August 16, 2019

முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் சஜித்திற்குகோ, கோத்தாவுக்கோ எப்படி வாக்களிப்பது...??

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் முன்னரே, ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய அறிவிப்புகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.    பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக, கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் யார் என்றும் சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்குமென்றும் அரசியல் அரங்கில், கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.   

தங்களது எதிர்பார்ப்புகள் எல்லாம், நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில், முஸ்லிம்கள் முழுமூச்சாக நின்று, ஆட்சிபீடமேற்றிய தற்போதைய அரசாங்கமானது, அந்த எதிர்பார்ப்புகளைத் திருப்திப்படுத்தும் விதத்தில், எந்தச் செயற்பாடுகளையும் முன்னெடுத்திருக்கவில்லை. இதை விடவும், அதிருப்தியையே அதிகமாகத் தந்திருக்கின்றது என்று கூறுவதே, சாலப் பொருத்தமாகும்.   தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு, ஒரு தீர்வை வழங்காமல், எவ்வாறு காலத்தைக் கடத்தியிருக்கின்றதோ, அதுபோலவே, இந்த நாட்டில், முஸ்லிம் சமூகம் எதிர்கொள்கின்ற நீண்டகால, சமகாலப் பிரச்சினைகள் எதற்கும் தீர்வைக் காணாமல், இவ்வரசாங்கம் தனது ஆட்சிக்காலத்தின் கடைசி நாள்களை, எண்ணிக் கொண்டிருக்கின்றது.  

2015ஆம் ஆண்டில், புதிய அரசாங்கத்தை நிறுவி, அதன்மூலம் ரணில் விக்கிரமசிங்கவின் ஒரு யுகாந்திரக் கனவையும் மைத்திரிபால சிறிசேனவின் திடீர் வேட்கையையும் வெற்றிபெறச் செய்த, முஸ்லிம்களின் சிவில், நிர்வாக, சமூக எதிர்பார்ப்புகளுக்கு அப்பால், தமக்கெதிரான இனவாதத்தை, மதவாதத்தைக் கட்டுப்படுத்தல் என்ற காரியத்தைக் கூட, மைத்திரி-ரணில் அரசாங்கம் செய்து காட்டாமல், மிகத் தெளிவாக ஏமாற்றி இருக்கின்றது.  ஆனால், இப்படிச் சொல்வதற்காக, கடந்த ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த ராஜபக்‌ஷவை ஆதரித்திருந்தால், அவர் முஸ்லிம்களின் அபிலாசைகளை நிறைவேற்றியிருப்பார் என்று யாராவது கருதினால், அதுவும் தவறாகும்.   

ஏனெனில், 2005 தொடக்கம் 2010 வரை, போரை மய்யமாகக் கொண்டு செயற்பட்ட மஹிந்த ஆட்சி, 2010-2015 ஆட்சிக்காலத்தில், உச்சாணிக் கொம்பில் நின்று ஆடியது.    அத்துடன், சும்மாவே ஆடுகின்ற இனவாதப் பேய்க்கு, அந்த ஆட்சிச் சூழலானது, கொட்டும் முழக்கமும் வாசித்திருந்தது என்பதை, நாம் இன்னும் மறந்து விடவில்லை.   ஆக மொத்தத்தில், இந்த அரசாங்கம், முஸ்லிம்களின் எதிர்பார்ப்புகளையோ தமது தேர்தல் வாக்குறுதிகளையோ, நிறைவேற்றவில்லை. அதேபோன்று, தேசிய மட்டத்திலும், எல்லா இனங்களைச் சேர்ந்த மக்களின் மனங்களை வெல்லும் விதத்தில், ஒரு வெற்றிகரமான அரசாங்கமாகச் செயற்படுவதற்குத் தவறியுள்ளது.  மத்திய வங்கி மோசடி, உட்கட்சி முரண்பாடுகள், அதிகாரப் போட்டி தொடக்கம் இனவாத மேலெழுச்சி தொட்டு, பயங்கரவாதத் தாக்குதல் வரை, இதற்கான காரணங்கள் மிகவும் வெளிப்படையானவை.  

