Header Ads



கோட்டா பழைய கஞ்சி, அனுர பழைய சாதம் - எங்கள் வேட்பாளரை முழுநாடும் "யார் அவர்" என தேடுகிறது - மனோ

எங்கள் வேட்பாளரை இன்று முழு நாடும் ´´யார் அவர், யார் அவர், யார் அவர்´´ என தேடுகிறது. இதுவே, எங்கள் வெற்றிக்கான ராஜதந்திரம். இன்று கோட்டா பழைய கஞ்சி. அனுர பழைய சாதம். முழு நாட்டின் அவதானத்தையும் எம் பக்கம் நாம் இன்று திருப்பி உள்ளோம். உரிய வேளையில் எமது வெற்றி வேட்பாளரை நாம் அறிவிப்போம். ஆனால் அந்த அறிவிக்கும் வேளையை நாமே தீர்மானிப்போம். 

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர் கோட்டாவின் குடியுரிமை விவகாரம், ஒரு சட்ட விவகாரம். அதை அமெரிக்க அரசும், இலங்கை தேர்தல் ஆணையகமும், தேர்தல் கண்காணிப்பு குழுக்களும் பார்த்துக்கொள்ளட்டும். அந்த குடியுரிமை பிரச்சினையை கட்டிப்பிடித்துக் கொண்டும், தூக்கிப்பிடித்துக் கொண்டும், நாம் அரசியல் செய்ய முடியாது. அப்படி செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை என நேற்றிரவு இடம்பெற்ற சிங்கள மொழியிலான அரசியல் கலந்துரையாடல் நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் கூறினார். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உதய கம்மன்பில, இந்திக அனுருத்த, ஐக்கிய தேசிய கட்சியின் ஹெக்டர் அப்புஹாமி ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக் கொண்ட இந்த சிங்கள மொழியிலான விவாதத்தில் அமைச்சர் மனோ மேலும் கூறியதாவது, உருவாகிவரும் எங்களது ஜனநாயக தேசிய முன்னணிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான வித்தியாசம் என்ன தெரியுமா? அது புரிந்துகொள்ள மிகவும் இலகுவானது. ஆனால், அதை உங்களில் பலர் புரிந்துக்கொள்ள தவறுகிறீர்கள். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையில் இருப்போர் ஒரு குடும்ப அங்கத்தவர்கள். எமது ஜனநாயக தேசிய முன்னணி தலைமையில் இருப்போர் பல கட்சிகளின் அங்கத்தவர்கள். ஆகவே, உங்கள் தலைமை குடும்பமான ராஜபக்ஷ குடும்பத்தில் தான் ஒருவரை நீங்கள் வேட்பாளராக போட வேண்டும். போட்டும் உள்ளீர்கள். இனி வருங்காலத்தில் ஒருவேளை நீங்கள் வென்றால், பிரதமர் மற்றும் பிரபல அமைச்சர்கள் எல்லோருமே ராஜபக்ஷ குடும்ப அங்கத்தவர்கள் தான். இந்த குடும்பத்துக்கு வெளியே தகுதியானவரை தேடிபார்க்க உங்களால் முடியாது. அதுதான் உங்கள் ஜனநாயகம். 

ஆனால், நாங்கள் எங்களது ஜனநாயக தேசிய முன்னணியிலே, கட்சி அங்கத்தவர்களில் இருந்தே தகுதியானவரை நாம் தேடி நியமிக்கிறோம். இதுதான் எங்கள் ஜனநாயகம். குடும்பமா? கட்சியா? எங்கே ஜனநாயகம் உள்ளது என்பதை தேடிப்பாருங்கள். 

அதற்காக ஒரே குடும்பத்தில் இருந்து பலர் அதே கட்சிக்கு உள்ளே வருவதை நான் மறுக்கவில்லை. தென்னாசியாவில் இது வழமை. உலகிலும் பல நாடுகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்தோர் ஒரே கட்சியில் இருக்கிறார்கள். இந்த விடயமோ அல்லது உங்கள் வேட்பாளர் கோட்டாபயவின் இரட்டை குடியுரிமை பிரச்சினையையோ எனக்கு முக்கியமில்லை. 

