August 15, 2019

ஜாகிர் நாயக் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா..? மலேசியா என்ன செய்யப் போகிறது..??

ஜாகிர் நாயக். இந்தப் பெயர்தான் இன்று மலேசிய ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் அன்றாடம் இடம்பெறுகிறது. அதிலும் கடந்த இரு வாரங்களாக ஒட்டுமொத்த நாடும் இவரைப் பற்றித்தான் அதிகம் விவாதிக்கிறது.

பல்லின மக்கள் வாழக்கூடிய மலேசியாவில், ஒரு தனி மனிதரால், அதுவும் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரது பேச்சால் கொந்தளிப்பான சூழல் ஏற்படும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

தற்போது ஜாகிர் நாயக் நாடு கடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அவர் இனிமேலும் இங்கு தங்கி இருந்தால், மலேசிய நாட்டில் மத மற்றும் இன நல்லிணக்கத்துக்கு கேடு விளையும் என்பதே ஜாகிர் எதிர்ப்பாளர்களின் வாதம்.

யார் இந்த ஜாகிர் நாயக்... அவர் அப்படியென்ன பேசிவிட்டார்...?

இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருப்பவர் இந்த ஜாகிர். இவர் ஒரு மத போதகர். பண பரிமாற்றம் தொடர்பில் 115 மில்லியன் ரிங்கிட் வரை மோசடி செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டை இந்தியாவில் எதிர்நோக்கி உள்ளார் என மலேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மலேசியாவில் மதப் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட அவர் வந்ததாகக் கூறப்பட்டது. இந்தியாவில் அவர் சில குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவதாக தகவல் வெளியான பிறகு அவர் ஊடகங்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டார்.

ஜாகிர் கூறியதாக வெளியான கருத்துகள் குறித்து துவக்கத்தில் எந்தவித சலசலப்பும் எதிர்ப்பும் எழவில்லை. நாட்களின் போக்கில் நிலைமை மாறியது.

இந்நிலையில் அண்மையில் கிளந்தான் என்ற மாநிலத்தில் உரையாற்றியபோது அவர் குறிப்பிட்டதாக சில கருத்துகள் வெளியாகின. இது தொடர்பான காணொளிப் பதிவு வெளியானதும் சர்ச்சையும் வெடித்தது.

"மலேசியாவில் உள்ள இஸ்லாமியர்கள், இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சமூதாயத்தினரைவிட நூறு மடங்கு நன்றாக உள்ளனர். அதே வேளையில் மலேசியாவில் உள்ள இந்துக்களும் இந்தியர்களும் நம் நாட்டுப் பிரதமர் துன் மகாதீரை ஆதரிக்காமல் இந்தியப் பிரதமர் மோதியை ஆதரிக்கின்றனர்," என்று ஜாகிர் நாயக் தமது உரையில் குறிப்பிட்டார் என்பதே தற்போது எழுந்துள்ள சர்ச்சைக்கு மூலாதாரம்.

எந்த ஆய்வின் அடிப்படையில் அவர் இவ்வாறு கூறுகிறார் எனும் கேள்வி எழுந்துள்ளது. அவரது பேச்சு மத, இன நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்காதா? என்றும் எதிர்பார்ப்பாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஹாங்காங் விமான நிலையத்தில் போராட்டக்காரர்கள் போலீசுடன் மோதல்: பின்னணி என்ன?
இந்தியா போன்ற நட்பு நாட்டில் தேடப்படும் ஒரு நபரை இவ்வாறு சுதந்திரமாக சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேச அனுமதிப்பது சரிதானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஜாகிர் நாயக் விவகாரம் காரணமாக இந்தியா-மலேசியா இடையேயான நல்லுறவு பாதிக்கப்படலாம் என்றும் ஒரு தரப்பினர் கவலை தெரிவித்துள்ளனர்.

கேள்விகளுக்குப் பதில் அளித்த மலேசிய பிரதமர்

இந்தக் கேள்விகளுக்கு மலேசிய பிரதமர் டாக்டர் துன் மகாதீரே பதிலளித்துள்ளார். இந்தியாவில் ஜாகிர் நாயக்கின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

"ஜாகிர் நாயக்கை (இந்தியாவுக்கு) திருப்பி அனுப்ப முடியாது, ஏனெனில் அவர் அங்கு கொல்லப்படுவதற்கான அச்சுறுத்தல் உள்ளது. எனவே அவர் இங்கேதான் (மலேசியாவில்) இருப்பார்" என்று பிரதமர் மகாதீர் அண்மையில் திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.

அதே சமயம் ஜாகிர் நாயக்கால் மலேசிய அரசுக்கு சங்கடம் ஏற்பட்டுள்ளது என்பதையும் அவர் மறுக்கவில்லை.

