கிச் செல்லும்" என்று மு.கா. செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் மேலும் தெரிவித்தார்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

No comments

Powered by Blogger.