ஒரே குடும்பம் என்பதால் தான் உங்களால் தாமதமில்லாமல் வேட்பாளரை அறிவிக்க முடிந்தது. இதே காரணத்தால் தான் நாம் இன்னமும் எமது வேட்பாளரை அறிவிக்கவில்லை. இது ஒரு ஜனநாயக தாமதம். இதை புரிந்துக் கொள்ளுங்கள். 

நான் பகிரங்கமாக உங்கள் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், மக்கள் விடுதலை முன்னணி வேட்பாளர் நண்பர் அனுர குமார திசாநாயக்கவிற்கும் வாழ்த்துக்களை ஏற்கனவே கூறியுள்ளேன். 

எனக்கு உங்கள் எவருடனும் தனிப்பட்ட விரோதம் கிடையாதே. நான் அரசியல் முரண்பாடுகளை உடம்பில், தலையில் ஏற்றிக்கொள்வது இல்லை. ஆகவே, மனப்பூர்வாக வாழ்த்துகிறேன். இது என் தனிப்பட்ட கலாச்சாரம். ஆனால், அரசியலில் நமது கட்சி இருக்கும் இடம் வேறு. அது என் அரசியல் கலாச்சாரம். 

எங்கள் வேட்பாளரை இன்று முழு நாடும் ´´யார் அவர், யார் அவர், யார் அவர்´´ என தேடுகிறது. இன்று கோட்டா பழைய கஞ்சி. அனுர பழைய சாதம். எமது வேட்பாளரை அறிந்துக்கொள்ள நாடு விரும்புகிறது. முழு நாட்டின் அவதானத்தையும் எம் பக்கம் நாம் இன்று திருப்பி உள்ளோம். உரிய வேளையில் எமது வெற்றி வேட்பாளரை நாம் அறிவிப்போம். ஆனால் அந்த அறிவிக்கும் வேளையை நாமே தீர்மானிப்போம். 

இங்கே இம்முறை வேட்பாளரை பெயரிடும் சந்தர்ப்பத்தை நாம் விரும்பி, ஐக்கிய தேசிய கட்சிக்கு வழங்கி உள்ளோம். 2010, 2015 வருடங்களில் வெளியில் இருந்து வேட்பாளர் வந்த காரணத்தால், இம்முறை ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளே இருந்து வேட்பாளர் வருவது மிகவும் நியாயமானது. 

இதை நானே முதலில் கூறினேன். ஆகவே ஐதேக பெயரிடும் வேட்பாளரை நாம், ஜனநாயக தேசிய முன்னணி தலைமை குழுவில் அங்கீகரிப்போம். இங்கு இப்போது ரணில், சஜித், கரு ஆகிய மூன்று பெயர்கள் பேசப்படுகின்றன. எவர் வந்தாலும் அவர் வெறும் வேட்பாளர் மட்டுமல்ல. அவர் எங்கள் டீம் லீடர். இங்கே டீம் என்ற தலைமைக்குழு முக்கியமானது. நாம் ரணில் ஆட்சிக்கு, சஜித் ஆட்சிக்கு, கரு ஆட்சிக்கு வித்திடவில்லை. எமக்கு தேவை சட்டத்தின் ஆட்சியே எனவும் அமைச்சர் மனோ கணேசன் கூறினார்.

2 comments:

  1. nallavar oruvarum kidaikamattarkal. ellarum kallankal.

    ReplyDelete
  2. No use to believe that X is batter than Y....

    What Srilanka need is to establish a mechanism to elect humanly politicians and to avoid Tugs, Thives and Racists to parliament and ruling body. Then public will have peaceful life by the will of True One God.

    ReplyDelete

Powered by Blogger.