Header Ads



ஜனாதிபதி வேட்பாளரை மக்களுக்கு, அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி - கபீர்

தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்து மக்களுக்கு அறிவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் இணக்கப்பாட்டுடன் விரைவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் இன்று (12) விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்துக்குத் தெரிவான மஹிந்த ராஜபக்ஸ, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்துக்கொண்டே, பொதுஜன பெரமுன என்ற பெயரில் கட்சியொன்றை ஸ்தாபித்து அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றமை கட்சியின் யாப்பை மீறும் செயல் என கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார்.

அத்தகைய ஒருவர் நாட்டின் சட்டவாட்சி​யை பாதுகாப்பார் என எவ்வாறு நம்புவது என அவர் அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் பிரதிவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள அமெரிக்கப் பிரஜையான தனது சகோதரரை மஹிந்த ராஜபக்ஸ, தமது புதிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தமையானது நாட்டின் சட்டத்திற்கு முரணானதும் பொதுமக்களைத் தவறான வழியில் இட்டுச் செல்லும் நடவடிக்கையும் என கபீர் ஹஷீம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாய்நாட்டை நேசிக்கும் ஜனநாயகத்தை மதிக்கும் நீதிமன்றத்தினால் அல்லது மக்களால் குற்றஞ்சுமத்தப்படாத வேட்பாளரையே ஐக்கிய தேசியக் கட்சி அறிவிக்கும் எனவும் அவரது தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த வேட்பாளர், அனைத்துப் பிரஜைகளுக்கும் மதிப்பளிக்கும் அனைத்து இனங்கள், மதங்களுக்கு அங்கீகாரமளிக்கும் தலைவர் எனவும் அவர் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய எதிர்கால சந்ததியினரை நவீன உலகிற்கு கொண்டுசெல்லக்கூடிய வறிய மக்களின் துன்பத்தை உணரக்கூடிய கல்வியறிவுடைய சட்டத்தை மதிக்கும் ஒருவராக இருப்பார் என கபீர் ஹஷீம் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.