ஆனாலும், அரசாங்கம் சோபிக்கவில்லை என்பதை, இக்காரணங்களால் பூசிமெழுக முடியாத நிலையே காணப்படுகிறது. எனவேதான், ஒன்பது வருடங்களுக்குப் பின்னர், மக்களுக்கு ஏற்படுகின்ற உணர்வு, இம்முறை நான்கு வருடங்களிலேயே துளிர்விடத் தொடங்கி இருக்கின்றது.   கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக, முன்னாள் இராணுவ வீரரும் பின்னர் பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்தவருமான கோட்டாபய ராஜபக்‌ஷவை, அக்கட்சி, பகிரங்கமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால், அரசியல் அரங்கில் ஏற்பட்ட அதிர்வு, இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்றே அனுமானிக்க முடிகின்றது.  

மறுபுறத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர், யாரென்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. சஜித் பிரேமதாஸ, கரு ஜயசூரிய போன்ற பலரின் பெயர்கள் பேசப்படுகின்றன.    இவர்களுக்குள் சஜித்தின் பெயர், உத்தியோகப்பற்றற்ற முறையில், கட்சிசார்ந்தவர்களால் அழுத்தமாக முன்மொழியப்பட்டு வருவதை, அவதானிக்க முடிகின்றது. எனவே, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, சஜித் நியமிக்கப்படுவதற்கான நிகழ்தகவுகள் அதிகமாகத் தெரிகின்றன.  

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றது என்பதே, மக்கள் மனங்களில் உள்ள கேள்வியாக இருக்கின்றது.  

இக்கட்சி, யாரை வேட்பாளராக அறிவிக்கப் போகின்றது? அல்லது, ஏனைய பெரும்பான்மைக் கட்சியில் யாராவது ஒருவருக்கு வாக்களிக்கப் போகின்றதா என்ற கேள்விகளுக்கு, இன்னும் விடை கிடைக்கவில்லை.  மஹிந்த தரப்பால், கோட்டாவுக்குப் புறம்பாக, வேறு சிலரும் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று முன்னர் அனுமானிக்கப்பட்டது. சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெறும் பொருட்டு, கோட்டாபய தவிர்ந்த வேறொருவர், களமிறக்கப்படலாம் என்று கருதியோரும் இருந்தனர். இப்போது அவரே ஜனாதிபதி வேட்பாளராகப் பிரேரிக்கப்பட்டுள்ளார்.  

அரசியலில் எதுவும் நடக்கலாம் என்ற அடிப்படையில், ராஜபக்‌ஷ குடும்பத்தின் உள்வீட்டு அரசியலால், வேட்பாளர் மாற்றப்படலாம் என்றாலும், அதற்கான வாய்ப்பு அரிதாகவே உள்ளது. எனவே, பொதுஜன பெரமுனவின் இப்போதைய வேட்பாளர், கோட்டாபய ராஜபக்‌ஷவே என்பதைக் கவனிக்க வேண்டும்.   இன்றைய நிலைவரப்படி, இறுதி யுத்தத்தில் ஏற்பட்ட அழிவுகளுக்காக, கோட்டாபயவைத் தமிழர்களும் இனவாதத்தை மேலெழும்ப விட்டார் என்ற சந்தேகத்தில் முஸ்லிம்களும் சற்று தூரவைத்தே நோக்குகின்றனர்.   

ஆனால், இதே காரணத்துக்காகச் சிங்களக் கடும்போக்கு வாக்குகளை, அவர் பெறுவார். அதுமட்டுமன்றி, தமிழர்களும் முஸ்லிம்களும் காலவோட்டத்தில், தமது நிலைப்பாடுகளை அவருக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளவும் கூடும்.   ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில், கடுமையான இழுபறி நிலவுகின்றது. இந்நிலையில், கட்சியின் தலைமைப் பதவியை விட்டுக் கொடுக்காத, மேற்றட்டு அரசியல்வாதியெனக் கருதப்படும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, என்ன முடிவெடுக்கப் போகின்றார், யாரை வேட்பாளராக நியமிக்கப் போகின்றார் என்பதிலேயே வெற்றி, தோல்வி தங்கியுள்ளது.  

