Header Ads



இன்றைய சந்திப்புக்குப் பின்னர், முக்கியமான அறிவிப்புகள் வெளியாகலாம்

முக்கியமான அரசியல் முடிவுகளை எடுப்பதற்காக ஆளுந்தரப்பு பாராளுமன்ற குழுவுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (09) அவசர சந்திப்பொன்றை நடத்துகிறார்.இந்தச் சந்திப்பில் எதிர்கால அரசியல் முன்னெடுப்புகள் குறித்து ஆராய்ந்து தீர்க்கமான முடிவுகள் எட்டப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது. 

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியை அமைப்பது தொடர்பில் இதுவரை இணக்கம் தெரிவித்துள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் இணக்கப்பாடுகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆராயப்படவுள்ளது.  

பங்காளிக் கட்சித் தலைவர்களுடன் நேற்றிரவு முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவர்களுடன் எட்டப்பட்ட இணக்கம் குறித்து இன்று ஆளுந்தரப்பு பாராளுமன்றக் குழுவுடன் விரிவாகக் கலந்துரையாடுவாரென அரசியல் வட்டாரங்கள் கூறின. 

எதிர்வரும் தேர்தல்களில் உறுதியான ஓர் அரசியல் கூட்டணியை அமைப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டிருக்கும் நிலையில், இவ்விடயத்தில் சகல தரப்பினரையும் அரவணைத்துச் செல்வதற்கான பொறிமுறையை உருவாக்குவதுபற்றி விரிவாகக் கலந்துரையாடப்படுகிறது. முரண்பாடுகளைக் களைந்து அனைவரையும் ஒரே அணியில் ஒன்றிணைக்கும் முயற்சியில் கூடுதல் கவனம் செலுத்தப் படுமெனவும் அரசியல் வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டன. 

இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்குமிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தனிப்பட்ட சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் பற்றியும் இன்றைய பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் பிரதமர் விளக்கவிருப்பதாகவும் தெரியவருகிறது. 

ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் விருப்பத்திற்கமையவும் நாட்டின் தற்போதைய நிலவரத்தைக் கருத்திற்கொண்டும் பிரதமரும் அமைச்சர் சஜித் பிரேமதாசவும் மனம் விட்டுப் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இருவருக்குமிடையில் என்ன விடயங்கள் ஆராயப்பட்டன என்பதைப் பற்றிய முழுமையான தகவல்கள் இன்றைய கூட்டத்திற்குப் பின்னர் தெரிய வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  

கட்சியின் கட்டுக்கோப்பையும் நாட்டின் எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு இரண்டு தலைவர்களும் நெகிழ்வுப் போக்குடன் பயணிக்க பரஸ்பரம் கரிசனை கொண்டிருப்பதாகவும் ஐ.தே.க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் முதற்கொண்டு ஏனைய தேர்தல்கள் அனைத்திலும் ஐக்கிய தேசிய கட்சியின் தனித்துவத்தையும் கட்டுக்கோப்பையும் சிதைவுறச் செய்யாது, இணக்கத்துடன் செயற்படக் கூடிய சகல தரப்பினரையும் இணைத்துப் பயணிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

இந்தப் பின்னணியிலேயே பிரதமரும் அமைச்சர் சஜித் பிரேமதாசவும் தனியாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய அரசியல் நகர்வுக்கு வழிவகுத்திருப்பதாக அந்த வட்டாரங்கள் மூலம் மேலும் தெரியவருகிறது. 

இந்தச் சூழலில், இன்றைய சந்திப்புக்குப் பின்னர் முக்கியமான அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 

எம்.ஏ.எம். நிலாம் 

No comments

Powered by Blogger.