Header Ads



மக்கள் கூட்டத்தைக் கண்டு அலறியடித்து, உணர்வுபூர்வமாக அதரவளிப்பது அறிவு பூர்வமானதல்ல


காலி முகத்திடலில் நடைபெற்ற பொது எதிரணியின் 2017 ஆம் ஆண்டு மே தினக் கூட்டம் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றது. ஏனெனில் எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் சுமார் 100,000 ஆதரவாளர்களை ஒன்று திரட்டி அரசுக்குச் சவால் விடுத்தனர். அதன் எதிரொலியாக 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தோ்தல்களில் ஆட்சியில் இருந்த அரசை அதிரவைக்கும் பாரிய வெற்றியைச் சுவீகரித்துக் கொண்டது பொது முன்னணி.

நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையிலான 58 நாள் மோதலின் வெற்றிப் பிரகடனத்தை 2018.12.18 அன்று ஐக்கிய தேசியக் கட்சி காலிமுகத்திடலில் சுமார் 120,000 ஆதாரவாளர்களுடன் உறுதிசெய்துகொண்டாலும் தொடர்ந்தும் மாகாண சபைத் தோ்தலை நடத்தாமல் ஒதுங்கியே நின்றது. ஏனெனில், காலி முகத்திடலை நிரப்பினாலும் கிராங்களில் வாக்குப் பெட்டிகளை நிரப்பும் பலம் அவர்களுக்கு இல்லை என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர்.

அநுர திஸாநாயக்கவை ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியும்  மக்கள் விடுதலை முன்னணி மற்றும் சிவில் அமைப்புக்களை முதன்மைப்படுத்திய மக்கள் அமைப்பு சுமார் 90,000 ஆதரவாளர்களைக் கொண்டு காலி முகத்திடலை நேற்றைய தினம் (2019.08.18 ) முன்றாவது தடவையாக, நிரப்பியுள்ளது. இந்த மக்கள் சக்திக்கு நாடாளாவியரீதியில் 10% (16 இலட்சம்) வாக்குப்பலம் இருப்பதை இலகுவில் மறுக்க முடியாது. அதாவது மக்கள் விடுதலை முன்னணியின் 5 இலட்ச வாக்குப்பலத்தை விட இரு மடங்கு அதிகரித்த பலத்தை இந்த மக்கள் ஒன்றுகூடல் காட்டி நிற்கின்றது. அதேபோல நாட்டில் கட்சி அரசியலுக்கு அப்பால் தேசிய நலன் கருதி செயற்படும் 30% மிதப்பு வாக்காளர்களில் பெரும்பான்மையைக் கவரும் வகையில் வளர்ந்து வரும் ஒரு சக்தியே இம் மக்கள் சக்தி அமைப்பு என்பதையும் இது குறித்து நிற்கின்றது.

ஆகவே இந்தப்பின்னணில்,  சுமார் 35% பலத்தை பொது எதிரணியின் வேட்பாளரான கோட்டாபயவும் 30% வீத பலத்தை ஐக்கிய தேசியக்கட்சி உள்ளிட்ட அணியினரும், 10% பலத்தை தேசிய மக்கள் இயக்க அபேட்சகர் அநுர திஸாநாயக்கவும், 5% பலத்தை சுதந்திரக் கட்சினரும், மிகுதி 5% வாக்குகளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பிராந்தியக் கட்சிகளும் கொண்டுள்ள நிலையில், மிகுதி 15% மிதப்பு வாக்காளர்களாகவே உள்ளனர்.

1982 தொடக்கம் 7 ஜனாதிபதித் தோ்தல்களைக் கடந்த இலங்கையர்களாகிய நாம் அறிந்த விடயம் யாதெனில் ஜனாதிபதித் தோ்தல் என்பது இரு தரப்புத் தோ்தலேயன்றி ஒரு பல்முனைத் தோ்தலல்ல. பிரதான இருகட்சிகளும் பலமான வேட்பாளர்களைக் களமிறக்குமிடத்து மூன்றாவது பலம்மிக்க வேட்பாளர் 5% வாக்குகளுக்குள் மட்டுப்படுத்தப்படுவார். அதாவது ஒரு வேட்பாளரினால் வெற்றி இலக்கை அடைய முடியாது என்று கருதுமிடத்துத் தமது வாக்கு நிராகரிக்கப்பட வேண்டும் என்று விரும்புபவர்களும் குறித்த கட்சி ஆதரவாளர்களும் தவிர்ந்த எவரும் குறித்த மூன்றாம் தரப்புக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