ஒருவேளை, சஜித் பிரேமதாஸ அல்லது, அவர் போன்ற பரவலான மக்கள் ஆதரவுள்ள ஒருவரை, வேட்பாளராக அறிவித்தால் வெற்றியை எதிர்பார்க்க முடியும். குறைந்தபட்சம் பலமான போட்டியையோ அல்லது, கூட்டு அரசாங்கத்தையோ கனவு காணலாம்.    ஆனால், அறிவுரைகளை எல்லாம் தட்டிக் கழித்து, தனது விருப்பப்படி ரணில் ஏதாவது எடக்குமுடக்கான தீர்மானம் எடுத்து, மக்கள் விரும்பாத யாரையாவது களமிறக்கினால், ஐ.தே.க வெற்றியை நினைத்துப் பார்க்கத் தேவையில்லை என்ற நிலையே உள்ளது.   இந்த நிலையில், முஸ்லிம் மக்கள், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், எந்த வேட்பாளருக்கு வாக்களிக்கப் போகின்றோம் என்பதைச் சிந்தித்து, தீர்க்கமான முடிவை நோக்கி, நகர வேண்டிய காலமாக, இது காணப்படுகின்றது.   

வழக்கம் போல, பாதிப்புக் குறைந்த ‘பேய்’ போன்ற, ஆட்சிப் பின்புலத்தைக் கொண்டவரைத் தெரிவு செய்வது, எவ்வாறு என்ற கேள்வியே நம்முன்னுள்ளது.   இலங்கையில் ஆட்சி செய்கின்ற எல்லா அரசாங்கங்களும், பெருந்தேசியவாத சிந்தனையில் ஊறியவையாகவும் திரைமறைவில் சிறுபான்மையின விரோதப் போக்குகளுக்கு ஆசீர்வாதம் அளிப்பனவாகவுமே இருந்து வருகின்றன.    அரசியலில் பிரித்தாளும் தந்திரத்துக்கு மேலதிகமாக ஒன்றில், கடும்போக்கு இனவாதம் அன்றில், மென்போக்கு இனவாதமே ஆட்சியாளர்களைத் தற்காலத்தில் ஆட்டிப்படைத்து வைக்கின்றது.   

இதில் சிலர், இனவாதத்தை முகத்துக்கு நேரே தூக்கிப்பிடித்துக் கொண்டு, முஸ்லிம்களிடத்தில் வருகின்றனர்; இன்னும் சிலர், முகுதுக்குப் பின்னால் மறைத்து வைத்துக் கொண்டு, ஆணை கேட்டு வருகின்றனர் என்பது மட்டுமே வேறுபாடாகும்.   கோட்டாபய ராஜபக்‌ஷ, முஸ்லிம்களுக்கு நேரடியாக எந்தத் தீங்கும் இழைக்கவில்லை என்றே கூற வேண்டும். ஆனால், கடந்த ஆட்சியின் கடைசிக் காலத்தில், இனவாதம் முன்கையெடுத்த சந்தர்ப்பத்தில், பொது பலசேனா போன்ற அமைப்புகளுக்குப் பின்னால், கோட்டா போன்றோர், திரைமறைவு ஆதரவு அளிக்கின்றனர் என்ற சந்தேகம், முஸ்லிம்களுக்கு இருந்தது.   

மஹிந்தவோ, கோட்டாவோ அதிகாரத்தில் இல்லாத போதும், இனவாதம் தாண்டவமாடியது என்பதென்னவோ உண்மை என்றாலும், இனவாதத்தை வளர்ப்பதில், ராஜபக்‌ஷ குடும்பத்தின் முக்கிய சில உறுப்பினர்களின் வகிபாகம், குறித்த பரவலான சந்தேகங்களுக்கு வலுவூட்டியிருந்தன. ஆனால், இன்னும் தெளிவு கிடைக்கவில்லை. இந்தக் காரணத்துக்காகவே, முஸ்லிம்கள் கடந்த தேர்தலில், மஹிந்தவைத் தோற்கடிக்க முன்னின்றார்கள்.  
ஆனால், இந்த விடயத்தைத் தவிர்த்துப் பார்த்தால், மஹிந்த ஆட்சி, முஸ்லிம்களுக்கு நிறையவே நல்லவைகளைச் செய்திருக்கின்றது என்பதை மறைப்பதற்கில்லை.   