"மலேசியாவில் பல்லின மக்கள் வாழும் சூழ்நிலையில், இன உறவுகள் மற்றும் பிற மதங்களைப் பற்றி தீவிர கருத்துகளை வெளிப்படுத்தும் எவரையும் இந்நாடு விரும்பவில்லை," என்று பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார்.

இந்தக் காரணத்திற்காக மலேசியா ஜாகிரை இங்கு வைத்திருக்க முடியாது என்று குறிப்பிட்ட அதே வேளையில், பல நாடுகள் ஜாகிரை வைத்திருக்க விரும்பாததால் அவரை வெளியேற்ற இயலவில்லை என்றும் கூறுகிறார்.

இதற்கிடையே தாம் கூறியதை சில இந்து மதக் குழுக்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளதாக ஜாகிர் நாயக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது எதிர்ப்பாளர்கள் தாம் கூறிய சில கருத்துகளை அரசியலாக்குவதாகவும், மலேசியர்கள் மத்தியில் நிலவும் மத ஒற்றுமையை அவர்கள்தான் சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.

"எனக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு குறியீடு கொண்ட எச்சரிக்கை (ரெட் அலர்ட்) எதையும் வெளியிடவில்லை. எனக்கு எதிராக எந்தவித ஆதாரமும் இல்லாத நிலையில், சில இந்துக் குழுக்கள் தான் மோதி அரசாங்கத்திடம் என்னை ஒப்படைக்க வேண்டும் என்கின்றன. என் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன," என்கிறார் ஜாகிர் நாயக்.

ஜாகிர் கருத்தால் கொதி நிலையை எட்டிப் பிடித்த விவகாரம்

இத்தனை களேபரங்களுக்கு மத்தியிலும் தனது கருத்துகளை ஆணித்தரமாக தெரிவித்து வருகிறார் தற்போது மலேசியாவின் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ள ஜாகிர் நாயக்.

மேலும், தாம் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றால், மலேசியாவை பூர்வீகமாகக் கொண்டிராத சீனர்களும் இங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அவர் கூறியதாக மற்றொரு செய்தி ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

மலேசியாவுக்கு தாம் விருந்தினராக வருவதற்கு முன்பே சீனர்களும் இந்தியர்களும் அங்கு வந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ள ஜாகிர், புதிய விருந்தினரான தாம் வெளியேற வேண்டும் என சில தரப்பினர் விரும்புகிறார்கள் எனில், பழைய விருந்தினர்களும் திரும்பிச் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல் வெளியானதும் தான் இந்த விவகாரம் கொதிநிலையை எட்டிப் பிடித்தது.

மலேசியா, இஸ்லாமிய நாடாக முழுமையாக மாறிய பிறகே சீனர்களும் இந்தியர்களும் வந்து சேர்ந்ததாக ஜாகிர் சுட்டிக் காட்டியுள்ளார்.

"இன, மத, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டே இன்றைய மலேசியா கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படைக் கூறுகளையே தகர்த்தெறியும் வகையில் ஜாகிர் செயல்பட்டது தான் பிரச்சனை இந்த அளவிற்கு விஸ்வரூபம் எடுக்க காரணம்," என்கிறார் அரசியல் ஆய்வாளர் முத்தரசன்.

மலேசிய அரசின் நிலைப்பாடு என்ன?

இண்டர்போல் எனப்படும் அனைத்துலகக் காவல் துறை ஜாகிர் நாயக்கை இன்று வரை சிவப்பு எச்சரிக்கைப் பட்டியலில் சேர்க்கவில்லை என்று கடந்த ஜூலை மாதமே சுட்டிக்காட்டி உள்ளார் மலேசிய உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின்.

ஐக்கிய நாட்டு சபையின் பாதுகாப்பு மன்றத்தின் தீர்மானங்களின்படி ஜாகிர் நாயக் இன்னும் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகளின் பட்டியலிலும் சேர்க்கப்படவில்லை என்றும் அவர் அப்போது கூறியிருந்தார்.

ஜாகிர் நாயக்கிற்கு எந்தவித சிறப்புச் சலுகைகளும் அளிக்கப்படவில்லை என்றும், அவர் மலேசியாவிற்கு சட்டப்பூர்வமாகவே வந்தார் என்றும், சட்டபூர்வமாகவே மலேசியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று வந்தார் என்றும் மொகிதின் யாசின் தெளிவுபடுத்தியிருந்தார்.

என்ன தான் ஜாகிருக்கு ஆதரவாக மலேசிய பிரதமரும் உள்துறை அமைச்சரும் இவ்வாறு தெரிவித்திருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் அவர்களது முடிவு மாறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். BBC

2 கருத்துரைகள்:

May Almighty Allah Give Protection to Dr Zakir Naiyak

Post a Comment