Header Ads



பாம்பு தின்னும் ஊரில், நடுத்துண்டு நமக்கு..."

- Thavam -

ஜனாதிபதி தேர்தல் கூட்டமைப்பு அமைத்தல் தொடர்பில் அதிகம் பேசப்படும் இன்றைய நிலையில், ஏலவே SLPP தனது கூட்டு அணிகளோடு அல்லது கட்சிகளோடு ஒப்பந்தம் கைச்சாத்திட்டு தனது வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டாபாய ராஜபக்சவின் பெயரை இன்னும் இரு தினங்களில் அறிவிக்கப்போகிறது.
ஆனால், மறுபுறம் ஐக்கிய தேசியக்கட்சி தனது கூட்டு அணிகளோடு அல்லது கட்சிகளோடு ஒப்பந்தம் கைச்சாத்திடவிருந்த நிலையில், அதில் ஏற்பட்டிருக்கும் இழுபறி மற்றும் வேட்பாளரை அறிவித்தல் தொடர்பில் ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக, அவர்கள் இன்னும் ஒரு தீர்க்கமான கட்டத்தை அடையவில்லை என்பதை அவதானிக்கலாம்.
ஏன் இந்த கூட்டுக்கள் அவசியப்படுகின்றன? அவற்றின் அரசியல் தாக்கங்கள் என்ன? என்பதை சுருக்கமாக அலசிப்பார்ப்பது நமக்கு உபயோகமாக இருக்கும். அந்த வகையில் UNP மற்றும் SLFP யை பிரதான பாத்திரங்களாக கொண்டு ஒரு அலசல் இங்கு செய்யப்படுகிறது.
தனியாக இவ்விரு கட்சிகளும் போட்டியிட்டமையும் அவற்றின் தாக்கங்களும். கூட்டணியாக இவ்விரு கட்சிகளும் போட்டியிட்டமையும் அவற்றின் தாக்கங்களுமென ஒரு பார்வையாக அமைந்துள்ளது. இரு கட்சிகளும் கூட்டணியை நோக்கி நகர்ந்தமை எப்படி நிகழ்ந்திருக்கும் என்பதை கீழே தரப்பட்டுள்ள முடிவுகளை வைத்தே புரிந்துகொள்ளலாம்.
👉🏽1960 மார்ச் பொதுத்தேர்தலில் SLFP தனியாக போட்டியிட்டு தோல்வி
👉🏽1960 ஜூலை பொதுத்தேர்தலில் SLFP தனியாக போட்டியிட்டு வெற்றி
👉🏽1965 இல் SLFP தனியாக போட்டியிட்டு தோல்வி
👉🏽1970 இல் SLFP கூட்டணியாக (United Front) போட்டியிட்டு வெற்றி 
👉🏽1977 இல் SLFP கூட்டணி உடைவால் தனித்து போட்டியிட்டு படுதோல்வி
(1982 களில் சர்வஜன வாக்கெடுப்பு. தேர்தல் இல்லை)
👉🏽1989 இல் முதன்முதலாக UNP சௌமியமூர்த்தி தொண்டமானுடன் (CWC) கூட்டணி அமைத்து வெற்றி
👉🏽1994 இல் UNP (மு.காவை முறையாக கையாளாமல்) தனியாக போட்டியிட்டு தோல்வி
👉🏽2000 இல் SLFP கூட்டணியாக போட்டியிட்டு வெற்றி
👉🏽2001 இல் UNP கூட்டணியாக (UNF) போட்டியிட்டு வெற்றி 
👉🏽2004 SLFP கூட்டணியாக (UPFA) போட்டியிட்டு வெற்றி
1989 களுக்கு பின்னிருந்து 1999 வரையான (நிறைவேற்று அதிகார) ஜனாதிபதி தேர்தல்களில் - பாராளுமன்ற தேர்தல் கூட்டணிகளே முக்கியத்துவம் பெற்றன. அதனாலேயே, இங்கு பாராளுமன்ற தேர்தல் கூட்டணிகளை பற்றி கூறப்பட்டிருக்கின்றன. பாராளுமன்ற தேர்தல் கூட்டணிகளே பெரும்பாலும் ஜனாதிபதி தேர்தல்களுக்கும் முகங்கொடுத்து நின்றன.
ஆனால், 2005 யிலிருந்து இலங்கை அரசியலில் ஜனாதிபதி தேர்தல் கூட்டணிகளே முக்கியத்துவம் பெற்றன. அதற்கு காரணம் SLFP யில் அதன் ஸதாபக தினத்திலிருந்து பிரதான பாத்திரம் வகித்த பண்டாரநாயக குடும்பம் அரசியல் அரங்கிலிருந்து ஆதிக்கம் இழந்ததாகும். அந்த வகையில், 2005 யிற்கு பின்னர் ஜனாதிபதி தேர்தல் கூட்டணிகளே முக்கியத்துவம் பெற்றன எனலாம். அதனை நோக்குவோமாயின்;
👉🏽2005 இல் SLFP கூட்டணி (UPFA) ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றது
👉🏽2010 இல் SLFP கூட்டணி (UPFA) ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றது
👉🏽2010 இல் SLFP கூட்டணி (UPFA) பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது
👉🏽2015 இல் UNP கூட்டணி (NDF) ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றது
👉🏽2015 இல் UNP கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது
எனவே, தனித்து போட்டியிட்டு தேர்தல்களை வெல்வதிலுள்ள சிரமத்தை இந்த விபரங்களை வாசிக்கும் போது நாம் புரிந்துகொள்ளலாம். அதனால்தான் கூட்டணி அமைக்க ஆலாய்ப் பறக்கிறார்கள்.
எதிர்வரும் தேர்தலில் எந்த கூட்டணி வெல்லும் என்பது தெரியாது. SLPP யின் அணியில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவோடு இருந்த SLFP பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் இப்போது அங்கில்லை. மறுபுறம், ரத்னதேரர், விஜயதாச ராஜபக்ச போன்றவர்கள் UNP கூட்டணியோடு இல்லை.
மேலும், கடந்த தேர்தலில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் எடுத்த நிலைப்பாடுகளிலிருந்து மாறி, இம்முறை SLPP க்கு ஆதரவு செய்யும் சூழ்நிலை இன்றுவரை இல்லை. இதனால், சிறுபான்மையின் தீர்மானிக்கும் சக்தி எந்த பக்கம் சாயப்போகிறது என்று இன்னும் தெளிவுற தெரியவில்லை.
இந்நிலையில், கூட்டணியோ அல்லது தனித்தோ நாட்டிற்கும் மக்களுக்கும் பிரயோஜனமான கொள்கைகளை முன்வைத்தால் மக்கள் வாக்களிப்பர் என்ற நியாயபூர்வ அரசியல் எந்த தலமைகளிடமும் இல்லை. மறுபுறம், கொள்கையை பார்த்தே வாக்களிப்போம் என்ற அரசியல் நிலைப்பாடு மக்களிடமும் இல்லை.
நாம் என்னதான் செய்துவிட முடியும்; பாம்பு தின்னும் ஊரில் நடுத்துண்டு நமக்கு என்று பயணிப்பதை தவிர

1 comment:

  1. SLFP had a no contest pact with LSSP and CP during 1965 July election and won.
    The information given above is wrong.

    ReplyDelete

Powered by Blogger.