எனவே, ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன ஆகியோர், தத்தமது கட்சிகளின் வேட்பாளர்களாக, யார் யாரை நியமிக்கப் போகின்றார்கள் என்பதைப் பொறுத்தே, முஸ்லிம்களின் தீர்மானங்கள் அமையும்; அமையவும் வேண்டும்.   இப்போது காலவதியாக இருக்கின்ற மைத்திரி-ரணில் ஆட்சி, வெற்றிகரமான ஒன்றாக இருந்திருந்தால், அது முஸ்லிம்களின் மனங்களைக் குளிர வைத்திருக்குமென்றால், யாரை வேட்பாளராகப் போட்டாலும், வெற்றிபெற வாய்ப்பிருந்தது.   

ஆனால், கிடைத்த ஐந்து வருட ஆட்சி எனும் வாய்ப்பை, அரசாங்கம் தவறவிட்டதால், மைத்திரியோ ரணிலோ பலமானவர்களைத் தமது கட்சிகளின் வேட்பாளர்களாகக் களமிறக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இல்லாவிடின், முஸ்லிம்களின் வாக்குகளை எதிர்பார்க்க முடியாத சூழல் ஏற்படலாம்.  

எது எப்படியோ, இம்முறை முஸ்லிம்கள் தீர்க்கமான தீர்மானங்களையே எடுக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சொல்கின்றார், மக்கள் காங்கிரஸ் தலைவர் கூறுகின்றார், தேசிய காங்கிரஸ்  தலைவர் சொல்கின்றார் என்பதற்காகவோ அல்லது, அந்த அரசியல்வாதி ஆதரவளிக்கின்றார் என்ற காரணத்துக்காகவோ முட்டாள்தனமாக, எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவளிக்கும் முடிவை, முஸ்லிம் சமூகம் எடுக்கக் கூடாது.   எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைப்பதில் உள்ள ஆபத்துக் குறித்து சிந்திப்பதுடன், எந்த அரசியல்வாதியும் சொல்வதற்காக அல்லாமல், சுயபுத்தியைப் பயன்படுத்தி, சுயமாகச் சிந்தித்தே முஸ்லிம் பொது மகன் ஒவ்வொருவரும் முடிவெடுக்க வேண்டியது, காலத்தின் கடமையாகும்.    

அதைவிடுத்து, இதைச் செய்க!

இந்த அரசாங்கம், தனது கடைசி நாள்களை எண்ணிக் கொண்டிருக்கின்றது என்றால், முஸ்லிம் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், ஏனைய எம்.பிக்களின் பதவிக்காலமும் முடிவடையப் போகின்றது என்றுதான் அர்த்தமாகும்.   இப்படியான சூழலில், இப்போது முஸ்லிம் கட்சித் தலைவர்கள் மற்றுமுள்ள அரசியல்வாதிகள், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் பற்றிய கருத்துகளை, நேரிடையாகவும் சாடைமாடையாகவும் பேசத் தொடங்கி இருக்கின்றார்கள்.  

முதலில் இதை நிறுத்துங்கள்  

உண்மையில், எல்லாக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்த பின்னர், யாரை ஆதரிப்பது என்பது பற்றி, முஸ்லிம் அரசியல்வாதிகள் பேசலாம். இப்போது, அதுபற்றிப் பிரஸ்தாபிப்பது, காலம் முந்தியதாகும்.   அப்படியென்றால், என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்?   மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில், எல்லா முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆளும் தரப்பிலேயே இருக்கின்றார்கள். பல தடவைகள், இந்த ஆட்சியைக் காப்பாற்ற முன்னின்றிருக்கிறார்கள்.   