இலங்கை தோ்தல் வரலாற்றில் மூன்றாம் தரப்பினராகப் போட்டியிட்ட மக்கள் விடுதலை முன்னணி தலைவர் ரோஹன விஜேவீர (1982) 4.19% வாக்குகளையும் இலங்கை மஹஜன கட்சி வேட்பாளரான ஒஸீ அபேகுணசேகர 4.63% வாக்குகளையுமே அதிகூடிய அளவில் பெற்றுள்ளனர். இந்தப் பின்னணியில் அநுர திஸாநாயக்கவினால் மூன்றாம் நிலை வேட்பாளராக 10% இலக்கை அடைவதும் சவால்மிக்கதாகும். 

மாறாக, ஐக்கிய தேசியக் கட்சி, மற்றும் பிரதான கட்சிகளுடன் இணைந்த ஒரு பொது வேட்பாளராக ஒருவர் களமிறங்குமிடத்து ஒரு தேசிய ஜனநாயகத் தலைமைத்துவத்தை வெற்றிபெறச் செய்வது சிக்கல்மிக்கதாக அமையாது.

1977 ஆம் ஆண்டு பொதுத் தோ்தலுக்கான அப்போதைய பிரதமர் சிறிமாவோ அம்மையாரின் முதலாவது கூட்டத்தில் கண்டி நகரம் மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தது. ஆனால் அவர் வெறுமனே 8 ஆசனங்களையே பெற்றார். 2014.12.11 ஆம் திகதி அநுராதபுர நகரில் நடைபெற்ற அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முதலாவது ஜனாதிபதித் தோ்தல் கூட்டத்தில் சுமார் 2 இலட்சம் ஆதரவாளர்கள் கலந்து கொண்டதாக அரச ஊடகங்கள் அறிவித்தாலும் இறுதில் அவர் தோற்கடிக்கப்பட்டார்.

மக்கள் கூட்டத்தைக் கண்டு அலறியடித்துக்கொண்டு உணர்வுபூர்வமாக அதரவு வழங்குவது அறிவுபூர்வமான விடயமல்ல. 

வேட்பாளர்களின் தோ்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் ஆராயப்பட வேண்டும், குறித்த வேட்பாளர்களின் கடந்த காலப் பின்னணிகள் ஆராயப்பட வேண்டும், அவர்களது வெற்றிக்கான சாதகத்தன்மை ஆராயப்பட வேண்டும், ஏதும் தெளிவற்ற விடயங்கள் இருக்குமிடத்து அது தொடர்பான உடன்பாடுகள் செய்து கொள்ளப்பட வேண்டும். இந்தப் பின்னணியிலேயே எந்த வேட்பாளருக்கு வாக்களிப்பது என்று தீர்மானிக்க வேண்டும்.

ஆகவே, தேசிய ஜனநாயகத்துக்கும், மக்களாட்சிக்கும், சிறுபான்மை உரிமைகளுக்கும் எதிராகக் களமிரக்கப்பட்டுள்ள வேட்பாளரைத் தோற்கடிப்பதே 36 இலட்சம் சிறுபான்மை வாக்காளர்களின் உயரிய இலக்காக அமைய வேண்டும். அதனை மறந்து, இந்த சிறுபான்மை மக்கள் பல அணிகளாகப் பிரிந்து அவர் நல்லவர், இவர் நல்லவர் என்று “ஜய-வேவா” கோஷம் போட்டு ஒரு சிலரின் கட்சி மற்றும் தனிப்பட்ட அபிலாசைகளுக்காக ஒட்டுமொத்த சமூகத்தையே பலிக்கடாவாக்குவது அறிவுபூர்வமான ஒரு விடயமல்ல. 

மக்களுக்கு வழிகாட்டி, அவர்களை நெறிப்படுத்துவதே சமூகத்தலைமைகளின் கடமையாகும்.

வெறும் நியாய உணர்ச்சிகள் மட்டும் நமது நடைமுறைச் சாத்தியமான சிந்தனைகளைக் குழப்பிவிடக் கூடாது. 

-அபூ அய்மன்,-

3 comments:

  1. furkanhaj (AKP)Says:-சிந்தனை தெளிவுள்ள தரமான கட்டுரை.

    ReplyDelete
  2. But there is no assurance that history always repeat. Who knows, this time there could be a change.

    ReplyDelete
  3. well said, there's always be a first time for everything....

    ReplyDelete

Powered by Blogger.