Header Ads



அரச அலுவலர்களே, ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்காளிக்க தயாராகுங்கள்


அரச அலுவலர்களுக்கான முக்கிய அறிவித்தல் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 07 ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்காளிக்க எதிர்ப்பார்க்கும் வாக்காளர்கள் அதற்கு தேவையான தகவல்களை தயார்படுத்தி வைத்துக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வாக்காளர்களுக்கு அறிவித்துள்ளது. 

தமக்குரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்க முடியாத அல்லது முடியாமற் போகக்கூடிய சாத்தியம் உள்ள அரச அலுவலர்கள் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்க முடியும் என அந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. 

தபால் மூல வாக்காளர்கள் தமது தபால் மூல வாக்களிப்பு விண்ணப்ப படிவத்தை எக்காரணங் கொண்டும் தாமதிக்காமல் பூர்த்தி செய்வதற்காக 2018 ஆம் ஆண்டின் தேருநர் இடாப்புக்களில் இருந்து நேர காலத்துடன் தகவல்களை பெற்று தயார்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. 

இதற்கான தகவல்களை, தற்போது கிராம அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தேருநர் இடாப்பு மீளாய்வு நடவடிக்கைகளின் போது வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்துடன் இணைந்து வழங்கப்பட்டுள்ள 2018 ஆம் ஆண்டின் குறித்த தகவல்கள் அடங்கிய பற்றுச் சீட்டில் காணப்படும் தகவல்களில் இருந்து அல்லது உங்களது கிராம அலுவலரிடம் அல்லது தமது வதிவிடத்திற்குரிய மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 

அதன்படி, நிர்வாக மாவட்டம், வாக்கெடுப்பு பிரிவின் பெயரும், எழுத்தும், வாக்கெடுப்பு மாவட்ட இலக்கம், கிராம அலுவலர் பிரிவு, வீதியின் அல்லது கிராமத்தின் பெயர், வாக்காளரின் முழுப்பெயர், தனது பெயருக்கு உரிய தொடரிலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம் ஆகிய தகவல்களை சேகரித்து வைத்துக் கொள்ளுமாறு தேர்தகல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.