சமூகத்துக்காக இராஜினாமாச் செய்வதாகச் சொன்ன அமைச்சு, பிரதியமைச்சுப் பொறுப்புகளை, இப்போது மீண்டும் தவணை முறையில் மீளப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.    இத்தனை காலமும் இப்பதவிகளை வைத்துக் கொண்டு, ‘எதையும் சாதிக்க முடியவில்லை’ எனக் கூறியவர்கள், இப்போது அப்பதவிகளைப் பொறுப்பேற்று இருக்கின்றார்கள் என்றால், அதைப் பயன்படுத்தி, எதையாவது சமூகத்துக்குச் செய்யலாம் என்ற நம்பிக்கையிலேயே, அதை அவர்கள் செய்திருப்பதாக நியாயம் கற்பிக்கப்படுகின்றது.  

அது உண்மையென்றால், இவ்வளவு காலமும் தீர்க்கப்படாத முஸ்லிம்களின் பிரச்சினைகள், அபிலாசைகளில் ஒரு சிலதையாவது, இருக்கின்ற சில மாதங்களுக்குள் பெற்றுக் கொள்ள இப்பதவிகளை உபயோகிக்க வேண்டும்.   

 ​*வடக்கில் உள்ள முஸ்லிம்களின் காணி முரண்பாடு, மீள்குடியேற்ற விவகாரம்,  

 *கிழக்கு மாகாணத்தில், நீண்டகாலமாக தீர்வுகாணப்படாத பல்லாயிரக்கணக்கான காணிப் பிரச்சினை, 

 *மாயக்கல்லி மலைபோல, மதத்தின் பெயராலும் தொல்பொருளின் பெயராலும், முஸ்லிம்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுதல்,  

 *ஒலுவில் கடலரிப்புப் பிரச்சினை,  

 *திருமலையின் கரிமலையூற்று தொடங்கி மட்டக்களப்பு மாவட்டம் தொடக்கம் அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் வரை காணப்படும் விளைச்சல் நில உரிமைசார் இழுபறிகள்,  

 *அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட சுனாமி வீட்டுத்திட்டம் இன்னும் காடாகிக் கிடக்கின்றமை,  

 *இன விகிதாசாரப்படி முஸ்லிம்களுக்கு காணி கிடைக்க வழிவகுத்தல்....  

போன்ற பல்வேறு அபிலாசைகளில் ஒன்றையேனும் வென்றெடுப்பதற்கு, இப்பதவிகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதே மக்களின் பேரவா.   

அப்படிச் செய்தால், அடுத்த தேர்தலில், முஸ்லிம் மக்களின் முகங்களை வெட்கப்படாமல், நேரெதிராகப் பார்த்து, வாக்குக் கேட்க முடியும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.    - மொஹமட் பாதுஷா -

4 கருத்துரைகள்:

சென்றமுறையும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் ஒன்றும் தீர்க்கப்படாமல் தான் மைத்திரிக்கு வாக்களித்தோம். முஸ்லிம்கள் தாக்கப்பட்ட போது சஜித் ஒன்றும் வாய் திறக்கவில்லையே.

EZU EPPADI PONAALUM,R HAKEEM
ENNA POI SHOLLIAVAZU, SLMC YAANAI
KATCHIUDANEITHAAN,SHANGAMAM
AAHUM.
IRATHATHAAL KOODA URUZI
SHEIYALAM.

இனத்துவேசம் இல்லாத மங்கள சமரவீரத்தான் இந்த நேரத்தில் ஆட்சிக்கு பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர்.

நல்ல பல கருத்துகள் தந்திருக்கிறீர்கள். அதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வளவு தானா முஸ்லீம்களின் பிரச்சினைகள் என கேட்கத் தோன்றுகிறது. இலங்கையில் முஸ்லீம்கள் எதிர்நோக்கும் அடையாளப்படுத்தப்பட்ட வேறு பல பிரச்சினைகளையும் உள்ளடக்கி தேசிய ரீதியாக இதனை ஆய்வு செய்து எழுதுங்கள். இன்னும் வரவேற்பு பெறும்.

Post a Comment